தற்காலிக தாக்குதல் நிறுத்தம்: நிபந்தனைகளுடன் பரிசீலிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு

krambukkela.bmpஇலங்கையின் போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் மனிதாபிமான நலனுக்கான தற்காலிக தாக்குதல் நிறுத்தம் ஒன்று தேவை என்ற ஐ.நா. மன்றக் கோரிக்கை தமது நிபந்தனைக்கு அமைய பரிசீலிக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.மன்ற கோரிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை அரசின் பாதுகாப்பு விவகரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல,  நிஜமான பலன் ஏற்படும் என்றால் மட்டுமே அப்படி ஒரு தாக்குதல் நிறுத்தம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை வெளிவர விடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அரசாங்கம் வழங்கிய 48 மணிநேர அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக கூறுகையில் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இருபது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையும்,  மற்றும் சர்வதேச சமூகமும் தெரிவிக்கும் ஆலோசனையான மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் என்னவகையான மாதிரிகள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் எதுவும் குறிப்பிடாதபோதிலும் களநிலைமைகளுக்கு ஏற்ப அவை நேரத்துக்கு நேரம் மாற்றமடையும் என்று கூறியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில்,  அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒத்தாசையுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபை மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அறிவுறுத்தியிருந்ததுடன்,  புலிகளையும் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் அரசாங்கம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மோதல் இடைநிறுத்தம் பரிசீலிக்கப்படுமே தவிர,  வேறுவகையான செல்வாக்கின் அடிப்படையிலோ அன்றேல் அழுத்தத்தின் அடிப்படையிலோ அமையமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரை கொல்லும் பிரதேசமாக மாறியுள்ளது.

அதனால், அவர்கள் காயமடைந்து வருகின்றனர். சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்கள் திருப்பித் தாக்குவதில்லை. நாங்கள் எதிரிக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்வற்றை நிறுத்தி விட்டோம். காரணம் சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான். ஆனால், புலிகள் இதனை வாய்பாகக் கொண்டு மக்களுக்கு பின்னால் மறைந்திருந்து படையினரைத் தாக்குகின்றனர்.

இந்தக் கட்டத்தல் யுத்த நிறுத்தத்துக்கு அரசாங்கத்துக்கு எவ்வித ஆர்வமும் கிடையாது. சிவிலியன்கள் பாதுகாக்கப்பட்ட பின்னர் புலிகளை படையினர் அழித்தொழிப்பார்கள் என்றார். 

மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்தால் தற்காலிக மோதல் நிறுத்தம் சாத்தியம் – இலங்கைக்கான ஐ.நா.நிரந்தர பிரதிநிதி பளிகக்கார

இலங்கையில் வடக்கு பகுதியில் மோதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலி யுறுத்திவரும் நிலையில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்தால் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இணங்குவது சாத்தியமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தமக்களை (தமிழ்பொதுமக்கள்) வெளியேற புலிகள் அனுமதியளிக்க தயாரெனில் குறைந்தது அவர்களில் ஒரு பகுதியினரையாவது செல்வதற்கு அனுமதியளித்தால் தற்காலிக சண்டைநிறுத்த அனுசரணையை வழங்க அரசாங்கம் இணங்கக்கூடும் என்று ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி எச்.எம். ஜி.எஸ் பளிகக்கார கூறியுள்ளார்.

இதனை குறுகியகால இடைநிறுத்தம் என்றோ அல்லது அரசு முன்னர் வழங்கிய 48 மணிநேரம் என்றோ கருதமுடியும் என்று நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் வைத்து அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

புலிகள் அவர்களை வெளியேறவிடவில்லை என்பதே இந்த விடயமாகும். அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பளிககார கூறியுள்ளார்.

புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயம் முழுமையாக சுற்றிவளைப்பு. மக்களை பாதுகாப்பாக விடுவிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்கிறார் இராணுவப் பேச்சாளர்

srilanka_army1.jpgபுலிகளின் சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகள் ஊடுருவியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள அதேசமயம், சகல முனைகளிலும் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும், தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத விதத்திலும் கடற்பரப்பிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார்.கடற்படையினர் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கடற்பரப்பிலும் புலிகள் தப்பிச் செல்ல முடியாத விதத்தில் நான்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஐ. சி. ஆர். சி. யின் ஒத்துழைப்புடன் இதுவரை புலிகளின் பிடியிலிருந்து பதினைந்து தடவைகள் சுமார் ஆறாயிரம் வரையிலான பொதுமக்களை கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தற்பொழுது புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிகேடியர் உதய நாணக்கார மேலும் தகவல் தருகையில்,புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 59,441 பொது மக்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தப்பிவரும் பொது மக்களின் வருகையை தடுக்கும் வகையில் புலிகள் பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும் தப்பி வரும் பொதுமக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எஞ்சியுள்ள பொது மக்களையும் எவ்வாறாவது பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் தமது சகல வளங்களையும், பலத்தையும் நாளுக்குநாள் முழுமையாக இழந்து வருகின்றனர். புலிகள் சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதுடன் பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் பதில்தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளனர் என்றார்.

