கொரோனா

கொரோனா

முடிவுக்கு வருகிறது கொரோனாவின் ஆட்டம் – ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள மகிழ்வான தகவல் !

“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரோன் வைரஸ் – அறிகுறிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் நோய் அறிகுறிகள் உலக நாடுகள் சிலவற்றில் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரோன்   நோய் அறிகுறிகள் சம்பந்தமாக தென் ஆபிரிக்காவின் மருத்துவ பேரவை அடிப்படையாக ஆய்வுகளை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

தசைவலி, லேசான இருமல், உடல் சோர்வு என்பன இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்றிய நோயாளிகளிடம் காணப்பட்ட வாசணையை நுகர முடியாத தன்மையை இந்த புதிய வைரஸ் திரிபிடம் காண முடியவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவப் பேரவையின் மருத்துவர் எஞ்சலிக் கோழுடிசி தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் திரிபு பரவுகிறது என்ற எச்சரிக்கையை இந்த மருத்துவரே முதலில் விடுத்திருந்தார்.

கடந்த 18 ஆம் திகதி தன்னிடம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

தொற்றாளர்களிடம் நடத்தப்பட்ட மரபணு ரீதியிலான ஆக்கிரமிப்பு சம்பந்தமான பரிசோதனைகளில் இந்த புதிய திரிபு கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் ஒமிக்ரோன் என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் பரவியது என்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதே நேரம் புதிய வகை கொரோனா இலங்கைக்குள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா – 7 இலட்சம் பேர் வரை இறக்க வாய்ப்பு !

கொரோனா அதிகரிப்பால் ஐரோப்பாவில் மேலும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் டெல்டா துணைபிறழ்வு – தமிழர் பகுதிகளுக்கு ரெட் அலேர்ட் !

இலங்கைக்கே சொந்தமான கொவிட் டெல்டா துணை பிறழ்வொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே இந்த புதிய துணை பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். B. 1.617.2.28 என்ற புறழ்வு இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அதன் துணை புறழ்வாக B. 1.617.2.104 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு புறழ்வுகளும் ஒரே சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், B. 1.617.2.28 என்ற வைரஸ் புறழ்வானது, மேல் மாகாணத்திலேயே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.104 என்ற வைரஸ் புறழ்வானது வடக்கு, வடமத்திய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவில் பரவியுள்ளது.

இலங்கையில் B. 1.617.2.104 வைரஸ் புறழ்வினால் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.28 வைரஸ் புறழ்வினால் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். இவை தமது ஆய்வு கூடத்திற்கு கிடைக்கின்ற மாதிரிகளின் ஊடாக மாத்திரமே நடத்தப்பட்ட பரிசோதனை பெறுபேறுகள் என அவர் கூறுகின்றார்.

டெல்டா பிறழ்வை விடவும், மாறுப்பட்ட தாக்கத்தை இந்த வைரஸ் துணை பிறழ்வுகள் செலுத்தும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். துணை புறழ்வுகள் பரவுகின்றமையினால், தடுப்பூசியின் செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், தடுப்பூசிகள் சரியான பெறுபேறுகளை வழங்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துகின்றமையினால், இந்த புறழ்வுகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

பொறுப்பின்றிச் செயற்பட்டால் மீண்டும் முடக்கம் – எச்சரிக்கிறார் ஹேமந்த ஹேரத்

நாட்டில் தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற திருமண வைபங்கள், மரண சடங்குகள், உற்சவங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது.

எனவே நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும். இவ்வார இறுதி நீண்ட விடுமுறை காலமாகும். இதன் போது அநாவசிய பயணங்களை தடுக்க முடியுமெனில் அதுவே முக்கியத்துவமுடையதாகும்.
தீபாவளி பண்டிகை உள்ளிட்ட சமயம் சார் நிகழ்வுகளில் அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் இவற்றில் பங்குபற்ற வேண்டும். இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்துகின்றோம். அத்தோடு ஏதேனுமொரு வகையில் தொற்று அறிகுறிகள் அல்லது உடல்நலக் குறைவு காணப்படுமாயின் அவ்வாறானவர்கள் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

கொவிட்-19 தடுப்பூசிக்கு பொதுமக்கள் பதிவு செய்ய அனுமதிப்பதற்கு இலங்கையில் இணையதளம் !

கொவிட்-19 வைரஸை தடுப்பது பற்றிய தகவல்களை வழங்கவும் தடுப்பூசிக்கு பொதுமக்கள் பதிவு செய்ய அனுமதிப்பதற்குமென ஆரம்ப சுகாதார, தொற்று நோய்கள் கொவிட் கட்டுப்பாட்டு அமைச்சினால் ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

www.statehealth.gov.lk என்ற தளம் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கவென வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் இன்று(10.02.-2021), சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர், கிராமிய மற்றும் ஆயுர் வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக சுகாதார அமைச்சர் சிசிர ஜயக்கொடி, ஔதட உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமான முல்லையில் ஆரம்பிக்கப்பட்டது.

 

10.53 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பசிகள் நடைமுறைக்கு வந்து விட்ட போதிலும் கூட இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.53 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

நேற்றைய தினம் 5286 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – பக்கவிளைவுகள் எவையும் பதிவாகவில்லை !

நேற்று முன்னிலை பணியாளர்கள் உட்பட 5286 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் பக்கவிளைவுகள் குறித்து எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சுகாதார பணியாளர்களும் முன்னிலை பணியாளர்களும் மருந்தை செலுத்திக்கொள்வது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பக்கவிளைவுகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை நாளையும் நாங்கள் மருந்துவழங்குவதை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பெருமளவு சுகாதார பணியாளர்களுக்கும் முன்னிலை பணியாளர்களுக்கும் மருந்துகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.