புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினரின் கட்டுப்பாட்டில்

puthu-hos.jpgபுலிகளின் பிடியிலிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நேற்றுக் காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடுமையான மோதல்களுக்கு மத்தியில் முன்னேறிய பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் கடந்த 3 தினங்களாக ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேணல் ரவிப்பிரிய ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வைத்தியசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு அரசாங்க வைத்தியசாலையை புலிகள் தமது பிரதான பாதுகாப்பு முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டமை வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் இருந்த உபகரணங்களையும் புலிகள் வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்திலும் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 37 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடிவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்பாவி பொதுமக்களை இந்த வைத்தியசாலையிலிருந்த கட்டில்களிலிருந்து அகற்றி காயமடைந்த புலிகளை அங்கு வைத்து சிகிச்சையளிக்க இந்த வைத்தியசாலையை புலிகள் பயன்படுத்தி வந்தனர். புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த படியால் அந்த வைத்தியசாலையை இராணுவத்தினர் கைப்பற்றாமல் இருப்பதற்காக படையினரை இலக்கு வைத்து இங்கிருந்து கடுமையான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டு வந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இராணுவத்தினர் தாக்கியதாக புலிகளும், அவர்களுடன் தொடர்புடைய சில அமைப்புகள் சர்வதேச கவனத்தை திசை திரும்பும் வகையில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். கடந்த மூன்று தினங்களாக தாக்குதல் நடத்திய படையினர் வைத்தியசாலைக்கு எதுவித பாரிய சேதம் ஏற்படாத வண்ணமே கைப்பற்றியுள்ளனர் என்று இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வடக்கு பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றர் பரப்பை நோக்கி முன்னேறிய 58வது படைப்பிரிவினர் சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு மதில்களையும் தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக படையினர் நடத்திவந்த கடுமையான தாக்குதல்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

puthu-hos.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *