பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்

பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா படகு விபத்து – அதிகாரத்திலுள்ள குற்றவாளிகளை விட்டுவிட்டு படகு இயக்கியவர்களை கைது செய்துள்ள பொலிஸார்!

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸாரினால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரினால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளளனர்.

குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பகுதியில் பாலம் கட்டப்படாமையே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை உடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

………………………………………………

உண்மையிலேயே குறித்த பாலம் கட்டப்பட்டிருக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்திருக்காது. இந்த உயிரிழப்புக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ’குற்றவாளி இதற்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆவார். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க தவறிய இவரே இந்த உயிரிழப்புக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவரும் இவர் தான். கைது செய்யப்பட வேண்டிய இவரை விட்டுவிட்டு நாட்கூலிகளை கைது செய்து அதிகாரிகள் வழமை போல அதிகாரத்துக்கு சாமரம் வீசியுள்ளனர். இது தொடர்பில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படுதலே இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யக்கூடிய இறுதியான வேண்டுதலாக இருக்கும்.

கிண்ணியா படகு விபத்து – நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை சரமாரியாக தாக்கிய மக்கள் !

குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள் கிண்ணியா படகு விபத்து – பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்து பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என குற்றம் சுமத்தியே மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.