கிளிநொச்சி முல்லைத்தீவில் 60 000 மாணவர்களில் 45 000 (75 வீதம்) மாணவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. வன்னியின் கல்விச் சமூகம் சிதறடிக்கப்பட்டு உள்ளது. : புன்னியாமீன்

students-vavuniya.jpgசுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக் காலம்வரை இலங்கையில் கல்வித்துறையால் முன்னேறிய சமூகமாகவே ஈழத்தமிழ்ச் சமூகம் காணப்பட்டு வந்தது. கல்வியால் தமிழன் சாதித்தவை ஏராளம். தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கு உந்துசக்தியாகவும், அத்திவாரமாகவும் இருந்த மூல காரணி கல்வியாகும். இதில் விவாதத்துக்கு இடமேயில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் யுத்தநிலை காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கல்விநிலை அவ்வப்போது பாதிப்புக்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. ஆனாலும் யுத்த நிலைகளின் போதும் பெருமளவுக்கு கல்வி நிலையில் இழப்பு ஏற்பட்டது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், இக்கால கட்டங்களில் ஏற்பட்ட சரிவுகள் ஏதோ ஒரு வகையில் சீர்செய்யப்பட்டு வந்தே உள்ளன. 1980களுக்கு முற்பட்ட கால கல்வி நிலையுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் கூட, சரிவின் மத்தியிலும் கல்விநிலை முழுமையாக வீழ்ந்து விடாது பேணப் பட்டுள்ளது. இருப்பினும் யுத்தநிலையின்போது கல்விக்கான அடிப்படை வசதிகள் இழக்கப்பட்டமை மாணாக்கரின் மனோ நிலையில் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆரம்பகால கல்வி நிலைகளுடன் ஒப்புநோக்க தடைகளாகவே காணப்படுகின்றன.

ஆனால், இன்றைய நிலை மிகவும் நேர்மாற்றமானது. இன்று தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை. முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். மக்களே இல்லாத நிலையிலும் யுத்தம் உக்கிரமமடைந்துள்ள நிலையிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விளையும் மக்களுக்கு கல்வியைப் பற்றி சிந்திக்க முடியாத நிலை அங்குள்ளது. உயிர் இருந்தால்தான் ஏனையவை என்ற நிலை அங்கு. மேலும், மடு, வவுனியா வடக்கு (நெடுங்கேணிக் கோட்டம்) ஆகிய கல்வி வலயங்களிலும் பாடசாலைகள் இயங்காமல் இருக்கின்றன.

இதுகாலவரை நடந்த யுத்தநிலைகளுடன் ஒப்புநோக்கும் போது இரு பிரதான மாவட்டங்களிலும் சில கல்வி வலயங்களிலும் ஒருமித்து பாடசாலை இயங்காத நிலை ஏற்படவில்லை. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும், வலயங்களிலும் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க முடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

யுத்தம் உக்கிரமமாக நடைபெற்றுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 10 இடைத்தங்கல் முகாம்களிலும், மன்னாரில் அமைக்கப் பட்டுள்ள 02 இடைத்தங்கல் முகாம்களிலும், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 இடைத்தங்கல் முகாம்களிலும் அறைகுறையாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் கல்வியினைத் தொடர்ந்து வருகின்றனர். யாழ்ப்பாண, மன்னார் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத் தங்கல் முகாம்களைவிட வவுனியா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் மாணவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுகின்றனர். வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பு உத்தியோகத்தரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திருவாளர் த. மேகநாதன் அவர்களின் அறிக்கைபடி 2009 ஏப்ரல் மாதம் 01ம் திகதிவரை வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர் தொகையும், ஆசிரியர் தொகையும், அதிபர் தொகையும் கீழே தரப்பட்டுள்ளது.

