எம் ஆர் ஸ்டாலின்

எம் ஆர் ஸ்டாலின்

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)