மஹிந்த யாப்பா அபேவர்தன

மஹிந்த யாப்பா அபேவர்தன

நிகழ்நிலைச் சட்டவாக்கத்தில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டதா..? – ஆய்வு நடத்தப்படும் என்கிறார் மஹிந்த யாப்பா அபேவர்தன !

நிகழ்நிலைச் சட்டவாக்கத்தின்போது உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக அனைத்து திருத்தங்களும உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆய்வுகளை நடத்துமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும், உயர்நீதிமன்றம் சுட்டிக்காண்பித்த விடயங்கள் குழுநிலையில் திருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவற்றை சட்டங்களாக அங்கீகரித்து சான்றுரைப்படுத்தி கையெழுத்திடப்படுவதற்கு முன்பு மேலும் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அச்சட்டங்கள் சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தால் ‘ஒவ்வொரு சட்டமூலங்களும்’ திருத்தங்களின் பின்னர் அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும், சட்டமா அதிபரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வை மேற்கொள்ளும்.

இச்செய்பாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நான் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்துவது வழக்கமானது. அந்த வழக்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கும் பொருந்தும் என்றார்.

முன்னதாக, நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஓரினச் சேர்க்கை குற்றமா..? – உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார்.

அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திருத்தம் தண்டனைச் சட்டம் தொடர்பான பாராளுமன்றத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசியலமைப்பின் விதிகள் கடுமையாக மீறப்படுவதாகவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ , இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவு செய்த உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா அல்லது முரணானதா என்ற தமது முடிவை  சபாநாயகருக்கு அறிவிப்பதாக கூறியது.

இந்நிலையிலேயே தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார்.

குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் எதிர் நோக்கவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை !

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் ​நேற்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பி.ப. 1.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென அரசாங்கத்தின் தகவலறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப்பின்புலத்தில் கட்சித் தலைவர் கூட்டத்தில், கலந்துரையாடப்படவுள்ள திருத்தங்களையும் அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயந்த ஜயவிக்கிரம தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையிலேயே கடந்த 10ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்கது.

தெரிவுசெய்யப்பட்டார் பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் !

இன்றையதினம் இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக வாக்கெடுப்பு இன்றி மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.