வன்னியில் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்க சர்வதேசம் இலங்கைக்கு உதவ வேண்டும் – பொக்ஸ்

liam_fo_.jpgவன்னியில் சிக்கியுள்ள மக்களை பாதிப்புகளின்றி மீட்பதற்கு சர்வதேச நாடுகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யும் பாதுகாப்பு நிழல் அமைச்சருமான லியாம் பொக்ஸ் தெரிவித்தார். இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் நேற்று நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே இதனைத் தெரிவித்தார்.

வன்னியில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் பல, பல்வேறு அறிக்கைகளை விடுத்தும் குரலெழுப்பியும் வருகின்றன. எனினும் சர்வதேசம் இவ்விடயத்தினை முழுமையான கவனத்திற்குக் கொண்டு வந்து அம்மக்களை மிகக் குறைந்த பாதிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம். சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் நாட்டின் பொருளாதாரம் கல்வி மற்றும் அபிவிருத்திகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தின் உதவியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை புலிகளின் பிடியில் அகப்பட்டுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கும் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தாம் இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் இவர்களிடம் இவ்விடயம் பற்றி வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற மேற்படி செய்தியாளர் மாநாட்டில் வியாம் பொக்ஸ் மேலும் தெரிவித்ததாவது:- சுதந்திரமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான நிதியமொன்று ஏற்படுத்த வேண்டும். அந்நிதியத்தினூடாக வடக்கு, கிழக்கு மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நிதியமொன்று தொடர்பாக நான் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அவரது கவனத்தை கொண்டு வந்துள்ளேன்.

இதனை ஆரம்பிப்பதில் நான் முன்னின்று செயற்படுவேன் என அவரிடம் நான் தெரிவித்துள்ளேன். இந்நிதியத்திற்கு சர்வதேச நாடுகளின் முழுமையான பங்களிப்பு பெறப்படுவதுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களினதும் உதவிகளைப் பெறமுடியும். வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்நிதியம் முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் தொடர்பான ஸ்திரத்துவம் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. யுத்தத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்து கவனத்திற் கொள்வதுடன் இத்தகைய இழப்புக்கள், பாதிப்புக்கள் சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமே சமாதானத்தை வென்றெடுக்க உதவக் கூடும்.

வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு விரைவான அரசியல் தீர்வு முக்கியம். அங்கு தேர்தலொன்றை நடத்துவதானது இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கான சிறந்த ஆரம்பமாக அமையும். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கேற்பானது அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    ஓவ்வொரு பேச்சுவார்த்தைகளையும் பிரபாகரன் குழப்பியடித்து அதன் பின்பு எற்படுகின்ற யுத்தததில் கொல்லப்பட்ட தமிழர்கள் பல ஆயிரங்கள். பிரபாகரன் ஜனநாயாக வழிக்கு திரும்பவும்மாட்டான் திரும்பவும் முடியாது கடந்த 30வருடங்களாக யாரைக்கொலை செய்யலாம் எப்படிக் கொலை செய்யலாம் என்பதில் வெற்றி கண்டான் எத்தனையோ கிடைத்த அரிய சந்தர்ப்பங்களை எல்லாம் கிடைத்தபோது தமிழ் மக்களின் பிரச்சினையை எப்படித்தீர்க்கலாம் என்று அவன் சிந்திக்கவே இல்லை. பிரபாகரன் என்ற தனிமனிதன் 30வருடங்களாக தமிழினத்தை அழிவிற்கே இட்டுச்சென்றுவிட்டான். நெல்சன் மண்டேலா என்ன தற்கொலைப்படையா வைத்திருந்தார். அல்லது விமானப்படை வைத்திருந்து சாகசம் காட்டியா சமாதான வாழ்வை பெற்றுக்கொடுத்தார். உண்மையாகவே அவர் தனது மக்களின் விடியலுக்காக பாடுபட்டார் வெற்றியும் கண்டார். ஈழத்தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்று நினைத்தால்; பிரபாகரன் இல்லாத ஓருசூழ்நிலையில்தான் அது சாத்தியமாகும் அந்த நிலைமைவரும்போது சிறீலங்காவின் எந்த அரசாலும் தமிழர்களுக்குரிய தீர்வை தட்டிக்கழிக்கவும் முடியாது இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு எந்தக்காரணமும் சொல்லவும் முடியாது நிட்சயமாக தமிழர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் –அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply