மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பக் கோரி அமைச்சிற்கு முல்லைத்தீவு , கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடிதம்

medicine.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் நிலவும் மருந்து பற்றாக்குறைகளை விளக்கியும் , நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளரால் சுகாதார அமைச்சு, அமைச்சின் ஆலோசகர் டாக்டர் வி.ஜெகநாதன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக போதுமான மருந்து வகைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிற்கு கிடைக்கவில்லை .கடந்த வருட இறுதி காலாண்டிற்கும், இவ்வருட முதல் காலாண்டிற்குமாக 5 சதவீதத்திற்கும் குறைவான மருந்து வகைகளும், துணி வகைகளும் கிடைக்கப்பெற்றன.இது தொடர்பாகவும் மருந்து பொருட்களின் தேவைகள் குறித்தும் ஏற்கனவே இரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் அறிவித்திருந்தோம்.

மோதல்கள் காரண்மாக அதிகமானோர் காயமடைகின்றனர்.எனவே அதிகளவு மருந்துப் பொருட்கள் தேவைப்படுகின்றது.முக்கியமாக அனெஸ்தெடிக்(Anesthetic),அன்டிபயோடிக்ஸ்(Antibiotics),அனல்ஜெசிக்ஸ்(Analgesics) மற்றும் IV புளூயிட்(IV fluids) போன்ற மருந்து வகைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

2009 ஜனவரி மாதம் வரை 500 பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், பின்பும் உயிரிழந்துள்ளமை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேவேளை வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படாமலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் படுகாயமடைந்தமையே உயிரிழப்பிற்கு காரணம்.

வைத்தியசாலைகளில் போதுமான மருந்துப் பொருட்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் காணப்பட்டிருப்பின் அதிகளவான உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.எனினும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் அவசர உயிர்கப்பு சிகிச்சை கூட மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ,நிலமையை கருத்திற் கொண்டு உயிரிழப்புக்களை மேலும் குறைப்பதற்கு ஊடனடியாக அடுத்துவரும் ஐ.சி.ஆர்.சி கப்பலில் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு அக்கடிதத்தில் கோரி முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜன் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை மருந்துப்பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து மாகாண ஆணையாளர் அடுத்த தடவை கப்பல் வரும்போது அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தார் எனினும் அவ்வாறு மருந்துப் பொருடகள் அக்கப்பலில் சுகாதார அமைச்சிலிருந்து அனுப்பி வைக்கப்படவில்லை என ஐ.சி.ஆர்.சி தமக்கு அறிவித்ததாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

rdhs-mul.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *