சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

“சஜிதபிரேமதாஸவின் செயற்பாட்டால் கடனாளிகளாகியுள்ள வடக்கு மக்கள்.” – தமிழ்தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு !

2018 மற்றும் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு பகுதியில் திட்டமிடாத வகையில் மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த போது வடக்கு மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு சுமார் ஏழரை லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு சிறிய தொகையே வழங்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம், 70 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிடாது செயற்பட்டமையினால் இன்று நாடு முழுவதும் பல ஆயிரம் மக்கள் புதிய வீட்டு திட்டத்தில் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர்.

அவர்களில் இன்று பலர் கடனாளியாகியுள்ளனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

“அழிவை நோக்கி நகரும் இலங்கை.” – சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை !

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு வலுவான நாடு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு வெளிநாட்டு கையிருப்பை வைத்திருக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளவா 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்துடனான தொடர்பு பற்றி குறிப்பிட்டுள்ள ரிஷாட்பதியுதீன் !

“அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“நாம் வேறு கட்சி, கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை அரச தலைவராக்குவதற்கு முயற்சி செய்தோம். எனினும், எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவில்லை.

இருந்தாலும், நாடாளுமன்றத்தில் நான் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து, எதிர்க்கட்சியின் கடமைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர்,

நான் அவ்வாறு கூறவில்லை , நான்ன் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் இவ்வாறான கேள்வியொன்று எழுப்பும் போது, தாம் கூட்டணி அமைக்கவில்லை என அவர் பதிலளித்ததாக ரிசாட் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (16) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டவர்கள் மற்றும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், நேற்று (16.11.2021) இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி, காலிமுகத்திடலை சென்றடைந்தது.முன்னதாக குறித்து ஆர்ப்பாட்டப் பேரணி, ஹைட்பார்க்கில் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்த நிலையில், கொழும்பில் போராட்டம் நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றங்களில் கோரியிருந்தனர்.

சில நீதிமன்றங்கள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கொழும்பு 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அதனை முன்னெடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மையில் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்ற நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர், மனநலம் குன்றியவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

“புதிதாக உருவாகவுள்ள சஜித் கொரோனா கொத்தணி.” – காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில் அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. நாட்டில் கொரோனா இருப்பது எதிரணி உறுப்பினர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்குத் தெளிவில்லை என்பதுதான் அவர்களின் நடத்தைமூலம் அறியமுடிகின்றது.

ஆரம்பத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி ஏற்பட்டது. அதன்பின்னர் புத்தாண்டு கொத்தணி உருவானது. ஆசிரியர்களின் போராட்டத்தாலும் கொத்தணி பரவியது.

சஜித்தின் போராட்டத்தில் சஜித் கொத்தணியும் உருவாகும் அபாயம் உள்ளது. எமது அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. தேர்தல் ஊடாக அரசை வீழ்த்துங்கள். மாறாக மக்களைப் பணயம் வைக்க வேண்டாம்” – என்றார்.

“அரசாங்கம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிக்கிறது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

நாட்டின் வளங்களைத் துச்சமாகக் கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசாங்கம், மறுபுறம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இவை அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் என்றும் இது ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ சொந்தமானது அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரத்தையோ அல்லது பணபலத்தையோ பயன்படுத்தி இந்தக் காணிகளை எந்தவொரு தரப்பினரும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாச, உரிய சட்டங்களுக்கு மாறாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் – ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் வேண்டுகோள் !

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முழு அரசுக்கும் எதிரான பிரேரணையாக மாற்றப்பட வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைமையமான சிறிகொத்தாவில் நேற்று (15) நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசில் தனி நபர் ஒருவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அரசில் உள்ள தரப்பினரை ஒற்றுமையடையச் செய்யும் வகையிலானதாகவே அமையும்.

எவ்வாறாயினும் தனி நபருக்கு எதிராக அன்றி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முழு அரசுக்கும் எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டும்.

இதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசுக்கு எதிரான பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைக்க வேண்டும் – என்றார்.

“மக்களின் கவனத்தை திசை திருப்பவே மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.” – சஜித் பிரேமதாஸ

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதிபோலச் சித்தரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்னும் அறியப்படாது உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

“இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.” – சஜித் பிரேமதாச

“இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.” என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் எடையுடைய தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றீடுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளனர். இவற்றை திருட்டுத்தனமாக செய்துள்ளனர். புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது என சுகாதார பிரிவினரால் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தடை செய்துள்ளனர்.

எனினும் இதனை நாட்டுக்கு கொண்டுவந்த நிறுவனங்கள் அவற்றை சுத்திகரித்து தரச் சான்றிதழ்களையும் கூட்டாக இணைந்து பெற்றுக்கொண்டுள்ளன. மேலும் சுங்கத் திணைக்களமும் அவற்றை வெளியே கொண்டு வருவதற்கான அனுமதியை கொடுத்துள்ளது.

தற்போது அவை சந்தைக்கு வந்துள்ளன. தமிழ் – சிங்கள பண்டிகைக் காலத்தின்போது தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகமாகக் காணப்படும். இவ்வாறான நிலையில் மக்களை புற்றுநோய்க்காரர்களாக சாகடிக்கச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசினுடைய நோக்கம் இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது. இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த 69 இலட்சம் வாக்காளர்களும் பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழ்- சிங்கள புத்தாண்டை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொண்டாடினோம். இந்த ஆண்டு புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யுடன் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டியுள்ளது” என்றார்.

“சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். அவருக்கான பாதுகாப்பு மீள வழங்கப்பட வேண்டும்” – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

பேரணியில் கலந்துகொண்ட காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை தானே நிறுத்தியதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10.02.2021) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக் கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவது ஒழுக்கமான செயலல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

அதனைத் தொடந்து எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக தெரிவித்தும் பயங்கரவாதிகளுக்காக முன்னின்று செயற்பட்டாரென்ற காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

பேரணியை தடைசெய்யக்கோரி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கவில்லையென்றே நினைக்கிறேன்.

மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து அவரது பாதுகாப்பை நீக்குவதாக இருந்தால், எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்? பிள்ளையானை சுற்றி இராணுவத்தினர் இருப்பதை காணும்போது எமக்கு வெட்கமாக உள்ளது.

சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்.

அதனால் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை நீக்குவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்.