சிவஞானம் சிறீதரன்

Friday, December 3, 2021

சிவஞானம் சிறீதரன்

“இலங்கை மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.” – சிவஞானம் சிறீதரன் குற்றச்சாட்டு !

“இலங்கையில் மட்டும் மக்களை வதைக்கிற மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைகளைக் கொண்ட முன்பள்ளியினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே முன்பள்ளிகளுக்கு என்று ஒரு திடமான கொள்கை இல்லை முன்பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்வியில் கூட கௌரவமான உறுதியான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய கல்விக் கொள்கை இல்லாததால்தான் இலங்கையின் பொருளாதாரம் அதாளாபாளத்ததுக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாமாக மாறியிருக்கிறது.

நாளாந்தம் நாணயத்தாள்களை அச்சிடுவதும் நாளுக்கு நாள் விலைவாசிகளை அதிகரிப்பதுமாகத்தான் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மாறியிருக்கிறது. இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது இல்லை. ஒரு நாட்டினுடைய வரவு செலவுத் திட்டம் குறையில் இருப்பதும் அரசாங்கத்திடம் இருக்கவேண்டிய வெளிநாட்டு இருப்புக்கள் இல்லாது இருப்பதும் இந்த நாடு பட்டினியை நோக்கி வறுமையை நோக்கி நகர்ந்து செல்வதையே வழிகாட்டி நிற்கின்றது.

அதேபோல் இன்று இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அதிகமான பட்டினியை நோக்கி இந்த நாடு நகர போகிறது என்பதனை இந்த நாட்டினுடைய குடும்ப அரசியலில் அங்கத்தவராக இருக்கின்ற சமல் ராஜபக்ஷ அவர்கள் நேற்று கூறியிருக்கிறார். நீங்கள் சோறு இல்லை என்றால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என்று அறுபதாம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வார்த்தைகளை 70 ஆண்டு காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை மீண்டும் அவர் நினைவூட்டி இருக்கிறார்.

ஆகவே எவ்வளவு தூரம் உலகம் வளர்ந்திருக்கிறது நாகரீகம் வளர்ந்திருக்கிறது. நாடுகளினுடைய பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் இலங்கையில் மட்டும் மக்களை வதைக்கிற மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சியில் இன்று ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற வெதுப்பகங்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகளை இன்றுதான் ஆரம்பிப்பது போன்று தென்னிலங்கையில் இருந்து வந்த அரசியல்வாதிகளால் படம் போடப்படுகிறது.

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்டவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் குடும்பங்களோடு சரணடைந்தவர்கள் எங்கே ..? – நாடாளுமன்றில் விபரங்களுடன் கேள்வியெழுப்பிய சிறீதரன் !

இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,

2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,

3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,

4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,

5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,

6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,

7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,

8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,

9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,

10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,

11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,

12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,

13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,

14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது .குழந்தைகள் சிறுவர்களுக்கான புதிய சட்டங்கள் சீர்திருத்தங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிற மேலே குறிப்பிட்ட சிறார்களுக்கு என்ன நடந்தது இவர்களில் பெரும்பாலானோர் எனது மாணவர்கள் ஆவர். சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கர வாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்படும் கரைச்சி பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
எமக்கு நினைவேந்தல் செய்கிற உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது எமது பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்றார்.

“அரசாங்கத்தால் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த சிங்கள சின்னங்கள் திணிக்கப்படுகின்றது.” – சிவஞானம் சிறீதரன்

“கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும்.” என எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம்  இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. அத்துடன் வெளியில் காணி அதிகாரம்  பொலிஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்வபு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் டேவிட் மக்கினான் இன் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

“சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்கின்றனர்” -பாராளுமன்றில் சிறீதரன் கண்டனம் !

“சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்கின்றனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (01.12.2020) இடம்பெரும் குழுநிலை விவாத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் குறிப்பிடுகையில் இந்துக்களின் பண்டிகை தொடர்பாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது தொடர்பாக கண்டனங்களை வெளியிடுவதாகவும் கூறினார்.

அத்தோடு அண்மையில் கார்த்திகை விளக்கீடு அன்று கிளிநொச்சி பரந்தனில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் யாழ்.பல்கலை மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் சிறிதரன்அதிருப்தி வெளியிட்டார்.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்ட சிறிதரன், சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.