அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வட்டுக்கோட்டையில் பொலிஸார் தாக்கி இளைஞன் மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ”சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே மரணத்தை தழுவியுள்ளார். இது நடந்திருக்கவே கூடாத கொடிய துயர் நிகழ்வு.

 

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. உண்மைகள் கண்டறியப்பட்டு நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும்.

 

மரணமடைந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் படும் இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன் ஆறுதலும் ஆழ்மன அஞ்சலியும்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று(11) இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களையும் பேசியிருந்தார்.

“பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு உலக அளவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்காக சென்றிருந்த காலத்திலேயே என்னால் உணரக்கூடியதாக இருந்தது” என்ற விடயத்தினையும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன், அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த காலத்தில் அவர்களது போராட்டத்திலும் பங்கெடுத்திருக்கிறேன்” என்ற தனது அனுபவத்தினையும் அவர் இந்த வேளையிலே பகிர்ந்திருந்தார்.

“எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ பி ஆர் எல் எவ் அமைப்பும் கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது, போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல  தம் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் அவர்கள் . ஒரு கையில் ஒலிவ மரக்கிளையும், மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம், எது வேண்டும் என்று அன்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது.

ஆம், ஒலிவமரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம், சமாதானம் வேண்டுமா யுத்தம் வேண்டுமா என்று விடுதலைக்கான முழு முனைப்பையும் வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர் கூறிய அத்தகைய வழிமுறையே, சிறந்ததென நானும் கருதியிருந்தேன், பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு. இன்று போர் மேகங்கள் அங்கு சூழ்ந்துள்ளன, இரு தரப்புமே பொது மக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும், அதேபோல் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிரந்தர சமாதானம் அங்கு நிலவ வேண்டும். மேலும் பாலஸ்தீனத்தில் மாத்திரமல்லாமல் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமென்ற நிலை எல்லா இடத்திலும் நிலவ வேண்டும்.

 

அதேவேளை, பாலஸ்தீன விவகாரத்தினை போன்றே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான சரியான வழிமுறைகளை முன்கூட்டியே 30 வருடங்களுக்கு முன்னர் தன்னால் முன்மொழியப்பட்டபோது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தற்போது, பேரழிவுகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர் கலாசாலையின் பயிற்சி ஆசிரியர்களும் யாதார்த்தினை புரிந்து கொண்டு எமது எதிர்கால சந்ததியினரை சரியாக வழிநடத்த வேண்டும் எனபதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

“என்னுடன் கொண்டுள்ள அரசியல் பேதங்களை மறந்து வடக்கு கடற்றொழிலாளர்களின் துயரங்களை போக்க ஒன்றாகுங்கள்.” – தமிழ்தலைவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் !

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர்கள் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள், மற்றும் சட்டவிரோதமான இழுவைப்படகு உள்ளிட்ட மீன்பிடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியான கரிசனைகளைச் செலுத்தி வருகின்றறேன். மேலும் குறித்த விவகாரத்தினை தீராப்பிரச்சினையாக நீடித்துச் செல்வதற்கு இடமளிப்பதற்கு நான் விரும்பவுமில்லை.

ஆகவே, உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு அப்பால் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் பங்கேற்பைச் செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பல்வேறு அரச மற்றும் அரசியல் தரப்பினருடன் தொடர்புகள் காணப்படுகின்றன. அந்த தொடர்புகளின் ஊடாக எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

வெறுமனே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள், இலங்கை கடற்படை தாக்குகின்றது என்ற விடயத்தினை மையப்படுத்திய பிரசாரங்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாலும், இழுவைப்படகு உள்ளிட்ட சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பின்பற்றுவதாலும் ஏற்படுகின்ற இழப்புக்கள், வளப்பறிப்புக்கள் சம்பந்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் அன்றாட மற்றும் எதிர்கால நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதையும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்பினரும் தமிழகத்துக்கு தெளிவு படுத்தல்களை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கான முற்றுப்புள்ளியைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே உள்ளேன். எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நிரந்தரமானதுமான தீர்வினைப் பெறுவத்கு எனது ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்க தயாராகவே உள்ளேன்.

அதற்காக, வடக்கு தமிழ் பேசும் அரசியல் வாதிகள் கூட்டாக தமிழகத்துக்கு செல்வதற்கும், அவ்வாறு செல்கின்றபோது அரசியல் பேதங்களை மறந்து என்னையும் உள்ளீர்க்க விரும்பினால் நான் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன். மேலும், இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களும் தாம் தமிழகத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கன.” – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்பதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பாக நேற்று(16) ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த முன்னெடுப்புக்கள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக குறித்த ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், தொல்லியல் ஆய்வு செயற்பாடுகள் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்த வரலாற்றுத்துறை நிபுணர்களின் பங்குபற்றுதல் மற்றும் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, தொல்லியல் திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் சிலரின் விருப்பு வெறுப்பு சார்ந்த முன்னெடுப்புக்களாக அமைவதை அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறாளை முருகன் ஆலயம், கீரிமலை தீர்த்தக் குளம் மற்றும் பருத்தித்துறை இறங்கு துறை போன்ற பகுதிகளை, தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தி அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்ள்ளமை தொடர்பாக குறித்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், துறைசார் நிபுணர்கள், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் போன்ற யாருடைய கருத்துக்களும் உள்வாங்கப்படாமல் கொழும்பு அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானில் உள்ளடக்கப்பட்டுள்ள பறாளை முருகன் ஆலயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் தவறானவை என்பதை வரலாற்றுத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று, வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் சிலவும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு மாறாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைளை நிறைவேற்ற முடியும் என்ற ஈ.பி.டி.பி.கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு குறித்த ஆவணத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு சாத்தியமான 3 கட்டப் பொறிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக அரச காணிகளாகவே இப்போதும் காணப்படுகின்றமையினால், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் முதலீட்டில் கௌதாரிமுனையில் காற்றாலை திட்டம் – அபிவிருத்திக்குழு தொடரும் குழப்பம் !

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

கெளதாரிமுனை காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விடேச கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் – ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அதானி குழுமத்தின் முதலீட்டில் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழு இரண்டு கூட்டங்களில் குறித்த நிலையத்தின் நன்மை தீமைகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்ட பின்னர் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய அபிவிருத்திக் குழு கூட்டத்தின் முதல் பகுதி கூட்டம் குறித்த விடயத்தை உள்ளடக்கி இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து முரண்பாட்டினால் இடை நிறுத்தப்பட்டு இனிவரும் காலங்களில்  இடம்பெறுகின்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ். சிறீதரன், அங்கஜன் இராமநாதன், அதானி குழுமத்தின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

“தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும்.” – அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இன்று வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை அவர்கள் மாற்றியிருந்தனர். இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணத்தில் 2000 ஏக்கர் நிலம் வனவளபாதுகாப்பு திணைக்களத்துக்கு..? – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் எந்தவொரு காணியையும் அபகரிக்கும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லையென அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எவையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான வடயங்கள் பற்றி பேசும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம்” என அவர் தெரிவித்தார்.

இரணைமடு குளம் தொடர்பான தீர்மானங்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடமல் எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெறும் சிறுபோகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள், பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதில் சிறுபோக நெற்செய்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.