01. இடைத்தங்கல் முகாம் – வ/ தமிழ் மத்திய  மகா வித்தியாலயம் –   மாணவர் தொகை 1020 – ஆசிரியர் தொகை 43 – அதிபர் தொகை 06

02. இடைத்தங்கல் முகாம் – வ/ சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் – மாணவர் தொகை 558 – ஆசிரியர் தொகை 34 – அதிபர் தொகை 06

03. இடைத்தங்கல் முகாம் – வ/ காமினி வித்தியாலயம் – மாணவர் தொகை 379 – ஆசிரியர் தொகை 13 – அதிபர் தொகை 00

04. இடைத்தங்கல் முகாம் – வ/ பூந்தோட்டம் ம.வி – மாணவர் தொகை 395 – ஆசிரியர் தொகை 16 – அதிபர் தொகை 04

05. இடைத்தங்கல் முகாம் – வ/ கோவில்குளம் இந்துக் கல்லூரி – மாணவர் தொகை 337 – ஆசிரியர் தொகை 11 – அதிபர் தொகை 03

06. இடைத்தங்கல் முகாம் – வ/ முஸ்லிம் ம.வி – மாணவர் தொகை 394 – ஆசிரியர் தொகை 11 – அதிபர் தொகை 02

07. இடைத்தங்கல் முகாம் – வ/ நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் –  மாணவர் தொகை 731 – ஆசிரியர் தொகை 17 – அதிபர் தொகை 02

08. இடைத்தங்கல் முகாம் – வ/ செட்டிக்குளம் ம.வி – மாணவர் தொகை 629 – ஆசிரியர் தொகை 22 – அதிபர் தொகை 02

09. இடைத்தங்கல் முகாம் – வ/ அருவித்தோட்டம் சிவானந்தா – மாணவர் தொகை 173 – ஆசிரியர் தொகை 07 – அதிபர் தொகை 01

10. இடைத்தங்கல் முகாம் – கல்வியியற் கல்லூரி – மாணவர் தொகை 1509 – ஆசிரியர் தொகை 58 – அதிபர் தொகை 14

11. இடைத்தங்கல் முகாம் – தொழில்நுட்பக் கல்லூரி – மாணவர் தொகை 818 – ஆசிரியர் தொகை 15 – அதிபர் தொகை 00

12. இடைத்தங்கல் முகாம் – பம்மைமடு வளாக விடுதி – மாணவர் தொகை 1041 – ஆசிரியர் தொகை 43 – அதிபர் தொகை 04

13. இடைத்தங்கல் முகாம் – கதிர்காமர் வித்தியாலயம் – மாணவர் தொகை 1860 – ஆசிரியர் தொகை 133 – அதிபர் தொகை 03

மொத்தம் 9844 மாணவர்களும், 423 ஆசிரியர்களும், 47 அதிபர்களும் இருக்கின்றனர். 

இந்த இடைத்தங்கல் முகாம்களின் நிலைப்பாடுகள் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் த. மேகநாதன் அவர்களுடன் கலந்துரையாடிய போது பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தன.

வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் நிலைப்பாடுகள்

students-vavuniya01.jpgமேற்குறிப்பிட்ட இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் கதிர்காமர் வித்தியாலயம் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் முறைசார் கல்விமுறைக்கமைய கற்பிக்க முடியாமல் உள்ளதென தெரியவருகின்றது. விசேடமாக பெரும்பாலான இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கொண்டே கற்க வேண்டியிருக்கின்றது. மேலும், இடைத்தங்கல் முகாம் பாடசாலைகள் சுமார் 03 மணிநேர சுழற்சி அடிப்படையில் இயங்குகின்றன. உரிய பாடங்களுக்கான உரிய ஆசிரியர் இன்மையாலும், அடிப்படை வசதிகள் இன்மையாலும் இங்கு முறைசார் கல்வி நிலையைப் பேணுவது கடினமாகக் காணப்படுகின்றது. இதை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் மாணவர்கள் கற்றவற்றை மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இங்கு பாடசாலைகள் செயல்படுகின்றனவே தவிர முழுமையான கல்வியை போதிப்பதென்பது பின்னிலையாகவே உள்ளன.

இப்பாடசாலைகளில் கற்றல் தொடர்பான செயற்பாடுகளை அவதானிக்கும்போது இட நெருக்கடி மற்றுமொரு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் இடப்பெயர்வுக்கு உட்படுபவர்கள் தங்கவைக்கப்படுவதினால் இப்பிரச்சினை மேலும் வலுவடையக் கூடிய நிலையுள்ளது.

