சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

“இன-மத-பேதங்கள் கடந்து நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்.” – சஜித் பிரேமதாச

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய  மக்கள் சக்தி என்பது நாட்டில் இதுவரை இல்லாத பொது அரசியல் அத்தியாயத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. டீல் அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்து நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமான அமைப்பு தான் இது.

இது தனி நபருக்கானதோ அல்லது ஒரு இனத்திற்கானதோ அல்ல. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஊழல், கொள்ளைகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது எமது நோக்கம். மத்திய வங்கி கொள்ளையில் ஈடுட்டவர்கள் எவ்வாறு எம்மோடு இணைய வருவார்கள்.

சுசில் பிரேமஜயந்த அவர்களை பதவி நீக்கிய விடயமானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற வேலை. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முழுவதும் கண்துடைப்பாக செய்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இதற்கு புதிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் எம்மால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடன் கூடியதாகவே ஆரம்பிக்கப்பட்டது.

இதனை நாம் நடைமுறைப்படுத்தினோம். தற்போதைய அரசாங்கம் கொள்ளையடிப்பதில்  தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எப்படி வீட்டுத் திட்டத்தை அவர்களால் வழங்க முடியும்.  நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இந்த மக்களின் வீட்டு திட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.

மேலும், ஊடகம் என்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் மிகப்பெரிய சக்தி என நான் நம்புகின்றேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது ஊடகவியலாளரின் கடமை. இவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

அவ்வாறு பாதிப்படைந்த அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கம் என்ற வகையில் எம்மால் முடிந்த சலுகைகளை பெற்றுக் கொடுப்போம்.

ஐக்கிய ஐக்கிய மக்கள் சத்தியின் நாட்டிற்கான பயணம் தொடர்கிறது. இந்த பயணத்தில் வடக்கு அரசியல், தெற்கு அரசியல் என்று இல்லை. இதில் எந்த வித பிரிவினைகளும் கிடையாது. இலங்கை என்பது ஒரு நாடு. நாம் அதன் பிரஜைகள் என்ற அடிப்படையில் தான் பணியாற்றுவோம். மக்களது பிரச்சனைகளை நாம் கட்டம் கட்டமாக செய்வோம். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது.

இராணுவ வழிநடத்தல் அல்லது இராணுவத்தின் தலைமைத்துவம் என்பது இராணுவத்திற்கு தான் பொருத்தம். எமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டை வழிநடத்துவதற்கும், கொண்டு செல்வதற்கும் தேவையானது ஜனநாயக ரீதியலான தேர்தலும், மக்களது வாக்குகளும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தான்.

நாட்டின் ஆட்சியில் இராணுவ வழிநடத்தல் என்பது தேவையில்லாதது. இது சம்மந்தமாக என்னிடம் மேலதிகமாக கேட்க வேண்டாம். இந்த அரசாங்கத்திற்கும் நாட்டை இராணுவ ஆட்சியை கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை.

நாட்டிற்குள் எந்தவித பிரச்சனைகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எந்த ஒரு இனத்துடனும், மதத்துடனும் முரண்பட முடியாது. ஒரு இனம் அல்லது குறித்த தொகை மக்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை அல்லது தமது தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அதனை கேட்க உரிமை உள்ளது. அதனை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை” எனத் தெரிவித்தார்.

“அரசாங்கம் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” – சஜித் பிரேமதாச

“அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

87 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

“கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியாக நாங்கள் பெரிய பங்கை வகிக்கிறோம். எதிர்க்கட்சியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கினோம். தொற்று நோயால் பின்தங்கிய  கல்வியை உயர்த்தி வலிமையான மாணவ தலைமுறையை உருவாக்க இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்து கிறோம்.

எதிர்க்கட்சியாகிய நாங்கள் இவ்வாறான பணியை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் என்ன செய்து வருகின்றது என்பது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.

நத்தாருக்கு முன் எரிபொருளின் விலையை அதிகரித்து நத்தார் பரிசுகளை வழங்கிய அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நவீனத்துவ, மனிதாபிமான, புதிய அரசியல் இயக்கம். திறமையான இளைஞர்களைக் கொண்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என நம்புகிறோம்,” என்றார்.

