நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தை ஏற்படுத்த நடவடிக்கை -வெளிவிவகார அமைச்சர்

rohitha_bogollagama_.jpgஇலங்கை யில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் வேலைத்திட்டம் வெற்றியளித்து வருகின்றது. நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கட்டார் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கையில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்வதில் கட்டார் மிகவும் ஆர்வமாக உள்ளது. தற்போதைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான ராஜாங்க அமைச்சர் காலித் பின் மொஹம்மட் அல் அத்தியா தலைமையிலான தூதுக்குழுவினரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது :

“இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய தொடர்புகள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பில் அதிகமான அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டார் அரசாங்கம் பாரிய ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக அவருக்கு விளக்கிக் கூறினேன். இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது. முக்கியமாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கட்டார் அரசாங்கம் இலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கின்றது. அது தொடர்பில் கட்டார் அமைச்சருடன் மிக நீண்டநேரம் கலந்துரையாடினோம். அதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். அனைத்து விடயங்களும் சரியாக அமைந்தால் விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

இலங்கையில் கட்டார் நாட்டின் வங்கி ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அதற்குச் சாதகமான பதிலை வழங்கினார். எனவே அதற்கான சாத்தியங்களும் மிக அதிகமாகவே உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்துக்கு 36 தடவைகள் விமான பயணங்கள் இடம்பெறுகின்றன. அதனை மேலும் விருத்தி செய்யவுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் அதனை செய்ய முடியும். கட்டாரில் பணிபுரிகின்ற இலங்கை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கக் கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சரின் இலங்கை விஜயமானது மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

கட்டார் அமைச்சர் கருத்து

செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட கட்டார் அமைச்சர் காலித் பின் மொஹம்மட் அல் அத்தியா கூறுகையில்,  இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராய்ந்தோம். ஆரம்ப காலத்தில் எமக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அதிகளவிலான சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. அதனை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விசேடமாக சுற்றுலாத்துறை மற்றும் மின்சக்தி தொடர்பில் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது” என்றார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *