‘சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவேயே நாம் இன்று எதிர்கொள்கிறோம்.’ அபுயுசுப் சிறி – ரெலோ பேச்சாளருடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Apuysef_Sri_TELO._._._._._. 

கொம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பின்னர் ஈபிஆல்எல்எப் இல் இணைந்து கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக செயற்பட்ட அபுயூசவ் தற்போது சிறி – ரெலோ அமைப்பின் பேச்சாளராக செயற்படுகிறார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

தேசம்நெற்:உங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் செயற்ப்பாடகள் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

அபுயுசுப் : நாங்கள் தற்போது கொழும்பிலும் வட- கிழக்கு மாகாணங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். மாவட்டக் குழுக்கள் அமைத்து அந்த மக்கள் மத்தியில் செயற்;பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேசம்நெற் : எவ்வாறான அரசியல் வேலைத் திட்டங்களை முன் வைத்து செயற்படுகிறீர்கள் ?

அபுயுசுப் : ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் ஓர் தீர்வு கண்டு தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற திட்டத்துடன் அரசியல் முயற்ச்சியுடன் செயற்ப்படுகிறோம்.

ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் – 3 தசாப்த்தங்களின் பின்னர் தமிழீழம் கேட்டுப் போராடி இன்று தமிழ்பேசும் மக்கள் எங்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்? இயக்கங்கள் மக்களை வழிநடாத்தி போராட்டம் எப்படி வந்து நிற்கிறது என்பதை தெட்டத் தெளிவாக ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு சேதாரம் இல்லாமல் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் தமது ஜனநாக உரிமைகளுடன் வாழக்கூடிய போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்றும் நீண்டகால மூலோபாயம் என்ன அதற்காக தற்போது செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவும் முக்கியமாக அரசியற் கட்சிகளுக்கு தேவை.

ஆயுதப் ஆபாராட்டத்திற்கு முன்பு செய்யப்பட்ட ஜனநாயக போராட்ட அனுபவங்களில் இருந்தும் எமது தற்போதய புதிய ஜனநாயக வழிவகைகளை மூலோ பாயங்களை கண்டறிந்தாக வேண்டும். தற்பேததுள்ள வன்னிப் பிரதேசம் வட – கிழக்கு பிரதேசம் நாடுதழுவிய தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றியும் கருத்திற் கொண்டே இந்த மூலோபாயத்தை கண்டறியும் போராட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசம்நெற் : தமிழ் மக்களுக்கான போராட்ட அமைப்புக்கள் தான் தமிழ் மக்களுக்கு தீங்கு இழைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்hபக ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் கடத்தல் கப்பம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு.

அபுயுசுப் : சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவே அன்றி வேறேதும் இல்லை. தனி நாட்டைப்பெற்று உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று ஆயுதம் ஏந்திப் போராடினர். ஆயுதம் ஏந்தியது பலாத்காரத்தை செய்வதற்காகவா? பலாத்காரத்தை எதிர் கொள்வதற்காகவா? என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள தவறி விட்டோம்.

ஆயுதங்களைக் கொண்டு மக்களை அடக்கி விட்டோம் என்பதும் ஆயுதங்களால் மக்களின் அபிலாசைகளை  நிலைநிறுத்தவில்லை என்பதே இந்த நீண்ட போராட்டத்தின் கசப்பான அனுபவம். அதன் காரணமாகத்தான் பல பிரச்சினைகள் தோன்றின. ஆட்கடத்தல் கொலை கொள்ளை கப்பம் போன்ற விடயங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு அரசியல் இல்லாமல் ஆயுதம் ஏந்தியதன் விளைவேயாகும்.

தேசம்நெற் : அதை நிறுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?

அபுயுசுப் : ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் சக்தியினை நம்பி மக்கள் உரிமைக்காக போராடுவோம். கடந்த கால அரசியல் இராணுவ போராட்டங்கள் தற்போது எமக்கு அரசியல் பாசறைகளாக உள்ளன. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் புதிய நடைமுறைகளை வழிமுறைகளை கண்டு போராட வேண்டும் என்பதேயாகும்.

தேசம்நெற் : இந்தப் பாடத்திற்கு கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் 100 000 க்கு மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்துள்ளோம்.

அபுயுசுப் : உண்மை. உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதானால் போராட்டத்தை ஆரம்பித்த தங்கத்துரை அவர்கள் சர்வதேசம் போராட்டம் ஆயுதம் இவைபற்றியே சர்வதேச பாடங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டத்தை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அவர் உயிர் துறந்தார். அவர்கள் நினைத்த மாதிரி இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு தவறவிடப் பட்டுவிட்டது. அவர்கள் எப்படி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தார்களோ அவையாவும் வெளிவர முன்பே அவர்கள் உயிர் நீத்ததும் ஒரு காரணமாகும். அதன் பின்னர் ஆரப்பித்த ஆயுதப் போராட்டம் சித்தாந்த தெளிவில்லாமல் போனதால்தான் அதனுடைய அத்தனை விளைவுகளையும் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். லட்சக் கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். நிர்க்கதியாகி இருக்கிறோம்.

தேசம்நெற் : இப்போ நீங்கள் குறிப்பாக ஒருவிடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை வைத்துள்ளீர்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடந்த செயற்பாடுகளால் குறிப்பாக புலிகளால் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டனர். பின்பு முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற தங்கள் அடையாளத்தை நிராகரித்தனர். ஆனால் நீங்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடனேயே முஸ்லீம்களை பார்க்கிறீர்கள் ?

அபுயுசுப் : தான் எந்த இனம் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ தமிழன் என்றோ தீர்மானிப்பது எப்படிப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்படும் என்றால் மொழிதான் தீர்மானிக்கும். மொழி மூலம்தான் சிந்திக்கிறார்கள். மொழிமூலம் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தான் தமிழன் அல்ல முஸ்லிம் என்று தமிழ் மொழியில்தான் சொல்கிறார். ஆகவே இது இடையிலே ஏற்பட்ட விபத்தும் விபரீதமானதுமாகும். இந்த நாட்டிலே நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் மொழி அடிப்படையிலேதான் வஞ்சிக்கப்பட்டோம். தமிழ் மொழி பேசியதால் தான் வஞசிக்கப் பட்டோம். ஆகவே விமோசனம் தமிழ்பேசும் மக்களின் விமோசனமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தமிழர்கள் முஸ்லிம்கள் என்று தனித்தனியாக இருக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே அடிப்படையில்தான் இருக்க முடியும்.

முஸ்லிம் என்பது இனம் அல்ல. அது ஒரு மார்க்க அடையாளம் மட்டுமே. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் அல்ல. பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அங்கே அரபுக்களுக்கும் – யூதர்களுக்குமான பிரச்சினையே தவிர அது முஸ்லிம் போராட்டமாக பார்க்க முடியாதே.

இதைவிட எதுசரி எப்படி பிரச்சினைகளை தீர்ப்பது அதற்கான சரியான நடைமுறை என்பதையே கவனத்தில் எடுக்க வேண்டும்.

சாதாரணமாக சொல்வோமானால் இன்று வட கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் 600க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் சிங்களவர்களுடைய வெற்றிடங்களை நிரப்புகின்றனவே அன்றி தமிழ்பேசும் மக்களிடையேயான வெற்றிடங்களை நிரப்பத் தயாரில்லை. எனவே இதை தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப் பார்த்து தீர்க்கவும் முடியாது.

முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்களே என்ற கருத்து பல முஸ்லிம்களிடம் இன்றும் உள்ளது. பலர் இதில் தெளிவாக உள்ளார்கள்.

இந்த தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லிம்கள் செறிந்த இடங்களின் வாக்குகளுக்காக முஸ்லிம் என்ற அடையாளர் உயர்த்தப்பட்டதே தவிர இது சரியாக தெளிவாக யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்படியான முடிவாகவும் இருக்க முடியாது. இந்த சரியான கருத்தை முஸ்லிம்களிடையே தெளிய வைக்க வேண்டியதும் எமது கடமையாகும்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும். அதேபோல வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட  தமிழர்களும் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும். அவர்களது உரிமை இது. 

வட கிழக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அத்தனை மக்களும் மீள குடியமர்த்துவது எமது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும். அந்த மக்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பிப் போவது என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.

