“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.”- பல்கலைகழக மாணவர்களிடம் சாணக்கியன் கோரிக்கை !

“வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை வெளியிடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) இடம்பெற்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு  பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திடம் வலியுறுத்தினார் சாணக்கியன் ...

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்றைய நாளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நாங்கள் வரவேற்கின்றோம். விசேடமாக இந்த முன்மொழிவுகளுக்குள்ளே மேலும் ஒன்றிரண்டு விடயங்களையும் உள்ளடக்குமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

விசேடமாக இந்த 13 கோரிக்கைகளுக்குள்ளே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான எந்தவொரு விடயங்களும் இல்லாத காரணத்தினால், அந்த விடயங்களையும் முன்வைக்குமாறு அன்பான வேண்டுகோளினை இந்த நேரத்திலே முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை என்ற விடயத்தினையும் சொல்லி இருக்கின்றேன்.

இன்று சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக இருக்கட்டும், அதற்கு பின்னர் நடந்ததாக இருக்கட்டும், இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த நாட்டிற்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதிலளிக்காமல் விட்டாலும் எங்கள் நாட்டிற்கு ஒரு எதிர்காலம் இல்லை என்பதனையும் இந்த இடத்திலே நான் விசேடமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனியார் மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த முன்மொழிவுகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறும் இரா.சாணக்கியன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *