வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

“தமிழரின் இனப்படுகொலை தொடர்பில் பேசும் உரிமையை கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர்கள் வழங்கவில்லை.”- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பு

இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு மீண்டும் துணைபுரிவதாகவே அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு காரணமானவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது, ஒற்றையாட்சி அரசாங்கத்தை பலப்படுத்தி, கூட்டமைப்பின் கதிரை அரசியலுக்கு வெள்ளை அடிக்கும் செயலாகவே நாம் பாக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்படுகொலை என்பன தொடர்பாக சர்வதேசமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். இவை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சை நடத்துவற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர் ஒருபோதும் வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம் உள்ளுர் பொறிமுறையின் மூலமாகத் தீர்வு காணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடன் பேச்சுக்களை நடத்தியமை சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கும் சதி முயற்சியாகவே நாம் பாக்கின்றோம்.

சர்வதேச விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள இனவழிப்பு அரசாங்கம் ஒவ்வொரு ஐ.நா அமர்வையும் சமாளிக்க கூட்டமைப்பின் கதிரை அரசியலை சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகின்றது.

இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு போதும் கொலையாழிகள் தீர்வைத் தரப்போவதில்லை. மீண்டும் மீண்டும் அதில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கே வழிவகுக்கும்.

மேலும், இனவழிப்பில் ஈடுபட்ட குற்றவாழிகளிடம் தீர்வை எதிர்பார்ப்பதோ அதற்கான பேச்சுக்களை நடத்துவதோ இனவழிப்பு கூற்றவாழிகளை நீதிபதிகளாக்கும் செயலாகும்.- என்றார்.

“அரச புலனாய்வு துறையினரால் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீது தொடர்ந்து அழுத்தம்.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

இலங்கை நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். ஆனால், தமிழர்களுக்கு இன்றைய நாள் ஒரு கறுப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் மரண சான்றிதழ் வழங்குவோம் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது

திருகோணமலை அன்புவெளிபுரம் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை. நாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழவில்லை. அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக இன்றுவரை அரச புலனாய்வு துறையினர்களின் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பின் தொடரப்பட்டு அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றோம். நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்து அரசியல் தலைமைகளும், அரச அதிகாரிகளும் இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒவ்வொரு தீர்க்கமான கருத்துக்களும் தெரிவிக்காத நிலையில் ஆண்டுதோறும் தரவுகள் மாத்திரம் பெற்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

அவ்வாறு பெறப்பட்ட தரவுகளுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் கிட்டாத நிலையில் நீதியமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு, ஊடகங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர்கான மரண சான்றிதழ்கள் வழங்குவதாக தெரிவித்த விடயத்தை இன்றைய சுதந்திர தினத்தில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமது உறவுகளுக்கு நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும். எமக்கு மரண சான்றிதழ் தேவையில்லை. அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும். ஜனாதிபதி கூறிய அதே வார்த்தையை மனப்பாடம் செய்துகொண்டு நீதியமைச்சர் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற விடயத்தை கூறுவதை விட்டுவிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு எமக்கு சரியான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

நீதியமைச்சரின் குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ இவ்வாறு கடத்தப்பட்டு அவர்களுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றால் அவர் ஏற்றுக்கொள்வாரா? என அவர் கேள்வி எழுப்பினார்

மேலும், 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாட்டில் இன்று வாழும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு சுதந்திர தினத்தை கொண்டாடுவது? நாட்டு மக்கள் என்ற வகையில் இவ்வாறான அநீதிகள் இழைக்கப்படாமல் இருந்தால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக இந்த சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியிருக்கலாம் என திருகோணமலை தமிழர் சமூகத்தின் இணைப்பாளர் ஆர்.நிக்லஸ் தெரிவித்தார்

“வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையை புறக்கணியுங்கள்.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம்

பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கையில் யாரும் பங்கேற்க வேண்டாமென யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 13 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் நாங்கள் பல போராட்டங்கள், பேரணிகளை நடாத்தியுள்ளோம். எத்தனையோ ஆணைக்குழுக்களுக்கும் ஏறி இறங்கி விட்டோம் எந்த பதிலும் இல்லை. மாறாக ஒவ்வொரு ஆணைக்குழுக்களும் எம்மை குழப்புகின்ற, அச்சுறுத்துகின்ற வகையில்தான் செயற்பட்டுள்ளார்கள். நாங்களும் பல கடிதங்கள் ஆதாரங்களை வழங்கிவிட்டு ஐ.நா மனித உரிமை பேரவையிடமும் முறையிட்டுள்ளோம்.

எமக்கு சர்வதேசம் தான் பதில் தரவேண்டும். அவர்கள் தான் எமக்கு எங்கள் பிள்ளைளை ,கணவன்மாரை சகோதரர்களை கண்டுபிடித்து தரவேண்டும். இந்த அரசாங்கத்தை நம்பி பலனில்லை.இவர்களுடைய ஆட்சியில்தான் இந்த இனவழிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன. இவர்களிடம் எவ்வாறு உண்மையை பெற்றுக்கொள்ள முடியும் .நாங்கள் மூன்று ஐனாதிபதிகளை கண்டுவிட்டோம் எந்த பதிலும் இல்லை.

எதிர்வரும் பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சனி ஞாயிறு கிழமைகளில் நடைபெறவுள்ளது .இந்த நடமாடும் சேவையில் பல விடயங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சேவையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் யாரும் செல்ல வேண்டாம் இவர்களை நம்பி எந்த பலனும் இல்லை ஆகவே யாரும் செல்லக்கூடாது என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

300 மில்லியனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் – காணாமல் போனோரை கண்டுபிடித்து தாருங்கள். !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டுமே தவிர நிதி தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போர் முடிந்து கடந்த 12 வருடகாலமாக எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே போராடி வருகின்றோம். எமக்கு நிதி தேவையில்லை என்பதை இந்த நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் எப்போதோ நாம் தெட்டத்தெளிவாக கூறிவிட்டோம்.

எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு.  அதற்காகவே வெயில் மழை பாராது வீதிகளில் இருந்து போராடி வருகின்றோம்.  வரவு செலவுத்திட்டத்தில் காணாமல் போன குடும்பங்களுக்காக 300 மில்லியன் அரசால் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எமக்காக இந்த நிதி ஒதுக்கப்படவில்லை.

இது காணாமல் போன எமது உறவுகளை சாட்டாக வைத்துக்கொண்டு தமது சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த நிதியினை ஜனாதிபதி ஒதுக்கியிருக்கின்றார் என்பதே எமது நிலைப்பாடு.

எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். வரவுசெலவு திட்டத்தில் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டமையை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். என்றார்