2009 போரின் இறுதி நாட்களில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருடைய தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்றையதினம் (08) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தாயார் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரட்ணவேல், “இந்த வழக்கு விசாரணையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் அவரது தாயார் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
அதாவது தனது மகன் 2009 போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரின் முல்லைத்தீவு முகாமுக்குள் சரணடைந்ததாகவும் இராணுவ கட்டுப்பாட்டுக்குளேயே அவர் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன்பிறகு அவரை எங்கும் தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றும் தான் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அரசாங்க அதிகாரிகள், அரச ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களை அணுகியும் எதுவிதமான பலனும் தனக்கு கிடைக்காத படியினால் நீதிமன்றை நாடி இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும் மன்றுக்கு கூறியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த தாயார் அரச தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு அவரது சாட்சியம் முடிவு பெற்றது. அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் தவணையிட்டுள்ளது“ என தெரிவித்தார்.
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இருபது பேர் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் உள்ளிட்டவர்களால் ஆட்க்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றம் உள்ளிட்ட வெவ்வேறு நீதிமன்றங்களில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த இருபது பேரில் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.