கொரோனாவைரஸ்

கொரோனாவைரஸ்

10 மாத கைக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி – கொழும்பில் வைத்தியர்கள் அதிர்ச்சி !

கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தை ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 மாத கைக்குழந்தை ஒன்றுக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

மினுவங்கொடை பிரதேசத்தில் இருந்து நேற்று (08.10.2020) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைவாக குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா சமூகப்பரவல் தீவிரம் – 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

திவுலபிட்டிய பகுதியில் உள்ள மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது வரை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்த்து அவருடன் சம்மந்தப்பட்ட 707 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும், கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீள் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், திவுலப்பிட்டிய, மினுவாங்கொட , வேயாங்கொட ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலைகளின் நிர்வாகத்திடம் தமது ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை விட்டு வெளியேறாமல் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல தயாராக ​வேண்டும் என தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

”உலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று” – உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, எனினும் இந்த வாரத்தில் சாவு எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேற்படி 7 நாட்களில் மொத்தம் 36 ஆயிரத்து 764 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த 20 லட்ச பாதிப்பில் அதிகபட்சமாக 38 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, ஐரோப்பா மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் ஐரோப்பாவில் 27 சதவீத சாவு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ‘ஸ்புட்னிக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று, மனிதர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகிறது.

அமெரிக்காவில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு ! – அடுத்த வருட இறுதி வரை மீட்சி இல்லை.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். 66.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இதனால் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணரான அந்தோனி பாசி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம். என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது..

நிறுத்தபட்ட ஒக்ஸ்போர்ட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கப்பணி மீண்டும் ஆரம்பம்!

ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

3-ம் கட்ட பரிசோதனை பாதுகாப்பானதுதான், அந்தப்பரிசோதனையைத் தொடரலாம் என்று பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்ட்டியூட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடந்து வருகிறது.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மருந்தின் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை சீரம் மருந்து நிறுவனம் நடத்தி வந்தது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியததைத் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை குறி்த்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மருந்து பாதுகாப்பானது எனத் தெரியவந்ததையடுத்து, மீண்டும் கிளினிக்கல் பரிசோதனையைத் தொடங்க பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது

இதுகுறித்து ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

“ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்ட் கொரோனாவைரஸ் தடுப்பு  மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மீண்டும் தொடங்க பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது .

எங்கள் மருந்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் வேறு எந்த தகவலையும் பரிமாற முடியாது.

கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் உடல்நலத்தில் அஸ்ட்ராஜென்கா தீவிரமான அக்கறை கொண்டு, உயர்ந்த தரத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

உலகளவில் உள்ள மருத்துவ வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடன் தொடர்ந்து இனி சேர்ந்து பணியாற்றி, கிளினிக்கல் பரிசோதனையை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்களை தெரிவித்து, மீண்டும் பரிசோதனையை தொடங்கக் கூறுவோம்.

கொரோனாவைரஸ் பரவல் சூழலில் எந்த லாபநோக்கமின்றி செயல்படுகிறோம் . கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் விவரங்கள் படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.86 கோடியை தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.86 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.16 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.05 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலை ! – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரத்து 506 பேருக்கும், பிரேசிலில் 34 ஆயிரத்து 208 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 20 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 610 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 65,48,737
இந்தியா – 43,70,129
பிரேசில் – 41,99,332
ரஷியா – 10,41,007
பெரு – 7,02,776
கொலம்பியா – 6,86,856
மெக்சிகோ – 6,42,860
தென் ஆப்பிரிக்கா – 6,42,431
ஸ்பெயின் – 5,43,379
அர்ஜெண்டினா – 5,12,293

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா ! – பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்தது.

உலக முழுவதும் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், “ உலகம் முழுவதும் கொரோனாவைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,779 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2, 72, 90,137 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 62, 62,989 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,88,535 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா 42, 02,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,687 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் பிரேஸில் உள்ளது. பிரேசிலில் .41, 37,606 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.126,686 பேர்கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கொரோனாவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், கொரோனாவைரஸ்க்கான தடுப்பு மருந்தை தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டின் இடைப்பகுதியில்தான் எதிர்பார்க்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

ஒரே நாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு 41 லட்சத்தைக் கடந்தது!

கடந்த ஆகஸ்ட் 7-ம்தேதி 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் கொரோனா பாதிப்பு எட்டியுள்ளது. ஏறக்குறைய 13 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒருநாளில் 90,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமையானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்‍கப்பட்ட மகாராஷ்டிராவில் மேலும் 20 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 83 ஆயிரத்தை தாண்டியதோடு, பலியானோர் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 10 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 2,973 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1,566 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 3,042 பேருக்கும், கேரளாவில் 2,655 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 41 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 31 லட்சத்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு 2.5 கோடியை எட்டியது . – பிரேசிலில் பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியது!

பிரேசிலில் கொரோனாவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 48,632 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,01,422 ஆக அதிகரித்துள்ளது. 1,23,899 பேர் பலியாகினர். 32,10,405 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. கொரோனாவைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கொரோனாவைரஸ் மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

கொரோனாவைரஸ் ஊரடங்கினால் பலநாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.