வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. எனினும் அரச கடமையின் நிமித்தம் நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்கின்ற திணைக்களத் தலைவர்கள் முக்கிய அதிகாரிகள் தமது வாகனங்களில் இந்த சோதனைச்சாவடி ஊடாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி இப்போது மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் முக்கிய அலுவல்களுக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய அரச அதிகாரிகள், ஊழியர்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகப் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.