மதுபானக் கடைகள் 13, 14 இல் மூடப்படும்

புத்தாண்டு காலப் பகுதியில் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கலால் அத்தியட்சகர் பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களில் மேற்கொள்ளப்பட்ட 1179 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1208 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகளில் சகல மதுபானக் கடைகளும் மூடப்படும். அந்தக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்த கலால் திணைக்கள அத்தியட்சகர், நாடு முழுவதும் திணைக்கள அதிகாரிகள் விசேட கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுபானத்தையும், மதுபாவனையையும் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இது மக்கள் மத்தியில் பெருவரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படுவதால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள், கசிப்பு உற்பத்தி செய்வோர் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் புத்தாண்டு தினங்களில் மதுபோதையில் நடமாடுபவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *