தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரையை காரணங்காட்டி நில அபகரிப்பு – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு !

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். தையிட்டி பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளன.

இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாயின் அந்தக் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த விகாரைக் கட்டுமானம் மற்றும் நில அளவைப் பணிகளை எதிர்த்து நாளை மறுதினம் தையிட்டி பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கே. சுகாஷ் தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமைதான் ஒரே தீர்வு.”- நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் !

“தமிழ்த் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமைதான் இதற்கு ஒரே வழி என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே நாட்டை முன்னேற்ற ஒரே வழி.” என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

இன்று சிறிலங்கா அரசு எதிர் கொண்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக இங்கு கூடியிருக்கின்றோம். இன்றிருக்கிற நெருக்கடியானது, ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் (Government) மீதுள்ள நெருக்கடிபோன்று தோன்றினாலும், உண்மையில் சிறிலங்கா அரசே (State) நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஏனெனில், எதிர்வரும் நாட்களில் இந்த அரசாங்கம் எதிர்கொள்ளும் நிர்ப்பந்தங்களால், பதவியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தாலும் கூட, புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும், துண்டம் துண்டமாக சிதைந்து போயிருக்கும் இந்த சிறிலங்கா அரசின் சிதிலங்களை பொறுக்குவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தமிருக்கும். ஆகவேதான், இதுவெறுமனே அரசங்கத்தின் நெருக்கடி என விவரிக்காது, இதனை சிறிலங்கா அரசகட்டமைப்பின் நெருக்கடி என்று விவரிக்கின்றேன்.

இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில், சாதாரண கிராமங்களிலும், பெரும் நகரங்களிலும், பெரும்பாலும் தெற்கிலும், ஏன் வடக்கு கிழக்கிலும் கூட மக்கள் தங்கள் எதிர்ப்பைவெளிப்படுத்தி வருகிறார்கள். ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் அதன் கடமையினை ஆற்ற முடியாது தோல்வியடைந்திருப்பதனாலேயே இந்த நிலைமை உருவாகியிருக்கிறது. ஆட்சிசெய்வதற்கான திறமையில்லாதமையாலேயே இந்த அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது.

அரசாங்கம் தவறுகளைச் செய்கிறபோது, அதுவும் அத்தவறுகள் வெளிப்படையாகத் தெரிகிறபோது, என்னவிதமான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை கவனத்தில் எடுப்பதேயில்லை எனவும் முடிவெடுத்திருந்தது. இச்சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதனாலும், ஜனாதிபதி 1.3 மில்லியன் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றமையினாலும் தாங்கள் எதனையும் செய்யலாம், அவற்றைச் செய்துவிட்டு தப்பிவிடலாம் என அவர்கள் எண்ணினார்கள். இந்த வாக்கு பலத்தைவைத்து எதனையும் செய்யமுடியும் என அவர்கள் எண்ணியதால், சிறிலங்கா அரச கட்டமைப்பானது வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் நெருக்கடிக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது.

இத்தோல்வியை மக்கள் பட்டவர்த்தனமாக விளங்கிக்கொண்டுள்ளார்கள். ஆதலால்தான் கோத்தபாய ராஜபக்சவுக்கு பெருமளவு வாக்குகளை வழங்கி, வெற்றிபெறச் செய்த மக்களே, இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்த அவர்களே, இன்று வேறு வழிவகை தெரியாமல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள். அதன் மூலம் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையை மீளப்பெற்றுள்ளார்கள். அதனை இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.

ஜனநாயக முறையில், ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆணை வழங்குகிறார்கள். இலங்கையில் இது ஐந்து வருடங்கள். குறித்த காலத்திற்கு முன்னர் தாம் வழங்கிய ஆணையை மீளப்பெறுவதாக அறிவிக்குமுகமாக, தெருவுக்கு இறங்கிப் போராடுவதுதான் அவர்களுக்கிருக்கின்ற ஒரே வழிமுறை.

ஆகவே பொறுப்புக்கூறல் எந்த வடிவத்திலாவது நிலைநாட்டப்பட வேண்டுமாயின், ஐனாதிபதி பதவி விலகவேண்டும். அதனைத் தொடர்ந்து இந்த அராசங்கம் பதவி விலகவேண்டும். இவை கேள்விக்கிடமில்லாதவை.

மக்களின் போராட்டங்களை தணித்து, எதிர்காலத்தில் இவ்வாறு போராட்டங்கள் நடைபெறுவதனைத் தவிர்க்கவேண்டுமாயின், இந்த அரசாங்கம் இச்செய்தியை உடனடியாக விளங்கிக் கொள்ளவேண்டும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பதவி விலக வேண்டியது மிகவும் அவசியமானது. அதுபோன்று இந்த அரசாங்கமும் விலக வேண்டியது அவசியமானது.

ஆனால் ஒரு இடைவெளியிருக்கிறது. துரதிஸ்டவசமாக நாங்கள் இதில் போதாமையை உணர்கிறோம். இப்போதுள்ள நெருக்கடிக்கு அரசியல்யாப்பு என்று நாங்கள் அறிகிற விதிகளில் இதற்குத் தீர்வு எதுவுமில்லை. இந்த அவையில் இருக்கும் விடயங்கள், அவைக்கு வெளியிலுள்ள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை. இந்த அவையில் உள்ள விடயங்களை வெளியிலுள்ளவை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் இரண்டு வருடகாலத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த அவை (அரசாங்கம்) காலத்திற்கு பிந்தியதாக மாறிவிட்டது. இந்த அவையிலுள்ளவர்களுக்கு வாக்களித்த மக்கள் தாம் வழங்கிய ஆணையை மீளப்பெற்றுள்ளார்கள்.

ஜனாதிபதி பதவி விலகுவாரேயாயின், இந்தப் பாராளுமன்றத்திலிருந்து ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும். ஆனால் நான் ஏற்கனவே கூறியதுபோன்று, இந்த அவை காலவதியாகிவிட்டது. நாளைக்குத் தேர்தல் நடைபெறுமாயின், இன்றைக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட இந்த அரசாங்கம் வெற்றிபெறுமென கனவுகூடக் காணமுடியாது.

ஆகவே, ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பதவி விலகினால் அவருக்குப் பதிலாக இந்த அவையிலிருந்து ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கவேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே சில இடைக்கால நகர்வுகளைச் செய்ய வேண்டும். முதலில், இன்றைக்கு ஆட்சி செய்ய முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ள, மக்களால் சுட்டிக்காட்டப்படும் உடனடிப்பிரச்சினைகளுக்கு ஏதாவது வகையில் பரிகாரம் காணவேண்டும். ஜனாதிபதி தான் உடனடியாகப் பதவிவிலகுவார் என்பதனை உத்தரவாதப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அறிவிப்பினை மேற்காள்ளவேண்டும்.

இரண்டாவதாக, இந்த அரசாங்கமும் பதவி விலகுவதாக உறுதியளிக்க வேண்டும். மூன்றாவதாக, அடுத்த மூன்று மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இம்மூன்று உத்தரவாதங்களும் வழங்கப்படுமாயின், அடுத்த மூன்று மாதங்களில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவது என்பதனை நாங்கள் அமர்ந்திருந்து சிந்திக்கலாம்.

உண்மை என்னவென்றால், இப்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள்கூட விரும்பவில்லை. அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையான உறுப்பினர்கள் அவர்களிடமிருப்பதாக அவர்கள் உணரவில்லை. அதுபோன்று உங்களிடமிருந்து நாற்பது வரையிலான உறுப்பினர்கள் விலகியிருக்கிறார்கள். நேற்றைய தினம் அவர்கள் எழுந்து நின்று தாங்கள் சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் எல்லாவிடயங்களிலும் ஜனாதிபதியையும், இந்த அரசாங்கத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர்கள். இன்றைக்கு மக்கள் வீதிக்கிறங்கிப் போராடுகிற நிலையில், தங்களை சுயாதீனமானவர்களாகக் காட்டுவதற்கு அவர்கள் முனைகிறார்கள். இதனைக் கணக்கில் எடுக்கவேண்டியதில்லை.

ஆகவே எதிர்கட்சியிலிருக்கும் சரியாகச்சிந்திக்கக் கூடிய யாரும் இவர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியும் என நம்ப மாட்டார்கள். இறுதியாக, இன்றைக்கு எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் சிங்களப் பொதுமக்களிடம் இந்தவேண்டுகோளை விடுக்கிறேன். இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக, பொருண்மியப பிரச்சனைகளுக்காக மட்டுமன்றி, இந்த அரசாங்கமும், அரச கட்டமைப்பும் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பவற்றுக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.

முதற்தடவையாக, இராணுவபலமும், இந்த அரசகட்டமைப்பின் பெரும்பலமும் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இது எவ்வளவு ஆபத்தானது என்பதனையும், அவர்கள் குரலற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதனையும் அவர்கள் உண்ர்ந்துள்ளார்கள்.

ஆட்சிக் கட்டமைப்பில் உள்ள அரசியல்வாதிகள் தங்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள், இவ்வரசியல்வாதிகள் உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்து வருகிறார்கள். இது கடந்த ஒரு சில வருடங்களாக அல்ல. பல தசாப்தங்களாக நடைபெறுகிறது எனவே, மக்கள் தாம் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதனை உணர்ந்துகொள்வார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக 74 வருடங்களாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள், அவர்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் நாட்டின் சொத்துக்கள் கொள்ளையடிகக்கப்பட்டுள்ன என்பதனை உணர்நதே அவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

இது இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பொன்னான சந்தர்ப்பம். இலங்கை நாடானாது இந்தத்தீவிலுள்ள எல்லா மக்கள் குழுமைங்களையும் பிரதிதித்துப்படுத்துவதான ஒரு புதிய ஆரம்பத்திற்கான நல்ல சந்தர்ப்பமிது. சிங்களம் பேசும் தேசமாக, தமிழ்பேசும் தேசமாக இலங்கையில் மாறுப்பட்ட அடையாளங்களைக் கொண்டாடுவதற்கான நல்ல சந்தர்ப்பம். இந்த உண்மை நிலமையை கவனத்திலெடுக்கத் தவறக்கூடாது. வரலாற்றில் முதற்தடைவையாக இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்மக்கள் ஆதரவளிக்கத் தயாராகவிருக்கிறார்கள். அதற்காக நீங்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை அகற்றுவதற்கு மட்டுமல்ல, கூட்டாட்சி முறையில் தமிழ்த் தேசம், சிங்களத் தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி முறைமையை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இணங்கவேண்டும். ஒற்றையாட்சி முறைமை என்பது காலத்திற்குப்பிந்தியது. நீங்கள் அதனை 74 ஆண்டுகளாக வைத்திருக்கிறீர்கள்.

விடுதலைப்புலிகளை நீங்கள் அழித்தற்கு பின்னரும், கடந்த பன்னிரண்டு வருடங்களாக, அதே அரசகட்டமைப்பைத் தொடர்கிறீர்கள். கடவுளின்பேரால் கேட்கிறேன் விழித்தெழுங்கள். உங்கள் தலைவர் கூட்டாட்சி முறைமை என்பது பிரிவினைவாதம் என்று பொய் கூறி உங்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தை மேம்படுத்துவதற்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வரவேண்டியுள்ளது. இதுபோன்று நாட்டின் இதரபகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டாமா? நாட்டின் எல்லாவிடங்களும் மேப்படுத்தப்பட வேண்டுமானால் ஒற்றையாட்சி முறைமை என்ற கருதுகோளை நீங்கள் கைவிடவேண்டும். தமிழ்த் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமைதான் இதற்கு ஒரே வழி என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே நாட்டை முன்னேற்ற ஒரே வழி.” என அவர் தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பு உறுப்பினர் மீதான தாக்குதல் அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் காட்டுகிறது.” – சுகாஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

தனியாள் பிரச்சனைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டுமே தவிர காடைத்தனமாகவல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

சட்டத்தைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கோருகின்றோம். அரச அராஜகத்தை நாங்கள் ஒருபோதும் மௌனமாகக் கடந்துசெல்லத் தயாரில்லை-என்றார்

“ஐ.நாவில் வெற்றுப்பேச்சு பேசிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய.” – கஜேந்திரகுமார் விசனம் !

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு, தற்போது உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஐ.நாவில் வைத்து  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பது வெற்றுப் பேச்சே.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்)சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசுகையில்,

கடந்த 19 ஆம் திகதி நியூயோர்க் நகரில், ஐ.நா. பொதுச்செயலாளரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சந்தித்தபோது, உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசு ஆட்சிக்கு வந்த சிறிதுகாலத்தில், பல எண்ணிக்கையிலான புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தது. இவ்வாறாக தடை  செய்துவிட்டு ஐ.நா.வுக்கு செல்லும்போது இவ்வாறு கூறுகின்றனர். இது முழுமையான வெற்றுப் பேச்சே.

இதேவேளை, காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழை  வழங்குவதற்காக நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி  கூறுகின்றார். அப்படியானால்  அவர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதேபோன்று ஆட்சிக்கு வந்த பின்னர் பல தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார். தண்டனைக் காலம் முடிவடையவுள்ளவர்களே அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறான அறிவித்தல்கள் சர்வதேசத்துக்கு ஜனாதிபதி வழங்கும் வெற்றுப் பேச்சுகளாகவே இருக்கும் – என்றார்.

அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார் யாழ். மாநகர முதல்வர் – மணிவண்ணனுக்கு எதிராக அவருடைய கட்சியினரே போராட்டம் !

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் செயற்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காதவிடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.