Apuysef_Sri_TELOதேசம்நெற் : இன்றைய இலங்கை அரசு பற்றிய உங்களது மதிப்பீடு என்ன ?

அபுயுசுப் : இலங்கை அரசு ஒரு முதலாளித்துவ அரசு. நான் ஒரு கமியூனிஸ்ட் இப்படித்தான் சொல்வேன். இனிவரப் போகும் யுஎன்பி அரசம் முதலாளித்துவ அரசுதான். முதலாளித்துவ நடைமுறைகளை கொண்ட அரசு. இந்த முதலாளித்துவ அரசில் முதலாளித்துவ வாதிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதல்ல. இந்த அரசுகள் சமாதானப்படுத்தப்ப முடியாத வர்க்க முரண்பாடு காரணமாக தோன்றி விஸ்வரூபம் எடுத்திருக்கிறதொன்று.

ஆளும் அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கத்தின் அடக்குமுறை யந்திரம்தான் அரசு என்று எமக்கு தெரியும். அதை பல்வேறு விதமாக ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த நாட்டடில் முதலாளித்துவம் இருக்கும் வரையில் முதலாளித்துவ அரசாகத்தான் இருக்கும். அது தனது நலனை பாதுகாக்கவே முற்படும். அது அந்த வர்க்க நலனுக்காக இனப்போராட்டத்தையும் தீவிரமடைய வைக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் இடையே இனக்குரோதத்தை வளர்த்தால்தான் தனது நலன் பேணப்படும் என்றால் அதை தந்திரமாகவும் நளினமாகவும் அது செய்து கொண்டிருக்கும். அதைத்தான் இவ்வளவு காலமும் செய்து கொண்டுவந்தது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை மக்களின் தேசிய ஜனநாயக உரிமைக்காக தமிழபேசும் மக்களைத் தயார்படுத்துவதும் சிங்கள மக்களை தயார்படுத்துவதும் அவசியம். இதற்கு ஜனநாயக சக்திகளை நாம் இனம் கண்டு அந்த சக்திகளடன் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கையிலுள்ள ஒட்டுமொத்தமாக அனைத்து அல்லல்படுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்காக செயற்ப்படுவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டம் மேலும் வீரியமடையும் என்பது எமது கருத்து.

தேசம்நெற் : நீங்கள் உங்களை கம்யுனிஸ்ட் இடதுசாரி என்று கூறுகிறீர்கள். அப்படியான பின்னணி உடைய நீங்கள் ரெலோ என்ற அமைப்புடன் எப்படி உங்களை அடையாளம் காண்கிறீர்கள்?

அபுயுசுப் : நான் ரெலோ என்பதற்கு முன்பாக ஈபிஆர்எல்எப் டன் என்னை அடையாளம் கண்டு கொண்டேன் அங்கிருந்து தான் ரெலோவிற்கு வந்தேன். சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும்.

தேசம்நெற் : கம்ய+னிச சித்தாந்த பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் ஈபிஆர்எல்எப் இடமிருந்து ரெலோவிற்கு வருவதன் காரணம் என்ன?

அபுயுசுப் : அடிமைப்பட்ட மக்கள் அல்லவா? அந்த மக்களுக்காக போராடுவது கம்யூனிஸ்டின் கடமையல்லவா? சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும். கம்யூனிஸ்ட் அந்த பங்களிப்பை நிராகரிக்க முடியாதே கண்மூடித்தனமாக பார்க்காமல் இருக்க முடியாதே.

இலங்கையில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கா தமிழ்பேசும் மக்களின் பாட்டாளிகளையும் அழைக்க வேண்டிய கடமை உண்டல்லவா. தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் செயற்ப்பாட்டை முதலாளித்துவ வழியில் செல்லவிடாது இழுத்துச் செல்லும் கடமையை கம்யூனிஸ்ட் செய்ய வேண்டும் அல்லவா. அதற்காக நாங்கள் இந்த அமைப்புகளினுள்ளும் சென்று அரசியல் வேலைகளை செய்வதன் மூலம்தானே அது சாத்தியப்படும்.

தேசம்நெற் : ஆனால் துர்திஸ்டவசமாக அது நடக்கவில்லையே?