புதுமாத்தளன் வடபகுதியில் நிலைகொண்டுள்ள கிராமத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், பிரசன்ன டி சில்வா தலைமையிலான படையிலும், இரணைப்பாலைக்கு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கே நிலைக் கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான படையினரும் தமது நிலைகளை நாளுக்குநாள் விஸ்தரித்துவருவதுடன் புலிகளின் மண் கரண்களையும் கைப்பற்றிவருகின்றனர்.

மூன்று படைப்பிரிவுகளுக்கும் உதவியாக கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான இராணுவத்தின் எட்டாவது விசேட படைப்பிரிவும் களமுனையில் ஈடுப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் தினங்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் படையினர் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • thamilan
    thamilan

    புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் ஆட்கள் சிலர் கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இவர்களின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது.

    புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவர்கள் முதலில் அங்குள்ள சிறுகடல் பகுதியூடாக சென்று அதற்கு அப்பாலுள்ள இராணுவத்தினரின் காவல் நிலைகளுக்கு சென்று சேருகின்றனர். இவ்வாறு செல்லும் மக்களை முதலில் சிறுகடலின் கரைப்பகுதியில் தம்மிலிருந்து 50மீற்றர் தொலைவில் நிறுத்தி ஆண்கள் பெண்கள் அனைவரையும் உடைகளை கழற்றுமாறு சொல்கின்றனர் (உடலில் வெடிமருந்துடன் வந்துள்ளனரா என பரிசோதிக்க) இதில் கொடுமை என்னவெனில் பெண்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரின் முன்னும் முற்றிலுமாக நிர்வானப்படுத்தப்படுவதுதான். இக்காட்சியை புலிகளின் பகுதியிலிருந்து புலிகள் ஏதும் செய்யமுடியாத நிலையில் மனக்கொதிப்புடன் தொலைநோக்கியில் அவதானித்துள்ளதுடன் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் காட்டியுள்ளனர்.

    இதன் பின்னர் உள்ளே அழைத்துச் செல்லப்படுவதுடன் இந்தக் கொடுமை முடிகிறதா என்றால் அதுதான் இல்லை. உள்ளே சென்றதும் வந்த அனைவரினதும் உடமைகள் அனைத்தும் முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கொண்டுவந்த பணம் நகை என்பன இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் அவ்கள் அனைவரும் நிர்வானமாக்கப்பட்டு (ஆண்கள் பெண்கள்) 100 மீற்றர்கள் நடக்கவிடப்படுகின்றனர். இதனை 20 மீற்றர் தூரத்திலிருந்து இராணுவத்தினர் பார்த்து இரசிக்கின்றனர். அதன்பின்னர் உடைகளை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். பின்னர் ஒரு சி.டி.எம்.ஏ தொலைபேசி ஒன்றை கொடுத்து அவுட் ஸ்பீக்கரில் விட்டு அவர்களிடமிருந்து ஒரு இலக்கத்தை பெற்று அதற்கு டயல் செய்து கொடுக்கின்றனர். அதில் தாம் சுகமாக வந்து சேர்ந்து விட்டதாகவும் ஏனையவர்களையும் வருமாறு சொல்லி கதைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னர் இவர்கள் அனைவரையும் வாகனத்திலேற்றி தர்மபுரம் விசுவமடு கிளிநொச்சி ஒட்டுசுட்டான் எனப்பிரித்து இரண்டு கிழமைகள் ஆண்களை அங்குவைத்து மரந்தறித்தல் காவலரன் அமைத்தல் போன்ற வேலைகள் செய்விக்கின்றனர். பெண்கள் அங்குள்ள கொமான்டர்களின் ஒருநாள் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புலி என்றும் புலிச்சந்தேக நபர் என்ற போர்வையிலும் பலர் காணாமல் போகின்றனர். இதன்பின்னரே இவர்களி எஞ்சியோர் முகாங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களை இங்குவைத்து வேலைவாங்குவோர் சிங்களம் தெரிந்த புலிகளின்பிரதேசத்திலிருந்து சென்றவர்களாவர்

    இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் 100 வீதம் உண்மையானது தகவல் தந்தவரின் பாதுகாப்பு கருதியும் தகவல் கிடைத்த ஊடகத்தின் இரகசியத்தன்மை கருதியும் தகவல் கிடைத்த வழியை இங்கு குறிப்பிடவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழன்; இராணுவம் இளம் பெண்களின் தொப்புளில் பம்பரம் விட்ட கதையை ஏன் எழுதவில்லை. அதை மறந்து விட்டீர்களா?? இல்லையேல் இன்னும் ஏதாவது கற்பனையில் தோன்றும் போது சேர்த்துக் கொள்ளலாமென விட்டு விட்டீர்களா??

    Reply