பிரதமர் மஹிந்த ராஜபக்ச

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

“நாம் தோற்க மாட்டோம்.”- பிரதமர் மஹிந்த நம்பிக்கை !

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
‘நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.
தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” – பிரதமர் மஹிந்த

“இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (26) பிற்பகல் , கிரம – கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒஸ்திரிய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கிரம-கடுவான நீர் வழங்கல் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 34 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். வராபிட்டியவிலுள்ள கிரம நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று வெலந்தகொடவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து அப்பகுதியில் வசிக்கும் சுமார் 26,000 மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வலஸ்முல்ல, கிரம, கட்டுவன, மித்தெனிய வீதியில் 24 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை பொருத்தி குடிநீர்ப் பிரச்சினையை அதிக அளவில் தீர்ப்பதற்கு முடிந்துள்ளது.

சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரம பேருந்து நிலையம் மஹிந்த சிந்தனை புரநெகும திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து நிலையமானது ஆறு கடை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

நிகழ்வில் பிரதமர் மேலும் பேசிய போது,

எண்பத்தைந்து இடைத்தேர்தலின் போது நாங்கள் இங்கு வந்து கிரம பகுதியில் இருந்து பிரசாரம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் காலத்திலும் அதற்கு முன்னரும் உங்களது பெற்றோர், இந்த இளைஞர்களின் பெற்றோர் உள்ளிட்ட குழுக்கள் இந்தப் பிரதேசத்தில் எமக்கு ஆதரவளித்தனர். அதனுடன் இன்று பல புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக நம் அனைவருக்கும் தண்ணீர் தேவை. எமது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் இன்று காலை எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கும் தற்போது இப்பிரதேச மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துகிறார். மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம். ஏனெனில் அது எல்லா பக்கங்களிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்கும் பகுதிகளில், நோய் பாதிப்பு குறைவாக உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி முழு நாட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால் அன்று நாம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கின. சர்வதேச துறைமுகங்கள், விமான நிலையங்கள், இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் நம்மைப் பழிவாங்கும் எண்ணத்தில் கடந்த அரசால் நிறுத்தப்பட்டது. எதுவும் செய்யவில்லை. யாரை பழிவாங்கினார்கள்? இறுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களையும், மொனராகலை மாவட்ட மக்களையும் இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி நாடெங்கும் உள்ள எமது மக்களையே இவர்கள் பழிவாங்கினர்.

இன்று மீண்டும் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மை வென்று ஆட்சியை அமைத்துள்ளீர்கள். எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அரசாங்கத்தை அமைத்து சேவையாற்றி வருகிறார். இன்று காலை எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வில் நானும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டோம். இவ்வாறாக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு புதிய அபிவிருத்தி ஏற்படும். மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

எனவே, தொழில்துறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான புதிய திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டங்களையும், நாட்டின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அதன் மூலம் மக்களின் பல கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் இந்த நாட்டில் ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையிலும் செயற்படுத்தப்பட்டது. வடக்கு, தெற்கே, கிழக்கு அல்லது மேற்கு இந்த அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தியும் ஒரே சீரான முறையில் நடைபெற்ற யுகமொன்று எமக்கு இருந்ததில்லை.

எனவே, இப்பிரதேசத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த திரு.வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு இன்று நாம் குறிப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு. குறிப்பாக இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அபிவிருத்தி இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியாது.

எனவே அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் துறைகளை உருவாக்கி முன்னோக்கி செல்வோம் என்ற செய்தியை இந்த மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம். எனவே, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கட்டுவன-கிரம நீர் வழங்கல் திட்டம் உங்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

“மகிந்தராஜபக்ஷ அரசியலிலிருந்து விலக வேண்டும்.” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசில் பல கட்சிகள் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் ராஜபக்ஷக்களுடைய நடவடிக்கைகள் பங்காளிக்கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. முக்கியமாக அரசின் நிலை தொடர்பில் விமல் வீரவங்ச , மைத்திரிபால சிறீசேன, வாசுதேவநாணயக்கார ஆகியோர் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கும் போது அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்த போது ,

அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது, பதினொரு சகோதர கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாம் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம்.

அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தாலும் அவர் அரசியல் ரீதியாக செயலிழந்துள்ளார். அவர் அரசியல் மேடையிலிருந்து விலக வேண்டும் .
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் எதிர்பார்ப்புகளை அழித்து வருவதாகவும் நாணயக்கார தெரிவித்தார்.

“சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை .மக்களுக்கு உறுதியளித்தது போல் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி !

“சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை .மக்களுக்கு உறுதியளித்தது போல் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியாக தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு நாம் வாக்குறுதியளித்துவிட்டோம்.  அதேவேளை, புதிய அரசமைப்பும் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்துவிட்டோம். எனவே, இந்த இரு வாக்குறுதிகளையும் நாம் மீறவே முடியாது. முதலில் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தையும் அதன்பின்னர் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். அந்தக் கருமங்களிலிருந்து நாம் பின்னிற்கப்போவதில்லை.

20ஆவது திருத்தம் அவசியமற்றது என்ற மதத் தலைவர்களின் கோரிக்கையை நாம் கவனத்தில்கொள்கின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியையும் எமது அரசையும் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை நாம் ஏமாற்ற முடியாது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள குழுநிலை விவாதத்தின்போதும்  திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதன்போது உயர்நீதிமன்றத்தின் கட்டளையும் கவனத்தில்கொள்ளப்படும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி நாம் எதனையும் செய்ய முடியாது. ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை. அதைத் தவிர்க்கும் வகையில் சட்ட வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரமுனவின் தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும் ! – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மாபெரும் வெற்றி இந்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் – 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.

மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்.

இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும். இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது.

இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன். என்றார்.