எல்லாவற்றையும்விட இடைத்தங்கல் முகாம் மாணவர்களின் மனோநிலை கற்றலுக்குரிய நிலைப் பாட்டினை வெளிப்படுத்தக் கூடியதாக இல்லை. உறவுகளை இழந்து, உறவுகளைப் பிரிந்து பாரிய மன அழுத்தங்களுக்கு உட்பட்ட நிலையில் இம்மாணவர்கள் காணப்படுகின்றனர்.

இம்மாணவர்களுக்காக வேண்டி அரசாங்கம் இலவச பாடநூல்களை விநியோகித்துள்ளது. அத்துடன், இலவச சீருடைகளையும் வழங்கியுள்ளது. சில முகாம்களில் மதிய உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இம்மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உசாத்துணை நூல்கள், அப்பியாசப் புத்தகங்கள், தைத்த உடுதுணிகள், கல்வி உபகரணங்கள் மாணவர்களின் சில அத்தியாவசிய தேவைப் பொருட்கள் போன்றவற்றை அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஓரளவுக்கு நிறை வேற்றுகின்றன.

ஆனாலும் இவைகள் மாணவர்களின் முழுமையான தேவைகளையும் ஈடேற்றத்தக்க வகையில் உள்ளதா என்பது கேள்விக் குறியே.

இடைத்தங்கல் முகாம்களில் கல்வி நெருக்கடிகள்

இதனை இரண்டு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதலாது: இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் நிரந்தரமாக கற்று வந்த மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மையினால் இப்பிரதேசத்தில் நிரந்தர மாணவர்கள் பாதிப்புக்களுக்குட்பட்டுள்ளனர். மேலும், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் இங்கு ஏற்கனவே கல்வி கற்ற பயிற்சி ஆசிரியர்களினதும், தொழில்நுட்ப மாணவர்களினதும் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளில் முறைசார் கல்விக்கமைய கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய கல்விப் பாதிப்புகள்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மாணாக்களின் கல்வி சார் நடவடிக்கைகளை அளவிடக்கூடிய அளவுகோலாக மூன்று பிரதான அரசாங்க பரீட்சைகள் அமைகின்றன.

01. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
02. க.பொ.த (சாதாரண தர) பரீட்சை
03. க.பொ.த (உயர்தர) பரீட்சை

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மிக முக்கியமான பிரச்சினை மேற்குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வதென்பதாகும். புறக்கிருத்தியங்களை செயல்படுத்தக் கூடிய வாய்ப்புகளே இங்கில்லை. மறுபுறமாக கல்விசார் வெளிச்செயற் பாடுகளை அல்லது உசாத்துணை வழிகாட்டல் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. மேற்குறிப்பிட்ட நிலைகளின் பின்னணியில் பரீட்சைகளுக்கு மாணாக்கரைத் தயார் செய்வதென்பது விசாலமான பிரச்சினையாகும்.

இந்நிலைகளை ஒப்புநோக்கும்போது  இடப் பெயர்வுகளுக்கு உட்பட்டுள்ள மாணாக்கரின் எதிர்காலம் பலமாக சிந்திக்கப்படக் கூடியதொன்றாகும்.

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி; முல்லைத்தீவு மாவட்டங்களிலும், மடு வவுனியா வடக்கு கல்வி வலயங்களிலும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றதாகக் கூறப்படுகின்றது. இந்த 60,000 மாணவர்களுள் 20%க்கும் குறைவான மாணவர்களே வவுனியா,  மன்னார், யாழ்ப்பாணம் இடைத்தங்கல் முகாம்களில் கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர். அப்படி என்றால் மீதமான 80% பங்கு மாணவர்களின் நிலையென்ன? அவர்களில் எத்தனை பேர் உயிருடனிருக்கின்றார்கள்? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? யுத்தப் பிரதேசத்தில் எத்தனை மாணவர்கள் இருக்கின்றார்கள்? போன்ற வினாக்களுக்கு விடை காண்பதென்பது தற்போதைய சூழ்நிலையில் இயலாததே.

இத்தகைய நிலைகளைப் பார்க்கும்போது யுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் சரி, யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சரி. ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை நிரப்ப பல தசாப்தங்கள் போராட வேண்டியிருக்கும்.

எனவே, ஏற்பட்டு வரும் கல்வி இடைவெளியை ஓரளவாவது சீர்செய்ய எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றோம். குறைந்த பட்சம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மாணவர்களுக்காவது முறைசார் கல்விக்கான வழிமுறைகளை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த முடியுமா?

அரசாங்கப் பரீட்சைகளை எதிர்நோக்கவுள்ள மாணவர்களை கல்விசார் நடவடிக்கைகளை ஊக்குவிக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட இரு வினாக்களுக்கும் விடை காண வேண்டியது காலத்தின் தேவையாகும்.

யுத்தம் பலவழிகளிலும், பல துறைகளிலும் பாரிய பின்னடைவுகளையும், பாரிய இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதை யாருக்கும் மறுக்க முடியாது. இந்த இழப்புகளுடன் ஒப்புநோக்கும்போது கல்வித்துறை  இழப்பு என்பது ஒரு சிறு விடயம்தான். ஆனாலும் ஒரு சமூக எழுச்சிக்கான வித்தினையிடும் அத்திவாரமென்பதை யாராலும் மறுக்க முடியாது.                              

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

3 Comments

 • kula
  kula

  வன்னிப் பிள்ளைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பால் இருக்வே மக்கள் செய்தனர் புலிகள் தமது பிள்ளைகளை பிடித்து போய்விடுவார்கள் என்றும் புலிகளக்கோ பள்ளிக்கு போவதைவிட சண்டையில் அடிபட்டுசாவதே மேல் என்ற புராதன பிற்போக்கு தத்தவம் பேசுகிறார்கள். இத தான் வன்னிப் பிள்ளைகளை திட்டமிட்டு அவர்களது கல்வியை அழித்தமுறை

  பிரிட்டனில் தற்போத இவற்றை நியாயப்படுத்தும் இவர்கள் பிரிட்டனில் ஜனநாயகம் பேசுகிறார்கள்.

  Reply
 • thurai
  thurai

  வன்னிப்பிரதேசமே, தமிழீழம் என்பது சாத்தியமாவதற்கு முதுகெலும்பான் பிரதேசமாக் இருந்த்து. இப்பிரதேசத்தை தமது புகலிடமாக் புலிகள் அமைத்தனரே தவிர தமிழர்களிற்கோ, வன்னிப்பிரதேசத்திற்கோ பயனுள்ளவர்களாக அங்கு குடிகொளளவில்லை.

  புலிகளாலும் இராணுவத்தாலும் சீரழிக்கப்பட்ட வன்னிப்பிரதேசத்தை திரும்பவும் கட்டியெழுப்ப இலங்கையிலும் புலத்திலும் வாழும் தமிழர் அனைவரும் முழு மனத்துடன் செயற்படுவது அவ்சியம்.

  துரை

  Reply
 • பல்லி
  பல்லி

  துரை உங்கள் பின்னோடம் அனைத்தும் மிக அனுபவம் உள்ளதாகவே உள்ளது. ஆகவே எதிர் பின்னோட்டம் விடுவதை விட்டு எதிர்காலத்தில் எம் மக்களுக்கு எம்மால் என்ன முடியும் என்பதை சிந்திக்கலாமே. இது பல்லியின் அன்பான வேண்டுகோள் மட்டுமல்ல உங்களது கடமையும் கூட. பல்லியைபோல்…… பின்னோட்டங்களை விட்டு எமது இனத்துக்கா ஏதாவது செய்யவும். எம்மால் முடிவது வேறு. தங்களால் முடிவது வேறு. இருப்பினும் தங்களை போல் அனுபவசாலிகளும் தமிழன் போன்றோருக்கு இலுப்பெண்ணை தடவினால் தமிழர் நிலைதான் என்ன??

  Reply