ஜனாதிபதியாக ரணிலின் பதவியேற்பும் – வெளியாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் அறிவிப்பும் !

 

நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இன்று ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில் சில அறிவிப்புக்கள் அடுத்தடுத்து மேற்குலக நாடுகளில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளன.

இலங்கை மக்கள் தாங்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் நிவாரணத் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய முடியும் எனவும் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​நிவாரணப் திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களின் பெறுபேறுகளின்படி, வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவு இருந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தமது பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் இத்தனை நாளும் இழுத்தடிப்பு செய்து வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை ஊடகங்கள் பலவும் கொண்டாடி வருகின்றன.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்தவரை  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியாது எனவும் இது சரியாகி நாடு மீள பல வருடங்களாகும் எனவும்  இதுவரை கூறி வந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  இன்னும் 5 மாதங்களில் இலங்கையின் பொருளாதார சரிவை மீட்க முடியும் என திடீர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலிலேயே மேற்கூறியது போல கதைகளிலும் கற்பனைகளிலும் வருவது போல ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும்  திடீரென அதிசயமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

ரணிலின் ஜனாதிபதி தெரிவும் – IMFஇன் இந்த அறிவிப்பும் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்தும் ஒரு சேர ஒரு  விதமான சந்தேககண்ணோட்டத்தை ஏற்படுத்துவது போலவும் ஏற்கனவே இருந்த சில சந்தேகங்களை உறுதிப்படுத்துவது போலவும்  அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளன.

 

இலங்கை மக்களின் 69லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்.

போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிய கட்சிகளின் உந்துதலே காணப்பட்டது என ஒரு தரப்பு  அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில் இன்னுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் ரணிலுக்கு ஆதரவான மேற்கு உலக சக்திகளே இந்த போராட்டத்தை கொண்டு நடத்தின என அழுத்ததிருத்தமாக கூறி வந்த நிலையில் பல விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட போது முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டு வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டமை, ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை , பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று குறுகிய காலத்திற்குள் ரஷ்யாவின் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்டமை என பல விடயங்களில் சந்தேகமான தன்மையை காண முடிந்தது.

ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் இலங்கையின் போக்கு மேற்குலக நாடுகளில் இருந்து முற்றிலும் விலகி சீனாவுடன் மிக நெருங்கியதாகவே காணப்பட்டது. இந்த நிலையில் இது இலங்கையின் மீதானதம் இந்துசமுத்திர பரப்பு மீதானதும் அமெரிக்க – இந்திய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. இந்த நிலையில் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான அரசியல் மாற்றங்களும் – புரட்சிகளும்  அடுத்தடுத்து அரங்கேறின. அடுத்த இருபது வருடத்துக்கு ராஜபக்சக்கள் ஆட்சி தான் என்ற கருத்து உடைத்து வீசப்பட்டது.

இவற்றின் பின்னணியில் இந்தியாவினதும் அதுசார்ந்த அமெரிக்க – மேற்குலக சக்திகளினதும்  அதிதீவிர நகர்வுகளை இங்கு நடந்த பேராட்டங்களில் காண முடிந்ததாக பல அரசியல் விமர்சகர்களும்  குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை நாளும் இலங்கைக்கான கடன் வழங்குவது தொடர்பில் காலந்தாழ்த்தி வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று இல்ஙகைக்கான உதவி தொடர்பில் அறிவித்துள்ளமையானது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இயல்பாகவே மேற்குலக நாடுகளின் முகவர் என்ற தோற்றத்தை கடந்த காலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு இலங்கை மீதான சீனாவின் ஆதிக்க நிறுவுகையினையும் – சீனாவின் பொருளாதார லாப ஈட்டத்தினையும் கட்டுப்படுத்த இந்தியாவும் – அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியாகவே இலங்கையின்  திடீர் அரசியல் மாற்றங்களை கருத முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை கடன் வலைக்குள் சிக்க வைப்பதையே நோக்கமாக கொண்டவை என பல தரப்பினரும் எச்சரித்து வந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த கடன் திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளை முடக்கி விட்டிருந்தார். அத்துடன் அண்மையில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பே இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நலிவுக்கு காரணம் என அண்மையில் சாடியிருந்தது கூட ரணில் விக்கிரமசிங்க தன்னை அமெரிக்க சார்புவாதி என்பதை காட்டும் தோரணையிலேயே அமைந்திருந்தது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் சில நாட்களில் முழுமையாக தெரிந்து விடும்; ரணில் அமெரிக்க தோலை போர்த்திய நரியா அல்லது இலங்கையை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள அரசியல் தலைவரா என்று…!

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *