பொதுமக்கள் இழப்பு குறித்து சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது கொழும்பிலுள்ள ஐ.நா.பிரதிநிதி கூறியதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை

வன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட இணைப்பாளரும் மனிதநேய இணைப்பாளருமான நெய்ல் புனே தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே நெய்ல் புனே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் நடைபெறும் மோதல்களின் இழப்புகள் தொடர்பாக ஐ.நா.வால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2,683 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,241 பேர் காயமடைந்துமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமை எதுவித நம்பகத் தன்மையானதோ, சுயாதீனமான தகவல்களைக் கொண்டோ வெளியிடப்படவில்லையென அமைச்சர் ரோஹித போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுமக்களின் இழப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையும் முழுப்பொய்யென அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதிவரை 4,120 காயமடைந்த பொதுமக்களும் 1,485 பராமரிப்பாளர்களும் கப்பல் மூலம் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனரெனவும் வெளிவிவகார அமைச்சின் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 17 ஆம் திகதி ஐ.சி.ஆர்.சி.யினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அன்றைய திகதியில் காயமடைந்திருந்த அனைவரும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் 7,241 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுவது நம்பத்தகுந்ததல்ல என்ற காரணத்தினாலலேயே அந்த அறிக்கையை அரசு நிராகரித்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை, வெளிநாட்டு உதவி அமைப்புகளின் கருத்தின் அடிப்படையிலேயே தனது அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அதிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த தொகை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் நெய்ல் புனேதெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *