ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ

“நான் பதவி விலகப்போவதில்லை.”- ஜனாதிபதி கோட்டாபாய உறுதி !

பதவி விலகப்போவதில்லை ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜகப்ஷ நேற்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சிரேஸ்ட தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என நாடளாவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் இடம்பெற்ற அதேவேளை ஜனாதிபதி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

ஜனாதிபதி தான் பதவி விலகப்போவதில்லை ஆனால் 113 பெரும்பான்மைய நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என தெரிவித்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது எந்த கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பலர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

எனினும் சாதாரண பெரும்பான்மையுடன் தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஈடுபட்டுள்ளது.

“ஜனாதிபதியுடனான சந்திப்பு வாய்ப்பை கைநழுவ விட்டுவிட முடியாது..” – இரா.சம்பந்தன்

சுயலாப அரசியலாலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் முகமாகவே பேச்சுவார்த்தை இடம்பெறும். மேலும் பேச்சுவார்த்தை என்ற கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பை கைநழுவ விட்டுவிட முடியாது.

அத்தோடு இந்த பேச்சுவார்த்தையின்போது, புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை அழுத்தமாக வலியுறுத்தவுள்ளோம்.

இதேவேளை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான டெலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியுடன் பேசக்கூடாது என்று கூறவில்லை. ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பதில் சந்தேகம் இருப்பதாக மட்டுமே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளிக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.” – ஜனாதிபதி கோத்தபாய

மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவார்  இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தை உறுதிசெய்ய நானும் எனது அரசாங்கமும் ஆட்சி செய்கிறது அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயநெருக்கடிக்கு நானோ எனது அரசாங்கமோ காரணமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை என பல முறைப்பாடுகள் காணப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நுரைச்சோலை மின்நிலையத்தை ஏற்படுத்திய பின்னர் அதற்கு பின்னர் ஆட்சிபுரிந்தவர்கள் ஒரு மின்நிலையத்தை கூட ஆரம்பிக்கவில்லை.

தன்னால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொள்கை உறுதிமொழியை வழங்கியதாகவும் எனினும் துரதிஸ்டவசமாக அதனை தான்னால் உரிய விதத்தில் விவசாயிகளிற்கு தெரியப்படு;த்த முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படு;த்தி எதிர்கட்சிகள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதிக்கு மேலும் 2 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும்.” – டயானா கமகே

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

கொவிட் -19 நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. எனவே ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், எனவே தமக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

“துப்பாக்கி முனைகளில்  மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனை உள்ளது.” – நாடாளுமன்றில் எஸ்.சிறீதரன் !

“இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும்   மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனை உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

மேலும் இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாக செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும். அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம்  நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019-11-18  ஆம் திகதி  ஜனாதிபதி அனுராதபுரத்திலே முதல் முதலாக தனது பதவியை ஏற்றிருந்தார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ,இந்த நாட்டிலே வாழ்கின்ற பல்லின மக்கள்,  குறிப்பாக தமிழர்கள் என்ற ஒரு தேசிய இனத்தினுடையை அடிப்படைகளை தூக்கி கடாசிவிட்டு தன்னுடைய மனதில் கூட அதனை சொல்ல முடியாத ஒரு தலைவராக இருக்கின்றார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதியின் உரை என்பது சகல இன  மக்களையும் அணைத்து செல்கின்ற ,அந்த மக்களை ஒன்றிணைத்து செல்கின்ற,  இலங்கை என்ற நாட்டை கட்டி எழுப்புகின்ற ஒரு மனிதனுடைய,ஒரு தலைவருடைய  உரையாக அது  அமையவில்லை.

மீண்டும் தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள் ,தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளில் மட்டும்தான் அவருடைய சிந்தனை இருப்பதாகவே ஜனாதிபதியின்  பேச்சு அமைந்துள்ளது.

ஆகவே இந்த நாடு  நியாயமான அல்லது நீதியான  பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதனைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது.

இங்கு எமக்கு பேச நேரம் தருவதில்லை. எமது கருத்துக்களைக்கூற முடியாதுள்ளது .அவ்வாறான ஒரு கொடூரமான அரசுக்குள் தான் நாம் இருக்கின்றோமா என்ற எண்ணம் எமக்கு தோன்றுகின்றது என்றார்.

அத்துடன் தென்னாபிரிக்காவின் கேப்டன் முன்னாள் பேராயர் டெஸ்மன்  டுட்டு,தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா போன்றவர்களையும்  தென்னிலங்கையர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .ஆட்சியாளர்கள் அவர்கள் வழி நடக்க வேண்டும் எனவரும் வலியுறுத்தினார்.

“குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.” – ஜனாதிபதி கோட்டாபய

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த போது ,

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், இவ்வாறான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது.  என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எனது ஒரே நோக்கமாக இருக்கின்றது. ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.

நான் ஆட்சிக்கு வரும் போது எதிர்பாராத விதமாக கொவிட் பரவல் ஆரம்பமானதுடன், அதனால் நான் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போயுள்ளது. செல்வந்த நாடுகளில் இருந்த பொருளாதார பலம் காரணமாகவே அவை கொவிட் பரவலை முறையாக எதிர்கொண்டன. அத்துடன், எனக்கு யாருடனும் போட்டி இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது ஒரே குறிக்கோள். சிலரிடமிருந்து அதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.

கூட்டாகச் செயற்படும் கலையை நான் நன்கு அறிந்தவன். ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குத் தேவையான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

“உலகின் தலைசிறந்த 10 ஜனாதிபதிகளில் கோட்டபாயவும் இடம்பிடிப்பார்.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

“கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர். ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார்.” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளை-செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும். கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்ட போது அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.  உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்றும், திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றது. குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மக்கள் விரும்பாத சில தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.”- பொறுமை காக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை !

உலக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டு செல்வதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இவ்வாறான தீர்மானங்கள் விமர்சிக்கப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் இதன் பலனை பொது மக்கள் பெறுவார்கள். எனவே, நாட்டில் தற்போது மிகக் குறைந்த தெரிவுகளே உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன நிலையில், அதனை பொது மக்கள் அங்கீகரியுங்கள்.

இலங்கையர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும். கொவிட் -19 தொற்று நோயால் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழந்துள்ளது.

சுற்றுலாத் துறையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் முப்பது மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அபிவிருத்தி அல்லது அபிவிருத்தியடையாத என அனைத்து நாடுகளும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறிய பொருளாதாரமாக இருப்பதால் இலங்கை அதன் தாக்கங்களில் பெரும் பகுதியை எதிர்கொண்டது. என தெரிவித்த அவர்,  அரசாங்கம் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகித்தது என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார். இதேவேளை முக்கியமாக சுற்றுலா மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் என்பன இழக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இவ்வாறான வருமான ஆதாரங்களை இழப்பதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் தோல்வியை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறியது போன்ற நிலை கோட்டாபாயராஜபக்ஸவுக்கு ஏற்படும்” – ராஜித சேனாரட்ண

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் தோல்வியை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறியது போன்ற நிலை கோட்டாபாயராஜபக்ஸவுக்கு ஏற்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தனது முதல்பெயரை பயன்படுத்தியதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு நிகழ்ந்தது குறித்து ஹரீன்பெர்ணான்டோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இரண்டு குணாதியசங்கள் உள்ளன என அவரே தெரிவித்துள்ளார் . ஒன்று பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை வெளிப்பட்ட குணாதிசயம் மற்றையது தற்போது காணப்படுவது. ஜனாதிபதி இரட்டை வேடமிடுகின்றார்.
ஜனாதிபதி கதாநாயகனாக அரசியலுக்கு வந்தவர் இன்று வில்லனாக மாறியுள்ளார் ஜனாதிபதி குறித்த அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகரிக்கின்றது.

ஜனாதிபதி இராணுவமயமாக்கலை முன்னெடுக்கின்றார்.  42 இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பல பதவிகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் 25 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப் தனது நடவடிக்கைகளில் தோல்வியேற்பட்டதை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறி நாடாளுமன்றத்திற்குள் கலகத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டினார். அவரின் நிலைமையே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” – ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்க பதிலடி !

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் ‘கடுமையான’ பக்கத்துக்கு மாறி தன்னால் தண்டனைகளைக் கொடுக்கவும் முடியும் எனும் தொனியில் அம்பாறையில் வைத்து ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான கருத்தை கண்டித்து பேசும் போதே ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல. ஷதற்போதிருக்கும் பொருட்களின் விலையுயர்வு, கொரோனா தடுப்பு மருந்தின் இறக்குமதி செலவு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு வெறுப்பும் கோபமும் இருக்கலாம். ஆனால், அதனை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவிக்கும் கலாசாரத்துக்கு இடமளிக்க முடியாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஹரின் பெர்னான்டோ ஏலவே பொலிசில் முறையிட்டுள்ள அதேவேளை ஹரினுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் எனவும் கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டதெனவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.