நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷ

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து !

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.

 

எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.” – நாமல் ராஜபக்‌ஷ

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.

அரகலயவின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

“52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு.“ -நாமல் ராஜபக்ஷ

“52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு.“என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தி டி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலையப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா? என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல்,

அது தவறானது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை.

நாங்கள் நாட்டை பொறுபேற்ற போது நாடு மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இருந்தது. துரதிஷ்டவசமான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, டொலர் கையிருப்பில்லாத காலப்பகுதியிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றோம் என்று பதிலளித்தார்.

ராஜபக்ஷர்களின் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போனதைப்போல்தான் எம்மாலும் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை பெறமுடியாமல் போனது. எப்போது பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறுமோ அப்போது நான் நமது கட்சியை வடகிழக்கில் வெற்றிபெற செய்வேன் என்று சொல்லியுள்ளேன். என்றும் கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய தந்தை சொல்வார் இந்தியாவும் இலங்கையும் உறவினர் என்று. உறவினர் என்பதால் ஏற்றம் இறக்கம் இருக்கத்தானே செய்யும். மோடியின் தமிழ் பேசும் விதமும் அப்பாவின் தமிழ் பேசும் விதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இதேவேளை எனக்கு டென்டுல்க்கரை எப்பவும் பிடிக்கும் யுவராஜையும் பிடிக்கும் இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா, அதேபோல் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் சிறுவர்களை அறிவாளிகளாக மாற்ற முயன்ற ராஜபக்சக்கள் மீது செனல்-04 செனலுக்கு பரம்பரை பிரச்சினை உள்ளது.” – நாமல் ராஜபக்ச விசனம் !

செனல் 4 செனலுக்கு மகிந்த ராஜபக்சவுடன் பரம்பரை பிரச்சினை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முல்கிரிகல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

டி.எம்.ராஜபக்ஷவுடன் நாங்கள் அரசியலைத் தொடங்கினோம். அதன்படி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எமது அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன. மகிந்த ராஜபக்ச 55 வருடங்கள் அரசியலில் இருந்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி பேசி நேரத்தை செலவிட மாட்டேன். 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நிலையும் இன்றைய மாவட்டத்தின் நிலையும் மக்களுக்குத் தெரியும். அப்போது, ​​இம்மாவட்ட குழந்தைகள், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மட்டுமே நினைத்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பல்கலைக்கழக அனுமதி பற்றி பேசுகிறார்கள்.

கடந்த காலத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தவில்லை. இதனால், உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இரண்டாம் தடவை பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிள்ளைகளுக்கும் ஏதாவது நீதி கிடைக்க வேண்டும். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பரீட்சைக்குத் தோற்றுவது இலகுவான காரியம் அல்ல. உயர்தரப் பரீட்சையே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கான ஒரே வழியாக மாறியுள்ளது. இந்த கல்வி முறை மாற வேண்டும். பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தின் நோக்கத்தை கற்பிக்காமல், உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையை மறுசீரமைக்கும் அதிகாரத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், மூன்று இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் போது அவர்களில் நாற்பதாயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்கின்றனர். அந்த பிள்ளைகளை அரச சேவையில் சேர்க்க முடியாது. ஏனெனில் ஆறு லட்சமாக இருந்த அரச சேவை பதினான்கு லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு இயந்திரத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவில்லை என்றால், புதிய அரசு ஊழியர்களை சேர்ப்பது நடைமுறையில் இருக்காது. எனவே எதிர்கால குழந்தைகளுக்காக நாம் என்ன செய்வோம்? அவர்கள் தனியார் பல்கலைக் கழகக் கல்வி அல்லது தொழிற்பயிற்சி பெற இடம் வழங்க வேண்டும். பயிற்சி நிலையங்களில் அந்த படிப்புகளுக்கு இடம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

இந்த சவாலை பார்த்த மஹிந்த ராஜபக்ஷ பசுமை பல்கலைக்கழகத்தை கட்டினார். கோத்தபாய ராஜபக்சவும் நகர பல்கலைக்கழகங்களை நிறுவ முயற்சித்தார் ஆனால் அது வெற்றியடையவில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தொழில் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நாங்கள் அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கிறோம். அண்மையில், நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை குறித்து விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தில் எவ்வளவோ விவாதம் செய்தாலும் கிராம மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை. நம் நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்யாத வரை, சர்வதேச நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டும். இதனால்தான் அம்பாந்தோட்டை, அனுராதபுரம், ஒயாமடுவ ஆகிய இடங்களில் மருந்துக் கிராமங்களை அமைக்க ஆரம்பித்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களாக விவாதித்து வருகிறோம். இந்த நாட்களில் சனல் 4 ஒரு திரைப்படம் காட்டப்படுகிறது. அந்த சனலுக்கு ராஜபக்சக்களுடன், குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் பரம்பரை பிரச்சினை உள்ளது. 2009-ம் ஆண்டு இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் பற்றிய திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம். அதனை ஓரளவு ஏற்றுக்கொண்டன. புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இராணுவம் பலவீனமடைந்தது. போர் வீரன் சிப்பாயாக மாறினான். இதனால், புலனாய்வு அமைப்புகள் வீழ்ந்தன. அவர்களின் தன்னம்பிக்கை குறைந்தது. அதன் முடிவைப் பார்த்தோம். போராட்டம் உருவாகும் போது அதைப் பற்றி அறிய உளவுத்துறை அமைப்புகள் இல்லை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் தகவல்கள் வழங்கப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. இன்றும் அந்த செனல் ராஜபக்சவுக்கு சேறுபூசுவதை விட நமது நாட்டின் புலனாய்வு அமைப்புகளை அழிக்கும் சதியை செய்து வருகிறது. இதனால் சிலர் அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள்.​

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மேடையில் சஹ்ரான் என்ற நபர் இருந்தார். தன்னைக் கொன்றவர்களின் தந்தை இப்ராஹிம் ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் உள்ளார். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்துவார்கள் என்று நினைக்க முடியாது.

எங்களிடம் ஒரு கொள்கை உள்ளது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமுறை அந்தக் கொள்கைகளை நவீனமயமாக்கி முன்னேற வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். தேசிய வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் நாம் அந்நியமாதலுக்கு எதிரானவர்கள். இந்த நாடு நவீன உலகத்தை சமாளிக்க வேண்டும். போராடியவர்களுடன் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. வீடுகளை எரித்தும், மக்களைக் கொன்றும் போராட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி அன்றைய தினம் 60000 இளைஞர்களைக் கொன்றது. 71,88,89 இளைஞர்களின் போராட்டம் தோல்வியடைந்தது. தனிநாடு உருவாக்க விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. நவீன உலகில் டிஜிட்டல் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடைசியில் பலனை இழந்துவிட்டது. இந்த நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கும் – ஜே.வி.பிக்கும் தொடர்பு உள்ளது.” – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ!

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

 

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

“அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரியது.” – நாமல் ராஜபக்ஷ

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

அதேவேளை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“நாமல் ராஜபக்ஷ அரசியல் அறிவு இல்லாத பிராய்லர் கோழி” – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.

“அவர் ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், அவர் வளர்ச்சியடையாத பிராய்லர் கோழி”

நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த வாரிசு அரசியலே காரணம். கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ராஜபக்சக்களுக்கு பதவி !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“உகாண்டாவில் சொத்து இருப்பதை உறுதிப்படுத்தினால் அதனை நாட்டுக்கு வழங்க தயார்.”- நாமல் ராஜபக்ஷ

தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகாண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூறப்படுகின்ற பொய் என்றும், உண்மையில் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.