அங்கஜன் இராமநாதன்

அங்கஜன் இராமநாதன்

“யாழில் வீட்டுத்திட்டமாக வழங்கப்பட்ட 700 வீடுகளில் மக்கள் யாருமே இல்லை.” – அங்கஜன் இராமநாதன் விசனம் !

வீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் நிரந்தமாக மக்கள் குடியேறாத நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

சில நடைமுறை சிக்கல்கள் உட்பட வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

வீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் தங்களின் காணிகளில் குடியேற வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாகவும் வீடுகள் இல்லாத காணிகளில் எவ்வாறு தாம் குடியேறுவது என மக்கள் கேட்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டு திட்டங்கள் முன்னர் வழங்கப்பட்ட பலர் வீடுகளை தமது காணிகளில் கட்டிவிட்டு அவர்கள் வேறு இடங்களில் வசிக்கின்றனர் என்றும் குறித்த வீடுகளை தங்கள் “விடுமுறை விடுதியாக” பலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் வீட்டு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி போதாது என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் தற்போதைய விலைவாசி அதிகரிப்பு இதற்கு காரணம் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

“அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.” – வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர்

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை அவமதித்தற்கு, வடபிராந்திய தொழிலாளர்களிடம் அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“கச்சேரியில் கடந்த 25ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதில் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரும் அழைக்கப்பட்டார். ஆனால், அக் கூட்டத்தில் சம்பந்தமில்லாத விடயம் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற பிரச்சினை யாழ். மத்திய பேருந்துக்கு அருகில் பஸ் நிலையமொன்று கட்டப்பட்டது. இக் கலந்துரையாடலில், அங்கே செல்லும்படியாக முகாமையாளர் வற்புறுத்தப்பட்டுள்ளார். அதற்கான காணொளி ஆதாரங்களும் உள்ளது.

அங்கே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கஜன் இராமநாதன், முகாமையாளரை கடுமையாக அவமதித்தது, ஒட்டுமொத்த வடபிராந்திய தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கூட்டத்திலே, முகாமையாளருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த அழைப்பை எடுத்து பேசுவதை கூட அவர் கண்டித்துள்ளார்.

நாங்கள் எத்தனையோ கூட்டங்களில் கலந்து கொள்கின்றோம். இன்றைய நடைமுறை சூழலில் ஒரு தொலைபேசி அழைப்பு வரும்போது, அது கதைப்பது இயல்பு. அதைக் கூட அவர் கண்டித்திருக்கின்றார். அதுமாத்திரமின்றி, பேருந்து நிலையப் பிரச்சினையை கொண்டு வந்து, நாங்கள் அங்கே செல்லவேண்டும் என்ற பிரச்சினைக் கொண்டு வந்து, அங்கே செல்லா விட்டால் பிறிதொரு முகாமையாளரை நியமித்து, இதை நான் செய்து காட்டுவேன் என சொல்லி, அனைத்து தொழிற்சங்கங்களையும் அவமதித்துள்ளார்.

கலந்துரையாடலுக்கு தொழிற்சங்கங்களை அவர் அழைத்திருந்தார். அதிலே சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் மட்டுமே சென்றிருந்தது. ஏனைய தொழிற்சங்கங்கள் செல்லவில்லை. ஏனெனில் முகாமையாளருக்கே இந்த நிலைமை என்றால் எங்களுக்கு என்ன நிலைமை என்று தெரியாததால் நாங்கள் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை.

ஆகவே, அவரின் அதிகாரத்தைப் பிரயோகித்தமையானது, தொழிலாளர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியமையால், அவர் பகிரங்கமாக வடபிராந்திய தொழிலாளர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.

வடபிராந்திய முகாமையாளரை நாங்கள் நியமிக்கும்போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரின் நியமனத்தை நிறுத்தியிருந்தார். இதனால் வடக்கில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

வடபிராந்தியத்தில் ஒவ்வொரு சாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை, பேருந்துப் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கும், நேரத்தில் மும்மொழிகளும் தெரிந்த முகாமையாளரை நியமித்த போது அவர் அதை இடைநிறுத்தினார். பின்னர் நாங்கள் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்த போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி தந்ததன் பிற்பாடே போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த முகாமையாளர், வந்த பிற்பாடு மேன்முறையீட்டு சபை உட்பட தொழிலாளர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இலங்கைப் போக்குவரத்து சபையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் அவை தீர்க்கப்படவில்லை.