அபுயுசுப் : நடக்கவில்லை. சில தமிழ் மார்க்ஸிஸ்ட்டுக்கள் முயற்ச்சித்தார்கள். பலர் அதை கண்டு கொள்ளவில்லை அதே போல சிங்கள மார்க்ஸிஸ்ட்டுக்களும் இவர்களுடன் செயற்ப்படவில்லை. அது அவர்களடைய தப்பு. நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தான் ஈபிஆர்எல்எப் க்கு ஒரு அமைச்சராக போனேன்.

தேசம்நெற் : எந்த கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து?

அபுயுசுப் : இலங்கை மாஸ்கோ சார்பு கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து அந்த கட்சியின் அரசியல் குழு அங்க்த்தவனாக இருந்தவன். அங்கு இருக்கும் போது தோழர் நாபா நீங்கள் எமது அமைச்சரவைக்கு வாருங்கள் என்று கேட்டார். நானும் சென்றேன். தமிழ் பாட்டாளி வர்க்கத்தை உலக பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து செயற்ப்படும் கடமை ஒன்று இருந்தததை உணர்ந்து தான் அவர்களுடன் இணைந்து செயற்ப்பட சென்றேன். இந்த மக்களை சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைக்க வேண்டும் என்று தான் செயற்ப்பட்டடேன்.

தேசம்நெற் : இன்று வன்னியில் நடைபெறும் யுத்தம் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையேயான இனவாதத்தை அதன் உச்ச அளவிற்கு தூண்டியுள்ளதே?

அபுயுசுப் : இருபக்மும் உள்ள இனவாதிகள் தமது சுயநலன்களுக்காக இனவாதமாக  மாற்றிவிட்டார்கள். இந்த யுத்தத்தை தமிழர்க்கும் சிங்களவர்க்கு மிடையிலான யுத்தமாக மாற்றிவிட்டார்கள்.

தேசம்நெற் : இந்த இனவாதத்ததை கடந்து தமிழ் முஸ்லீம் மலையக சிங்கள மக்கள் ஒன்னிணைந்த போராட்டத்தை நடாத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

அபுயுசுப் : நிச்சயமாக. இன்னும் ஆழமாக நம்புகிறேன். அதுதான் ஒரே வழி. இலங்கையின் விமோசனத்திற்கு தமிழ் மக்களின் சிங்கள மக்களின் முஸ்லீம் மக்களின் விமோசனத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கையின் விமோசனத்திற்காக இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கான சமானிய அன்றாட ஜீவியத்திற்க்காக பாடுபடும் மக்களின் விமோசனத்திற்கு அனைத்து மக்களும் சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான கொள்கையில் செயற்ப்பட வேண்டும். அது இப்போது செய்ய முடியாது. இப்போது அழைக்க முடியாத. அழைத்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இப்போது யுத்தம் நடக்கிறது. இந்த யுத்த்தின் விளைவு என்ன? இதிலிருந்து நாம் மக்களை அரசியல் மயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு பாரிய பணியாகும். ஒரு பாரிய காரியமும் ஆகும.; அந்த காரியத்தை சித்தாந்த தெளிவு உள்ளவர்களாலேயே நடாத்த முடியும். அது மட்டுமல்ல அவை அன்றாடம் செய்யப்பட வேண்டியவைகளுமாகும்.

இந்த நாட்டிலே உண்மையான  தேசிய ஜக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்பேசும் மக்களும் சிங்கள மொழிபேசும் மக்களும் அந்த மக்கள் மத்தில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்க மக்களும் ஒன்னிணைய வேண்டும். அப்போது தான் தேசியங்களின் விடுதலை பற்றி பேச முடியும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களும் சுபீட்சம் பெறமுடியும்.

அதற்காக போராடுவோம் எமது போராட்டத்தில் அதுவும் ஒரு அம்சம். தமிழ்பேசும் மக்கள் படும் கஸ்டம் போலவே பெரும்பாலான சிங்கள மக்களும் கஸ்டப்படுகிறார்கள் அவர்களக்காகவும் போராட வேண்டியது தெளிவடைந்த அரசியற் கட்சிகளின் கடமையாகும். இது இந்த யதார்த்த்ததை புரிந்து கொண்ட மக்கள் சிந்தனையாளர்களைக் கொண்ட கட்சியால்த்தான் அது முடியும்.

தேசம்நெற் : இறுதியாக தேசம்நெற் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்களா ?

அபுயுசுப் : சொல்வதற்கில்லை. இனி செய்தாக வேண்டும். செய்ய நிறையவே உண்டு. செய்ய வேண்டிய கடமைகளைப் புரிந்து கொண்டு தெளிவான பார்வையுடன் தெளிவான போராட்டததை தியாக மனப்பானமையுடனும் முன்னெடுத்துச் செல்வோமேயானால் தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் மக்களும் ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் இங்கே வாழ முடியும்.

எங்கள் போராட்டம் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருடன் இணைந்து நடத்தப்பட்டு இருந்தால் எங்கேயோ போயிருக்கும். ஜேவிபி கூட அந்த தவறை செய்துள்ளது.

ஜேவிபி யின் திட்டமே ‘சிங்கள இனவெறியைத் தூண்டி பதவிக்கு வந்து நியாயமான விடயங்களை செய்வோம். அதில் தமிழ் மக்களுக்கும் நியாயம் கிடைக்க வைப்போம்’ என்ற உபாயம். அவர்கள் குட்டிப்பூர்சுவாக்கள் தானே இப்படியான உபாயங்களைத் தான் அவர்கள் வளர்ப்பார்கள். குட்டிப்பூர்சுவாக்களின் உபாயம் அப்படித்தான் இருக்கும்.

அவர்கள் பாரிய பின்னடைவை சந்தித்தார்கள் அவர்களே இரண்டாக பிளவடைந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த தேர்தலில் மக்கள் இவர்களின் பேச்சை நம்பவில்லை. எந்த சிங்கள மக்களை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்கள் கடந்த தேர்தலில் அவர்களை நிராகரித்து விட்டனர்.

அந்த இருதரப்பு ஜேவிபி யினரையும் மக்கள் நிராகரித்தது விட்டனர். உபாயத்தை சரியாக வகுக்காதுவிட்டால் அந்த உபாயம் வர்க்க எதிரியின் கையில் ஒரு ஆயுதமாகிவிடும்.

தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் எந்த இனவாத உபாயத்தை எடுத்தார்களோ அந்த உபாயம் இவர்களுக்கு எதிராக போய்விட்டது.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தெளிவான சிந்தனைகள் ஆக்கபூர்வமான பதில்கள். இணைப்பிற்கு நன்றிகள்.

    Reply
  • indiani
    indiani

    thank you thesam to interview commerade Abu – we feel better one of the muslim person came out and say the truth about the tamil speaking peoples and tamils and mulims. thank you thesam.

    Reply
  • பகீ
    பகீ

    “…கொம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பின்னர் ஈபிஆல்எல்எப் இல் இணைந்து கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக செயற்பட்ட அபுயூசவ் தற்போது சிறி – ரெலோ அமைப்பின் பேச்சாளராக செயற்படுகிறார்…..”

    சித்தாந்த தெளிவு பற்றி ஏதேதோவெல்லாம் பேசுகிறார். எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். அவை புலிஎதிர்பாக இருக்கும் பட்சத்தில்!

    Reply
  • Thaksan
    Thaksan

    தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்….. என்னதான் பொதுவுடமை கருத்தகளுடன் அபுயூசுப் ஒன்றியிருந்தாலும் இறுதியில் அவர் சேர்ந்த இடம் அவரின் மனச்சாட்சியில் சந்தேகம்கொள்ள வைக்கிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தோழர் அபுயூசுப்பின் வார்தைகள் பேச்சுக்கள் என் காதுகளில் தூரத்தில் இடிமுழக்கம் கேட்பதாகவே உணருகிறேன். சிலவேளைகளில் முப்பது வருடங்களுக்கு மேலாக வறண்டு போயிருக்கிற எமது மண்ணுக்கு நீர்வழங்குகிற நற்செய்தியாகவே அறிகிறேன்.

    Reply
  • மறவன்
    மறவன்

    தோழர் அபுயூசுப்பவர்கள் யாரைச்சார்ந்து நிற்கின்றார் என்பதற்கு மேலாக அவரிடம் மக்கள் தொடர்பில் ஓர் பார்வை இருக்கின்றதே அதற்கு மேலாக அவரிடம் என்னத்தைத்தான் நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

    Reply