இவ் வருடத்தில் மேலும் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று தெரிவித்தது. மின்சார இணைப்புப் பெறுவதற்கு விண்ணப்பித்து 2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் மக்கள் எதுவித இடைஞ்சலும் இன்றி மின்சார வசதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதோடு மின்சார இணைப்பு பெறுவதில் உள்ள தனிப்பட்ட மற்றும் வேறு காரணங்களுக்கு பிரதேச செயலகங்களினூடாக துரித தீர்வு காணவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் 80 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இவற்றில் பிரச்சினைகள் உள்ள சுமார் 2600 விண்ணப்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மின் இணைப்பு வழங்குவதில் வீடுகளுக்கு அருகில் உள்ள பாதைகள் தொடர்பான பிரச்சினைகள் பிரதேச செயலகங்களின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.
சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்கும் வகையில் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பெருமளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஈரான், சீடா மற்றும் ஆசிய அபிவிருத்தி கிராமிய மின்சார திட்டம் என்பவற்றினூடாகவும் மேலும் பல திட்டங்கள் முன்னெடுத்து வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இவற்றினூடாக இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
மின்சார நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல பாரிய மின்சாரத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு அவை 2012 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளன. இதனூடாக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சு கூறியது.
இத்திட்டம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. சுண்ணாகம் 30 மெகா வோர்ட் மின்சாரத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதனூடாக யாழ். குடா மக்களுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.