மணிவண்ணன்

மணிவண்ணன்

பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கள தேசிய வளர்ச்சிக்கு மணிவண்ணன் துணைபோகிறார்.”- தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு !

சிங்கள தேசிய வளர்ச்சிக்கு மணிவண்ணன் துணைபோகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்“.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் தீர்மானத்தையும் மதிக்காமல் மத்திய குழு தேவை இல்லையென இருந்துவிட்டு தங்கள் முகமூடிகள் எல்லாம் பறந்து போயுள்ள நிலையில், அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என்பதை அனைவருமே வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மாநகரசபையில் தமிழினப் படுகொலை செய்ய பங்காளிகளாக இருந்த ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பதவிக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு இணைந்து செயற்படுவதால் இவர்கள் யார் என்று தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தைப் புனரமைத்து சிங்கள தேசியவாத வளர்ச்சிக்கும் இவர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர். அவரது வெளிநாட்டுப் பயணமும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தமிழ் தேசிய முலாம் பூசி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு காலமும் மறந்து போய் அதை தூசு தட்டமுற்படுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர் உருவாக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்கள் சட்ட மாணவர்களாக இருந்த போது இந்த கட்சியை உருவாக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மறைந்த பேராசிரியர் கென்னடி ஆகிய நான்கு பேருமே ஆகும்.

கட்சியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. அந்த நேரத்தில் ஒரு வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் .“ எனத் தெரிவித்துள்ளார்.

……………………………………………………………………………………………………………………………

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் சார்ந்த முனைப்பான போராட்டங்களை தென்னிலங்கை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழர்களுடைய நிலைப்பாடு என்ன.? அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன..? என்ற வினாக்களை தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளன. இந்த அருமையான சந்தரப்பத்தை பயன்படுத்த வேண்டிய ஒரு சூழல் உ்ள்ளது. மேலும் தமிழ் தலைவர்களுடை்ய முக்கியமான ஒற்றுமையுடன் கூடிய அசைவு இன்றியமையாததாகியுள்ள நிலையில் இன்னமும் இந்த தமிழ்தேசிய கட்சிகள் ஒன்று பட தயாரில்லை என்ற நிலையே நீடிக்கின்றது. கூட்டமைப்பில் அடைக்லநாதன் – சுமந்திரன் இடையேயான மோதல் போக்கு ஒரு புறம், எந்த கோட்பாட்டில் உள்ளார் என்றே தெரியாத விக்கி ஒருபுறம், இவர்களுக்கிடையில் சொந்த கட்சிக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க முடியாது தமிழ்தேசியத்தை பெற்றுத்தருவதாக தமிழர்களை வைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேலுமொரு பக்கம் என தமிழ் தலைமைகள் ஒவ்வாரு திசையில் பயணிப்பது கையில் கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்டது போலாகும். ஒற்றுமையுடன் கூடி செயற்பட்டு தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில் கடந்த கால தலைவர்கள் விட்ட அதே தவறை இன்றைய தலைவர்களும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பொருத்திருந்து பார்ப்போம்.., இவர்கள் எங்களை இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள் என்று..!

 

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் !

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது

அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார் யாழ். மாநகர முதல்வர் – மணிவண்ணனுக்கு எதிராக அவருடைய கட்சியினரே போராட்டம் !

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் செயற்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காதவிடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.