பிரதமர் மஹிந்த ராஜபக்ச

Friday, December 3, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

“மகிந்தராஜபக்ஷ அரசியலிலிருந்து விலக வேண்டும்.” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசில் பல கட்சிகள் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் ராஜபக்ஷக்களுடைய நடவடிக்கைகள் பங்காளிக்கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. முக்கியமாக அரசின் நிலை தொடர்பில் விமல் வீரவங்ச , மைத்திரிபால சிறீசேன, வாசுதேவநாணயக்கார ஆகியோர் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கும் போது அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்த போது ,

அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது, பதினொரு சகோதர கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாம் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம்.

அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தாலும் அவர் அரசியல் ரீதியாக செயலிழந்துள்ளார். அவர் அரசியல் மேடையிலிருந்து விலக வேண்டும் .
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் எதிர்பார்ப்புகளை அழித்து வருவதாகவும் நாணயக்கார தெரிவித்தார்.

“சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை .மக்களுக்கு உறுதியளித்தது போல் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி !

“சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை .மக்களுக்கு உறுதியளித்தது போல் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியாக தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு நாம் வாக்குறுதியளித்துவிட்டோம்.  அதேவேளை, புதிய அரசமைப்பும் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்துவிட்டோம். எனவே, இந்த இரு வாக்குறுதிகளையும் நாம் மீறவே முடியாது. முதலில் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தையும் அதன்பின்னர் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். அந்தக் கருமங்களிலிருந்து நாம் பின்னிற்கப்போவதில்லை.

20ஆவது திருத்தம் அவசியமற்றது என்ற மதத் தலைவர்களின் கோரிக்கையை நாம் கவனத்தில்கொள்கின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியையும் எமது அரசையும் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை நாம் ஏமாற்ற முடியாது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள குழுநிலை விவாதத்தின்போதும்  திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதன்போது உயர்நீதிமன்றத்தின் கட்டளையும் கவனத்தில்கொள்ளப்படும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி நாம் எதனையும் செய்ய முடியாது. ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை. அதைத் தவிர்க்கும் வகையில் சட்ட வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரமுனவின் தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும் ! – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மாபெரும் வெற்றி இந்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் – 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.

மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்.

இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும். இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது.

இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன். என்றார்.