இப்போது எங்களுடைய தொழிலாளர்களின் வருமானம் யாழ் பஸ் நிலையத்தில் தான் தங்கியுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் தயார். ஆனால், தரப்படுகின்ற பேருந்து நிலையங்களை எங்களுக்கு இரண்டாகப் பிரித்து, ஒரு கட்டமைப்புடன் எங்களுக்குத் தர வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

இன்று எத்தனையோ கோடி செலவில் வவுனியா பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சேவையாற்றுகின்ற அனைத்துப் பேருந்துகளும் அந்த நிலையத்திற்குள் செல்வதில்லை. இதனால், பொதுமக்கள், கர்ப்பிணிகள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்று பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா பஸ் நிலையமும் எங்களுக்கு இரண்டாகப் பிரித்து தரப்படும், நீங்கள் சிறப்பாக சேவை செய்யலாம் என்று சொல்லியும், அதற்காக நீதிமன்ற உத்தரவும் இருந்தும் அதற்கான தீர்வு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், மன்னார் பேருந்து நிலையமும் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. அதற்கான தீர்வும் இன்று வரை எட்டப்படவில்லை. இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு எத்தனையோ தடவை கல்லால் அடித்திருக்கின்றார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

குறித்த போக்குவரத்து நிலையத்திற்கு நாங்கள் போகத் தயார். ஆனால், மாகாணங்களுக்கான சேவை மட்டும்தான் அதிலே செயற்படுத்த முடியும்.மேலும், குறித்த பேருந்து நிலையம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்பட்டால் மாத்திரமே அந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அரச நிதியை வீணாக்க இடமளிக்க முடியாது .” – அங்கஜன் இராமநாதன்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, சேவை இடம்பெறாமலுள்ள யாழ் புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் சேவைகள் இடம்பெற வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தினார்.

அரச நிதியை வீணாக்கும் வகையில், புதிய பேருந்து நிலைய இயக்கம் இடம்பெறாமலிருப்பதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என தெரிவித்த அவர், தனியார் மற்றும் இ.போ.ச இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற, வீதி போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட, வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளிடம் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்த நிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவராசா சிவபரன், “முதற்கட்டமாக தமது சேவைகளை பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்ததோடு, தம்மைத்தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையினரும் அங்கு சேவையில் ஈடுபடவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடாத்திய பின்னர் தமது சாதகமான நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இபோச வட மாகாண பிராந்திய முகாமையாளர் செல்லத்துரை குணபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் நலனுக்காகவே இறப்புச் சான்றிதழ்களை வழங்குகின்றோம்.” – அங்கஜன் இராமநாதன்

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் நலனை கொண்டு அதற்காக உடனடித் தீர்வுக்காக இறப்புச் சான்றிதழ்களை வழங்கின்றோம். எனவும் காணாமல் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் உடனடித் தீர்வாகத் தான் அவதானிக்கப்படுகின்றது. அது நிரந்தமான தீர்வாக அமையாது.” என பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜனாதிபதி நிவ்யோர்க் நகரில் உரையாற்றிய கருத்து தொடர்பில் ஊடகவியாளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு நேற்று (28) பதில் அளிக்கையிலேயே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் தொடர்பாக சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். மாற்றுக் கருத்து உண்மையாகவும் இருக்கலாம். சிலருக்கு எந்ததொரு முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இது இறப்புச் சான்றிதழ் மூலம் கிடைக்குமாயின் அது குறைந்த பட்சம் உடனடி தேவையாக இருக்கும். அதற்காக உறுதி மொழியினை அரசாங்கமே வழங்கும் அது நிலையான கொள்கை உடையது.

பகுதி, பகுதியாகத் தான் தீர்வுகளை எட்ட முடியும். கிடைக்க முடியாத எந்ததொரு தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை. முதற்தடவை காணாமற்போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் கிடைக்கப்போகிறது. யுத்தம் முடிந்து 10 வருடம் ஆகிவிட்டது. மேலும் 30, 40 வருடத்திற்கு முற்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்களின் நலனை கொண்டு அதற்காக உடனடித் தீர்வுக்காக இறப்புச் சான்றிதழ்களை வழங்கின்றோம். இதனை உடனடி மருந்தாக தான் பார்க்கின்றேன். உடனடித் தேவை என்பது மருந்து அதன் பின்னர் தான் மருந்தின் பலன் கிடைக்கும் என்றார்.

அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி !

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் “சுகாதாரத் தொண்டர்களை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கலாம் எனும் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அங்கஜனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது போராட்டத்தைப் பல்வேறு இன்னல்கள், அசௌகரியங்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிரந்தர நியமனம் அற்ற சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பில் பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (01.04.2021) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதிக்கு, சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுபவர்களுடன் நிரந்தர நியமனம் தொடர்பில் எடுத்துரைத்து இந்தத் தொண்டர்களுக்கான தீர்வை தருமாறு கேட்டிருந்தார்.

இந்த விடயத்தை பற்றி கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, புதிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் நோக்கு” செயற்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்க்கு அமைய சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதாக உறுதியளித்து ஜனாதிபதியின் செயலாளர் , கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்பை வழங்கினார்.

அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயையும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனையும் சுகாதார தொண்டர்களின் சுகாதார உதவியாளர் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறினார்கள்.

இச்சமயம் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர் மற்றும் அங்கஜன் ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.

