வவுனி யாவில் மீண்டும் ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், மிரட்டல் தொடர்பான சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதால் அவை தொடர்பான புகார்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என வவுனியா பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை அறிவித்தனர். வவுனியா பகுதி எங்கும் பொலிஸார் வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கியில் இந்த அறிவிப்பை விடுத்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் வங்கி அதிகாரியும் ஊழியரும் கடத்தப்பட்டு கப்பம் கேட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால், வங்கிகளின் வேலைகளும் தடைப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பை விடுத்தனர்.
வவுனியாவில் சட்டம், ஒழுங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். யாருக்கும் கப்பம் கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு கப்பம் தருமாறு எவரும் மிரட்டினால் அது குறித்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவாருங்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. வவுனியாவில் மக்கள் பாதுகாப்புக் குழுக்களை நியமிக்கும் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் வவுனியாவில் கப்பம் கடத்தல் நிறுத்தப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.