மேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.
அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.
மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.
இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.