அதற்கிணங்க அந்தச் சந்திப்பு நடைபெற்று தற்போது ஜனதிபதியுடன் கலந்துரையாடி இந்த பிரச்சனைக்கான தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாம் தான் தமிழ்தேசியத்தை வாழவைக்கின்றோம்.நாங்கள் இல்லையேல் தமிழ்த் தேசியம் எப்போதோ அழிந்திருக்கும்” – அங்கஜன் இராமநாதன்

“நாங்கள் தான் ஓரளவிற்கு தமிழ்த் தேசியத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இல்லையேல் தமிழ்த் தேசியம் எப்போதோ அழிந்திருக்கும்” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் யாழில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இன்றைக்கு ஓரளவிற்கு தமிழ்த் தேசியத்தை வாழ வைப்பவர்கள் நாங்கள் தான். எங்களைப் போன்ற சிலர் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனுடன் இணைந்து மக்களுடைய தேவைப்பாடுகளை உணர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை கூட்டி வருகின்றோம். ஆனால் சிலர் அரசியல் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகின்றனர்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறுகின்றனர். நாங்கள் இல்லை என்றால் எப்போதோ தமிழ்த் தேசியம் அழிந்திருக்கும். ஏதோவொரு விதத்தில் நாங்கள் தான் தமிழ்த் தேசியத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமையளிக்கின்றது என்றார்.

“தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்” – அங்கஜன் இராமநாதன்

“வலி. வடக்கில் தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வலி வடக்கில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் திஸ்ஸ விகாரை தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வலி வடக்கு தவிசாளர், தமது மீள்குடியேற்ற பகுதியில் உள்ள அரச காணியில் விகாரை கட்டுவதற்காக தம்மிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் தற்போது சபைக்கே தெரியாமல் தனியார் காணிகளில் விகாரை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த அங்கஜன் இராமநாதன், தனியார் காணிகளில் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டுவது தொடர்பில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் உள்ள நிலையில் சபை அதனை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன்” – முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு தொடர்பாக அங்கஜன் இராமநாதன் கண்டனம் !

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக ால்வேறுபட்ட தரப்பினரும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே அங்கஜன் இராமநாதன் குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய  அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து கூறியிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் சமூகத்தின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் அவ் மக்கள் மனங்களில் உள்ள வடுக்களை அழித்துவிட முடியாது.

ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத் தூபியை உடைப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறிவிட்டது. எந்தவொரு செயற்பாட்டிற்கும் அனுமதி முக்கியம். கடந்த கால அரசியல் தலைமைகள் அன்றே நினைவுத் தூபிக்கான உரிய அனுமதியைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். அன்று விட்ட தவறு மற்றும் அசண்டையீனம் தான் இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நினைவுச் சின்னம் தனி ஒரு மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சொந்தமானது அல்ல. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்கள், போர் வீரர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றே இந்த நினைவுத் தூபி. இந்த உண்மையை சிங்கள மாணவர்களுக்கு எடுத்துரைத்திருந்தால் அவர்கள் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத் தூபியை அழிக்க வேண்டும் என சில தரப்புக்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தூபியை இடித்த பின்னரே எம்மால் அறிய முடிகிறது. இது தொடர்பில் எமக்கு முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நாம் இவ்வாறான விபரீதம் ஏற்பட முன்னதாகவே உரிய தரப்புக்களுடன் பேசி அதனை சுமூகமாக தீர்த்து வைத்திருக்க முடியும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இனங்களுக்கிடையே குரோதங்களைத் தோற்றுவிக்கும் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஓர் விடயம் இன்று வன்முறை வரை வளர்ந்துவிட்டது. என மேலும் அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு – கிழக்கின் கல்வியை மீள மேம்படுத்த உதவுமாறு அரசிடம் அங்கஜன் வேண்டுகோள் !

“யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வத்தையும் தற்போது இழந்து கொண்டிருக்கிறார்கள்” என  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (01.12.2020) இடம்பெறும், கல்வி தொடர்பான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விவாதத்தின் போது வடக்கில் அபிவிருத்திகள் ஏராளம் நடந்திருந்தாலும் கல்வி நிலை தொடர்ந்தும் பின்தங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டம் 19 ஆவது இடத்திலும் கிளிநொச்சி 25 ஆவது இடத்திலும் தீவக வலையம் இறுதி இடத்திலும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வமும் இல்லாது போய்க்கொண்டிருக்கும் சூழலில் கல்வியில் சிறந்ததொரு சமூகமாக வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் வளர்ச்சி பெற இந்த அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

“யாழ் தலைமை காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” – அங்கஜன் இராமநாதன்

கடந்த வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகி குறித்து காவல்துறை அதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்கள் வாயிலாகவும் இதற்கான தங்களுடைய கண்டனங்களை பலரும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் “தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ் நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ் தலைமை காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகி குறித்து காவல்துறை அதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் கூறியிருந்தார்.

30 வருட கால கொடிய யுத்தத்தினால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவரது கருத்தானது, அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும். காவல்துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

மற்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின் போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும்” என அவர் மேலும் தெரிவித்தார்