கொரோனாவைரஸ்

கொரோனாவைரஸ்

”உண்மையான எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை விட, சீனாவில் அதிகம்’’ – ட்ரம்ப்

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாவைரஸ் தொற்று பரவியது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு வைரஸ் பரவியது. வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா தவறிவிட்டதாகவும், இதில் சீனா உண்மையை மறைக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று தொடக்கம் முதலே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவைரஸ் தொற்றில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், சீனாவில் தொற்றுக்கு உயிரிழந்தோர் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியது. இதுகுறித்து ‘பாக்ஸ் நியூஸ்’ சேனலின் செய்தியாளர் லாரா இங்கரஹாமுக்கு,  ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘சீனாவில் கொரோனாவைரஸ்க்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை விட, சீனாவில் அதிகம்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘பேட்டியின் போது, சீனாவில் உயிரிழப்பு அதிகம் என்பது எப்படி உங்களுக்கு தெரியும்?’’ என்று செய்தியாளர் லாரா கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக ட்ரம்ப் பதில் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனாவைரஸ் பிரச்சினையை ட்ரம்ப் சரியாக கையாளவில்லை என்று அமெரிக்கர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், குடியரசுகட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை சமாளிக்க சீனா மீது மிகத் தீவிரமாக அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.