இச்சா

இச்சா

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )
கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக
இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன்.