“மக்கள் ஆணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன்’ – ரணில்

ranil-wickramasinghe.jpgஜனநாயக வழியின் மூலம் மக்களாணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன் என தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்று படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கிய இலங்கையின் இன்றைய நிலைமை பெரும் கவலையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் வேதனையை வெளியிட்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது 60 ஆவது பிறந்த தினத்தையொட்டி கொழும்பு ஹீணுப்பிட்டிய கங்காராம விகாரையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரோ தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜை வழி பாட்டில் ரணில் விக்கிரம சிங்கவுடன், அவரது பாரியார் மைத்திரி விக்கிரம சிங்கவும் கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள், மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்றனர்.

கங்காராம விகாராதிபதியுடன் கோட்டே ரஜமகாவிகாராதிபதி கலாநிதி மாதுளுவாவே சோபித தேரோ, காணி மகாவிகாராதிபதி பேராசிரியர் மகிந்த சங்க ரக்கித்த தேரோ ஆகியோர் ரணிலுக்கு நல்லாசிகளை வழங்கியதோடு விஷேட பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

இறுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

60 வருடங்கள் என்பது வாழ்க்கைப் பயணத்தில் நீண்டதொரு தூரமாகும். இப்பயணத்தில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதோடு, பல சவால்களையும் எதிர் கொண்டுள்ளேன். அந்த அனுபவங்களும், சவால்களும் தான் தொடர்ந்து பயணிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளதாகவே உணர்கின்றேன். சுதந்திர இலங்கையில் பிறந்த நான் மாதுளுவாவே சோபித தேரோ குறிப்பிட்டது போன்று எனது கல்வியை “குமாரரொதய’, “நவமக’ ஆகிய பாடப்புத்தகங்களினூடாகவே ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே சவால்கள் நெருக்கடிகள் என்பன பற்றி புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதால் எனது அரசியல் வாழ்க்கையில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் வெற்றி தோல்வி இரண்டுக்கும் முகம்கொடுக்கக்கூடிய தைரியம் சுயமாகவே வந்தது. அவர்கள் காட்டிய பாதையிலிருந்து இன்று வரையில் நான் விலகிச் செயற்படவில்லை. எதிர்காலத்திலும் அந்த அடிச்சுவட்டிலேயே பயணிப்பேன்.

எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் போது அந்த தலைவர்களிடமும் எனது தாய், தந்தையாரும், கட்சி ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புகளை இன்று நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதைப் பற்றி நான் தம்ம பதத்தை படித்து தெரிந்துகொண்டேன்.

நான் ஜனநாயகத்தின் மீது முழுமையான நம்பிக்கைகொண்டவன். ஜனநாயக வழிக்கு அப்பால் நின்று அரசியல் அதிகாரங்களைப் பெற ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். எதிர்காலத்திலும் ஜனநாயக வழியிலேயே மக்களாணையைப் பெற்று ஆட்சிக்கு வந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன். இதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

ஆசியாவின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்ந்த எமது நாட்டின் இன்றைய நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்தச் சோதனையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டும். அதற்காக தேசத்தை நேசிக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும். நான் பெற்ற அனுபவங்கள், சவால்களைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நிவாரணங்களைத் தேடிக்கொடுத்து சுதந்திரமான ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது இலட்சியமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • malan
    malan

    LADIES AND GENTLEMEN PLEASE WELCOME MR RANIL , OUR PRECIDENT OF SRILANKA.
    HE IS BEEN DREAMED ALL HIS LIFE.

    Reply