இலங் கையில் நடைபெறும் சண்டையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், போரஸ் மன்னரை அலெக்ஸாண்டர் நடத்தியதைப் போல கெளரவமாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட நடைபெறும் போரைத் தடுத்து நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வாதாடுவதை விட்டுவிட்டு, போருக்கு முதல்வரே முடிவுரை எழுத முற்றப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பேசிய பேச்சு தொடர்பாக, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, இது மிகப்பெரிய இனத் துரோகம் என்று கண்டித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்ப்டடால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றும் இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பேசிய வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வைகோ, தமிழகம் கொந்தளிக்கும் என்று மத்திய, மாநில அரசுகளை நல்லெண்ணத்தோடு எச்சரித்ததாக விளக்கமளித்துள்ளார்