வாள்வெட்டு

வாள்வெட்டு

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !‘

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு வாளுடன் தயாராக இருந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது !

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலைச் சேர்ந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறைப் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞனே வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டுக் கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரை கண்டதும் வாள் வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.

பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பருத்தித்துறை வாள் வெட்டு சம்பவம் – இளைஞர் ஒருவர் படுகாயம் !

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை, கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், இளைஞரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாளுடன் சுற்றித்திரிந்த 21 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞர் ஒருவரே நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் திருட்டுக்கும்பல்களின் அடாவடி !

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருட்டு கும்பல் ஒன்று கத்தியினை காட்டி மிரட்டி அடாவடி புரிந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணிளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தியினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக அடாவடிபுரிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருட்டுக் கும்பல் அடாவடி - அதிகாலையில் நடந்த சம்பவம் (படங்கள்) | Theft Police Investigating Srilanka Jaffna

எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய் குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

இதே போன்று நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி அச்சுறுத்தி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

பிறந்தநாள் நடைபெற்ற வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த முகமூடி குழு – ஒருவர் கொலை, ஒன்பது பேர் படுகாயம் – வவுனியாவில் கொடூரம் !

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மேலும், ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

 

உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து தீயை அணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

தீ விபத்து ஏற்பட்ட போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பிரவேசித்து வீட்டிற்கு தீ வைத்து சென்றமை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை!

கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

யாழ்.பல்கலைகழகத்துக்கு அருகே இளைஞரை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய கும்பல் – தொடரும் பொலிஸாரின் அசமந்த போக்கு !

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில்  நேற்று (புதன்கிழமை) பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்ற போது வாள்வெட்டுக்ககுழுக்களின்“ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருந்த போதும் எந்தளவு தூரம் அவர் இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளார் என தெரியவில்லை. மேலும் யாழ்ப்பாண காவல்துறையினரின் அசமந்த போக்கும் இந்த வாள்வெட்டுக்குழக்களின் தொடர்ச்சியான அட்டகாசத்துக்கு காரணம். துரித கதியில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் மிக்பபெரிய சமூதாய சீரழிவு ஏற்கபடுவதற்கான வாய்ப்புள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கது.

வல்வெட்டித்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டுடன் தொடர்புடைய 13பேர் கைது !

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.