கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் உயர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரனை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.  மேற்படி கடத்தல் சம்பவமானது யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்பதாகும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;  யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் கடத்தப்பட்டமையால் மாணவர்களின் கல்வி நலனும் பல்கலைக்கழகத்தின் இயல்பு நிலையும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்விச் சமூகம் மீது இவ்வாறான கொடுமையான நடைமுறைகளையும் அணுகுமுறைகளையும் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி வேண்டுகின்றோம். அவரை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.செ.கஜேந்திரனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *