தமிழ் தேசியக்கூட்டமைப்பு

தமிழ் தேசியக்கூட்டமைப்பு

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.” – எம். ஏ. சுமந்திரன்

நாட்டிற்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செவ்வாயக்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பை சந்திக்கின்ற போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துவோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இராஜாங்க அமைச்சரொருவரால் அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகளை இன்று (25) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இராஜாங்க அமைச்சரினால் துன்புறுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்து பேசியிருக்கின்றோம்.  கடந்த 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைக்கு பொறுப்பாக உள்ள இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு வந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இருக்கின்ற கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுறுத்தி தன்னுடைய கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம்.

இது தொடர்பான விசாரணைகள் இடம் பெறுவதாகவும் அறிந்துள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமித்துள்ள விசாரணைக் குழுவும் விசாரணை செய்கின்றது. இதனைவிடவும் கூடுதலான விசாரணைகள் இடம்பெறும் என நாம் அறிகின்றோம். இந்த சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகள் இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற தினத்தில் இவ்விடயம் எழுப்பப்பட்ட போது இந்த விடயத்திற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரவை அமைச்சரான நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டார். இரண்டு தடவைகள் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டார். கைதிகளிடமும் அவர்களின் உறவினர்களுக்கு இதன் காரணமாக ஏற்பட்ட மன உழைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்டார். ஆகவே நடக்காத விடயத்திற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டு இருந்தவர்கள். எனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற முடியாது என எவரும் சொல்ல முடியாது. வவுனியாவில் உள்ளது விளக்கமறியல் சிறையே. அது சிறிய இடம். எனவே முன்னர் நிர்வாகத்திற்கு தேவையானதாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றியிருந்தது போல இவர்களது பாதுகாப்பு கருத்தியும் விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அவ்வாறான சூழலுக்குள் மாற்றப்பட வேண்டும். எனவேதான் அவர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க கூடியதாக இருக்கும். பயம் இல்லாமல் சாட்சியம் வழங்க கூடியதாக இருக்கும். வெளியில் இருக்கும் சாதாரண மக்களே சாட்சியம் வழங்க அச்சப்படும் சூழலில் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து பயப்படுவது நியாயம் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
இவர்கள் நீண்ட காலமாக விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாமல் வழக்குகள் நிறைவு பெறாமல் வைக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாகியும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. வெறுமனே நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமறியல் நீடிப்பு மாத்திரம் நடைபெறுகின்றது. ஆகவே இவர்களது காலம் நீடிக்கப்படாமல் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நாம் பல காலமாக கேட்டு வரும் விடயம் இது.

முற்றுமுழுதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது. அதனை நீக்குவதாக வாக்குறுதி கொடுத்து நீக்காத காரணத்தால்தான் ஐ எஸ் பி வரிச்சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு எதிர்வரும் வாரங்களில் இங்கு வருகின்றார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதனையே நாம் வலியுறுத்துவோம். அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்தால் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்க கூடிய சில சலுகைகளை அவர்கள் கோரக்கூடியதாக இருக்கும். இது நாட்டு மக்களுக்கும் முக்கியமான விடயம். பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் நிலையில் வரிச்சலுகையும் இல்லாமல் போவது மக்களின் வயிற்றில் பாரிய அடியாக இருக்கும். ஆகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நாம் கோருகின்றோம் என தெரிவித்தார்.

“ஐ.நாவில் ஜனாதிபதி கூறிய விடயங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

“மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்” – இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

“மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்” என திறன் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆய்வு மற்றும் புத்தாக்கத்துக்கான இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது “தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கில் உள்ள ஏனைய கட்சிகளும் தமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் இருக்குமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது ,

இதற்கு பதிலளித்த அவர்,

அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலையே பின்பற்றி வருகிறது. சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பொறுத்தே இவ்வாறான அரசியல்வாதிகளின் நிலைநிறுத்தல் அமையும்.

வறுமை குறைந்தால், பொருளாதார நிலை ஸ்திரமடைந்தால், சுகாதார நிலை நன்றாக மாறினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த தேர்தல் காலத்தில் இவ்வாறான மக்கள் பிரச்சினைகளை அவர்கள் விற்றுப் பிழைத்தார்கள். மக்கள் வறுமையில் இருந்தால் அது பற்றி அரசியல்வாதிகள் பேசுவார்கள்.

வடக்கில் மட்டுமல்ல நாட்டின் மற்றைய இடங்களிலும் இதே நிலைதான். இதற்கும் இன மத பேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்.” என்றார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி !

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த முடிவை எடுக்கும் போது கூட்டமைப்பினுடைய தலைவர் தங்களுடன் கலந்துரையாடவில்லை என நேற்றையதினம்  மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதீக்கப்படுகின்றனர்.

அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்திலாவது கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

சம்பந்தன் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன விடையத்திலே இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சேனதிராஜாவிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. குறித்த தேசிய பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்மந்தன் ஒரு வயது முதிர்ந்தவர்.அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும்.

எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் அங்கு குறிப்பிட்டார்.