“சஜிதபிரேமதாஸவின் செயற்பாட்டால் கடனாளிகளாகியுள்ள வடக்கு மக்கள்.” – தமிழ்தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு !

2018 மற்றும் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு பகுதியில் திட்டமிடாத வகையில் மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த போது வடக்கு மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு சுமார் ஏழரை லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு சிறிய தொகையே வழங்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம், 70 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிடாது செயற்பட்டமையினால் இன்று நாடு முழுவதும் பல ஆயிரம் மக்கள் புதிய வீட்டு திட்டத்தில் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர்.

அவர்களில் இன்று பலர் கடனாளியாகியுள்ளனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

“அழிவை நோக்கி நகரும் இலங்கை.” – சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை !

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு வலுவான நாடு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு வெளிநாட்டு கையிருப்பை வைத்திருக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளவா 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்துடனான தொடர்பு பற்றி குறிப்பிட்டுள்ள ரிஷாட்பதியுதீன் !

“அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“நாம் வேறு கட்சி, கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை அரச தலைவராக்குவதற்கு முயற்சி செய்தோம். எனினும், எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவில்லை.

இருந்தாலும், நாடாளுமன்றத்தில் நான் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து, எதிர்க்கட்சியின் கடமைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர்,

நான் அவ்வாறு கூறவில்லை , நான்ன் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் இவ்வாறான கேள்வியொன்று எழுப்பும் போது, தாம் கூட்டணி அமைக்கவில்லை என அவர் பதிலளித்ததாக ரிசாட் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (16) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டவர்கள் மற்றும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், நேற்று (16.11.2021) இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி, காலிமுகத்திடலை சென்றடைந்தது.முன்னதாக குறித்து ஆர்ப்பாட்டப் பேரணி, ஹைட்பார்க்கில் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்த நிலையில், கொழும்பில் போராட்டம் நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றங்களில் கோரியிருந்தனர்.

சில நீதிமன்றங்கள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கொழும்பு 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அதனை முன்னெடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மையில் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்ற நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர், மனநலம் குன்றியவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

“புதிதாக உருவாகவுள்ள சஜித் கொரோனா கொத்தணி.” – காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில் அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. நாட்டில் கொரோனா இருப்பது எதிரணி உறுப்பினர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்குத் தெளிவில்லை என்பதுதான் அவர்களின் நடத்தைமூலம் அறியமுடிகின்றது.

ஆரம்பத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி ஏற்பட்டது. அதன்பின்னர் புத்தாண்டு கொத்தணி உருவானது. ஆசிரியர்களின் போராட்டத்தாலும் கொத்தணி பரவியது.

சஜித்தின் போராட்டத்தில் சஜித் கொத்தணியும் உருவாகும் அபாயம் உள்ளது. எமது அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. தேர்தல் ஊடாக அரசை வீழ்த்துங்கள். மாறாக மக்களைப் பணயம் வைக்க வேண்டாம்” – என்றார்.

“அரசாங்கம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிக்கிறது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

நாட்டின் வளங்களைத் துச்சமாகக் கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசாங்கம், மறுபுறம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இவை அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் என்றும் இது ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ சொந்தமானது அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரத்தையோ அல்லது பணபலத்தையோ பயன்படுத்தி இந்தக் காணிகளை எந்தவொரு தரப்பினரும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாச, உரிய சட்டங்களுக்கு மாறாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் – ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் வேண்டுகோள் !

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முழு அரசுக்கும் எதிரான பிரேரணையாக மாற்றப்பட வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைமையமான சிறிகொத்தாவில் நேற்று (15) நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசில் தனி நபர் ஒருவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அரசில் உள்ள தரப்பினரை ஒற்றுமையடையச் செய்யும் வகையிலானதாகவே அமையும்.

எவ்வாறாயினும் தனி நபருக்கு எதிராக அன்றி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முழு அரசுக்கும் எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டும்.

இதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசுக்கு எதிரான பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைக்க வேண்டும் – என்றார்.

“மக்களின் கவனத்தை திசை திருப்பவே மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.” – சஜித் பிரேமதாஸ

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதிபோலச் சித்தரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்னும் அறியப்படாது உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.