களவாடப்படும் தமிழர் நிலங்கள் – வாய் பேச்சோடு நிற்கும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் !

இலங்கையில் பௌத்த – சிங்கள பேரினவாதம் ஏதொவொரு வகையில் தன்னுடைய ஆதிக்க கரங்களை சிறுபான்மை மக்கள் மீது அழுத்திபிடித்து்ககொண்டு தான்  இருக்கிறது என்பதை குருந்தூர் மலை மீது அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கைகள் மிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளன.

May be an image of 3 people and outdoors

இங்கு இரண்டு விதமான விடயங்கள் அலசப்பட வேண்டியவை.

01. குருந்தூர்மலை, திருகோணமலை, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை என பல இடங்களில் உள்ள தமிழர் வழிபாட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் இதற்கு எதிராக செயற்பட வேண்டியவர்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பதை தான் இங்கு நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் மட்டும் மழைக்காலத்து ஈசல்கள் போல போலித்தேசியம் பேசிவிட்டு காணாமலேயே போய்விடுகிறார்கள் இந்த தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள். ஜனாதிபதிக்கு அறிவுரை கூறுமளவுக்கு – எதிர்க்ட்சிகளை இணைத்து பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு தெளிவாக சட்டங்கள் தெரிந்த பல சட்டத்தரணிகள் வட-கிழக்கு தமிழ்தேசிய கட்சிகளில் அங்கத்தவர்களாயுள்ளனர். இருந்தும் என்ன பயன்..? தமிழர் நிலங்களில் தொடரும் இந்த நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பிரச்சினை பூதாகரமாக உள்ள போது மட்டும் மக்களோடு மக்களாக வந்து கொடி பிடித்து விட்டு சென்று விடுவதாக தான் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் நிலையும் காணப்படுகின்றது.

இதற்காக தான் இவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்பினோமா என மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் மக்களுக்காக – தமக்கு வாக்களித்த மக்களின் உரிமைக்காய் எந்த கஷ்டமும் பட்டதாக தெரியவில்லை. பட்டதும் இல்லை.

இந்த அரசியல்வாதிகள் பிரச்சினைகளை வளர்க்கவே விரும்புகின்றனர் .தமிழர் பகுதிகளில் இன முரண்பாடு தொடர்பான பிரச்சினைகள் எரிந்து கொண்டிருப்பதை இந்த தமிழ்தேசிய தலைவர்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்போது தானே இதை வைத்து – இந்த நிலத்தை மீட்டுத்தருவதாக கூறி ஓட்டு சேர்க்க முடியும்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அயோத்தியில் உள்ள மசூதியையும் – ராமர் கோயிலையும் வைத்து நூற்றாண்டை தொடரும் மதப்பிரச்சினையை எவ்வாறு அரசியல்வாதிகள் தூண்டி குளிர்காய்கிறார்களோ அதே போலத்தான் நம்மவர்களும் செய்கிறார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இந்த மனநிலையில் தான் தமிழ்தலைவர்கள் உள்ளார்கள் என்றால் உண்மையிலேயே இவர்கள் தூக்கி வீசப்பட வேண்டும். வீசப்பட வேண்டியவர்கள்.

02.இன்று விகாரை அமைப்பு நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுவரும் குருந்தூர் மலை பகுதியானது தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்ப்படிருந்தததுடன் அங்கு எந்த புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாது என நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பிருந்த நிலையில் சத்தமேயில்லாமல் அரச ஆதரவுடனும் – இராணுவ பாதுகாப்புடனும் விகாரை அமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்படியானால் நாட்டில் ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு சட்டம். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்..? சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டம்..?

இன்று அப்பகுதி இளைஞர்களும் பல பகுதிகளிலிரு்து சென்ற இளைஞர்களும் – மக்களும் கூடியதால் தற்காலிகமாகவிகாரை அமைப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிகம் தான் இது. விகாரை இன்னும் வளரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

அண்மையில் செய்தி ஒன்றைக்காண கிடைத்ததது. ‘ பதுளை வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்றதாக அந்த செய்தி நீண்டு கொண்டு சென்றது.

 

அது சரி இதற்கும் விகாரை அமைப்புக்கும் என்ன சம்பந்தம்..?

இந்த பொருளாதார நெருக்கடி – உணவுப்பற்றாக்குறை – எரிபொருள் நெருக்கடி என பல பிரச்சினைகள் உள்ள இந்த நாட்டில் இன ஒற்றுமையுடன் நாட்டின் இனங்களை இணைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய இந்த காலத்தில் கூட நாட்டின் அரசியல் தலைவர்களும் – மதத்தலைவர்களும் புதிய ஒரு அரசியல் பிரச்சினையை இந்த விகாரையை வைத்து முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை மேலும் முனைப்படைய செய்து கொண்டு தான் புலம்பெயர்ந்த தமிழர்களை அழைத்து பொருளாதாரத்தை மீட்க வழி தேடுகிறார்கள்.

இன மதப்பிரச்சினைகளை வைத்துக்ககொண்டுதான் நாட்டை முன்னேற்ற சிங்களவர்களுடன் தமிழர்களும் இணைய வேண்டும் என்கிறார்கள்.

இதே நிலை தொடருமாயின் இந்தியாவின் அயோத்தி எத்தனை உயிர்களை காவு வாங்கியதோ..? அதே போல இங்கேயும் மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

சிங்களவர்களுக்கும் – தமிழர்களுக்கும் ஏன் பிரச்சினை.? என்ன பிரச்சினை..? என்ற கோணத்தில் அணுகி இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வரை – இன ஒ்றறுமையை ஏற்படுத்த முன்வரும் வரை இந்த நாட்டுக்கு அந்த கௌதமபுத்தரால் கூட விடிவு கொடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.

Show More
Leave a Reply to Anpu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Anpu
    Anpu

    “இன ஒ்றறுமையை ஏற்படுத்த முன்வரும் வரை இந்த நாட்டுக்கு அந்த கௌதமபுத்தரால் கூட விடிவு கொடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.”
    “இந்த மனநிலையில் தான் தமிழ்தலைவர்கள் உள்ளார்கள் என்றால் உண்மையிலேயே இவர்கள் தூக்கி வீசப்பட வேண்டும். வீசப்பட வேண்டியவர்கள்.”

    Why there is a question mark about Tamil leadership? Is it applicable only for Tamil National politicians or both Tamil and Sinhala national or all Politicians.

    Reply