‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தி திட்டத்துக்கு யாழ். தேவியின் ஒலி முன்னோடி சமிக்ஞை – ஜனாதிபதி

yaal-deevi.jpg‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு யாழ் தேவியின் ஒலி முன்னோடி சமிக்ஞை நாதமாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ் தேவி வெறுமனே ரயில் சேவையாக மட்டுமன்றி இனங்களுக்கிடையில் உறவின் தூதுவனாகப் பயணிப்பது உறுதியெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கிற் கானரயில் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையிலான செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி வடக்கின் பனையும் தெற்கின் தென்னையும் மீண்டும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. நாம் அனைவரும் இணைந்து இந்த சகோதரத்துவப் பிணைப்பை கட்டியெழுப்புவது அவசியம் எனவும் தெரிவித்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான “தெற்கின் நண்பன்” கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியும் பிரபல சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரனும் இணைந்து இத்திட்டத்திற்கான இணையத்தளத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

அமைச்சர்கள் டளஸ் அழகப் பெரும, டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மதத் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், கலைத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

படையினர் வடக்கை மீட்ட பின்னர் அந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பது எப்படி? என்ற கேள்வியையே பலரும் இந்நாட்களில் எழுப்புகின்றனர். இதனை வெறுமனே பார்ப்பதை விட இதற்கான நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து அதற்கு ஒரு வழிமுறையையும் மேற்கொண்டோம். இதனோடு மக்களின் மனதை வெற்றிகொள்வது முக்கியம் என்பதாலேயே யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை ஆரம்பித்து வடக்கின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பல வருடங்களுக்கு முன்பு நாம் யாழ் தேவியில் பயணித்தோம், அன்று யாழ் தேவியின் ஒலி நாதம் ஆனந்தத்தை தந்தது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். அது ரயிலின் ஒலியன்று, மனித மனங்களின் இதயத்துடிப்பு என்றால் பொருத்தும்.

யாழ் செல்லும் அரச ஊழியர்கள் தமது விடுமுறைக்கு இங்கு வந்து விட்டு மீள யாழ் செல்வது இந்த யாழ் தேவியில் தான். அரச நிர்வாகம் போன்று யாழ்தேவியும் முழு அரச சேவையின் அடையாளமாகத் திகழ்ந்தது. இதனால்தான் புலிகள் இனங்களைப் பலிகொள்ள யாழ் தேவி மீது தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் புலிகள் யாழ்தேவியின் ஊடான சகோதரத்துவத்தையே சீர்குலைத்தனர். முருங்கனில் தாக்குதல் நடத்தினர், அதில் 11 ரயில் பெட்டிகள் சேதமாயின.

அதற்கடுத்து 1986 இல் பரந்தனில் யாழ்தேவி மீது தாக்குதல் நடத்தினர். மூன்றாவது தடவையாகவும் ஓமந்தையில் வைத்து தாக்குதல் நடத்தினர். புளியங்குளத்திற்கும் வவுனியாவுக்குமிடையில் ரயிலில் குண்டு வைத்தனர். இத்தனை தாக்குதல்களை நடத்தியும் இனங்களுக்கிடை யிலான நட்புறவை முறிக்க முடியாமற்போனது.

1987 இல் வவுனியா- கிளிநொச்சி ரயில் பாதை தகர்க்கப்பட்டது. இதனையும் நாம் புனரமைத்தோம் யாழ்தேவி பயணிக்கும் வரை நாட்டைப் பிளவு படுத்த முடியாது என எண்ணிய புலிகள் அடுத்தடுத்து அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் 1990 இல் யாழ் தேவியின் சேவை முற்றாக நிறுத்தப்பட்டது.

புலிகளால் நாசமாக்கப்பட்ட ரயில் பாதையைச் சீரமைக்க அரசாங்கத்துக்கு 700மில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டது. தற்போது யாழ் புதிய ரயில் சேவையை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் 28 ரயில் நிலையங்களை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. யாழ் ரயில் நிலையத்தை நிர்மாணிக்க நாம் நிதி செலவிடவுள்ளோம். சகல ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கப் பெருமளவு நிதி தேவைப்படுகிறது. சகல மக்களும் இதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

பயங்கரவாதிகள் அழிவைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் மக்களைக் கட்டியெழுப்ப முயல்கின்றோம். பயங்கரவாதத் திற்கு எதிரான எமது நடவடிக் கைகளுக்கு சீனா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் என பல நாடுகள் எமக்கு உதவுகின்றன. அதேவேளை பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்பவும் உதவ முன்வந்துள்ளன.

யாழ். ரயில் சேவையைக் கட்டியெழுப்ப நான் எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்கின்றேன். ஜனாதிபதியின் செயலாளரும் செயலகப் பணியாளர்களும் அவர்களது பங்களிப்பை வழங்க முன்வந்து ள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்ப, இனங்களுக்கிடையிலான உறவுகளைக் கட்டியெழுப்ப விரும்பும் நல் மனம் படைத்தோர் தமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும்.யாழ் தேவி இனப்பாகுபாட்டை சுமக்கவில்லை. வடக்கு தெற்கின் உறவுப் பாலமாக அது அமையும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ எனவும் ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார். ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    இந்த ஒலிதான் பல அமைப்புக்கு மகிந்தா ஊதிய சங்கின் சத்தம் என உங்கள் அமைப்பினரே பேசுவது றெயின் சத்தத்தில் கேக்கவில்லையா?

    Reply