அத்தே ஞானசார தேரர்

அத்தே ஞானசார தேரர்

“பௌத்தத்தை அவமதித்தால் மட்டுமே கைது செய்கிறீர்கள். ஏனைய மதங்களை அவமதித்த ஞானசார தேரவை கைது செய்ய மாட்டீர்களா..? – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைதுசெய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் பௌத்தைஅவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார் அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவவழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முஸ்லீம்கள் தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வுபேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விடதீயநோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்லமனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைதுசெய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை பௌத்தர்களாகிய நாங்கள் பௌத்தகொள்கைகளை நேர்மையாக பின்பற்றினால் இன்றுள்ளது போல நாடு குழப்பத்தில் காணப்படாது எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பௌத்தம் உயர்ந்த மதிப்பை பெறவேண்டியது அவசியம் ஆனால் ஏனைய அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவத்தை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

முஸ்லீம்களை புண்படுத்திய அத்தே ஞானசார தேரர் – கைது செய்யுமாறு பிடியாணை !

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகாதமைக்கான நியாயமான காரணத்தை பாதுகாப்பு தரப்பு முன்வைக்கத் தவறியதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்ததாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.” – ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை !

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால், கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தன்று இவர்களில் சிலருக்கு விடுதலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறையில் இருக்கும் போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை தேடி வந்து அவர்களின் வாழ்க்கை கதைகளை கூறினர். அவர்களுக்கு நடந்தது என்ன, ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினர் போன்ற விடயங்களை கூறினர்.

போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காயங்களை மேலும் காயப்படுத்திக்ககொண்டிருக்காது, விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது முக்கியமானது என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் எடுத்துரைத்தோம்.

இல்லை என்றால், இதனை அடிப்படையாகவும் ஒரு காரணமாகவும் கொண்டு, மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணிக்குழு என்ற வகையில் நாங்கள் வடபகுதிக்கு விஜயம் செய்தோம். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சிறையில் இருக்கும் பலரது பெற்றோர் எம்மை சந்தித்தனர்.

சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடந்தது, அப்போது நாங்கள் ஜனாதிபதிக்கு இதனை நினைவூட்டினோம்.

இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனை செய்தால், பிரிவினைவாத கரு நிழல் மீண்டும் ஒருங்கிணைய இருக்கும் சந்தர்ப்பை இல்லாமல் செய்யலாம். அந்த காலத்தில் எமது இளைஞர் ஒருவர் அங்கிருந்தாலும் அவரும் புலி உறுப்பினர்தான். இதுதான் உண்மை நிலை. நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி சிலருக்காவது விடுதலை கிடைக்கும் என நாம் நம்புகிறோம். என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? – இம்ரான் மஹ்ரூப் கேள்வி !

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன..?  என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்ததது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் நியமிக்கப்படும் துறைசார்ந்த வாண்மை மிகுந்தோரினால் தான் பாடநூல்கள் எழுதப்படுகின்றன. இஸ்லாம் பாடநூல்களும் அவ்வாறு தான் எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதி வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில் அரசில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் அலிசப்ரி கவனம் செலுத்த வேண்டும். இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தேசிய காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன? இந்த மௌனம் இவர்களது சம்மதத்தோடு தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது குறித்து இவர்களும் தெளிவுபடுத்த வேண்டும். அற்ப சுய இலாபத்துக்காக சமுக உரிமைகளை தாரைவார்க்க வேண்டாமென நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரசிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக கூறும் இவர்கள் பெற்றுக் கொடுக்கும் நன்மை இதுதானா என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கூட இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது முஸ்லிம் மக்களது உரிமை சார்ந்த பிரச்சினை இல்லை என இக்கட்சிகள் கருதுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. மீளப்பெறப்படும் இஸ்லாம் பாடநூல்களில் என்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எந்த மார்க்கத்தினதும் விடயங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமையை அந்தந்த மார்க்க அறிஞர்கள் தான் செய்ய வேண்டும்.

மார்க்கத்தோடு தொடர்பில்லாத வேறு யாரும் செய்ய முடியாது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இராணுவத்துக்கு சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லை. துப்பாக்கி முனையில் கொல்வதே நோக்கம்.” – சிவஞானம் சிறீதரன்

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

நாட்டில் ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம். நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்காக, சிறையில் இருந்த தேரரை கொண்டு வந்து தனது ஆயுதமாக கோட்டா பயன்படுத்தி வருகின்றார். இராணுவ தளபதிகளை அமைச்சின் செயலாளர்களாக அவர் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 14 அமைச்சின் செயலாளர்கள் இராணுவ தளபதிகள். அத்துடன் ஆளுநர், திணைக்கள தலைவர்களும் அவ்வாறே நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்த பெருமானின் அவதாரமாக தன்னை காட்டிக்கொள்ளும் தேரர் இப்பொது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.
நாம் இப்போதும் இராணுவ ஆட்சியில் தான் உள்ளோம். இது தமிழ் மக்களுக்கு மட்டும் இடி அல்ல. சிங்கள மக்களுக்கும் இது ஆபத்தானது. ஏனென்றால் 1970களில் கதிர்காமத்து அழகி மன்னம்பேரியை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இராணுவத்தினர்.

பிரேமதாச காலத்திலும் சுமார் 50 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்காக அப்போது பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச சர்வதேசம் வரை சென்றிருந்தார். ஆகவே, இராணுவத்துக்கு சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லை. துப்பாக்கி முனையில் அனைவரையும் கொல்வதே அவர்களின் நோக்கம்.

தமிழர்கள் முதலும் இராணுவ ஆட்சியில் இருந்தார்கள். அதேபோல பொருளாதார ரீதியான பிரச்சனைகளை தமிழர்கள் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். எனவே தமிழர்களுக்கு இது புதிதல்ல. சிங்கள மக்கள் தற்போது துன்பத்தை உணர ஆரம்பித்துள்ளனர் என்றார்.

“பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரர்.” – மனோகணேசன் குற்றச்சாட்டு !

“வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரருக்கும் பங்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும்கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.

ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும் எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது. இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?
இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.

இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

“உலகில் வேறு எந்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத்தையும் விட பயங்கரமானது இஸ்லாமிய தீவிரவாதம்.” – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தலைவர் ஞானசாரதேரர் காட்டம் !

வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சியால்கோட்டில் பிரியந்த குமார எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசியுள்ள அவர் ,

உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது . சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும்.

உலகில் மததீவிரவாதம் உட்பட பல வகையான தீவிரவாதங்கள் காணப்படுகின்ற போதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் மிகவும் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த தீவிரவாதத்தின் விளைவுகளும்- பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமே மிகவும் பயங்கரமானது காட்டுமிராண்டித்தனமானது ஏனைய தீவிரவாதங்கள் இதற்கு அருகில் நெருங்ககூட முடியாது மனிதர்கள் நூற்றாண்டுகளாக சாதித்த விழுமியங்களை அது தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

“தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.” – யாழில் ஞானசாரதேரர் !

“கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.” என  ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த பணி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை. தமிழர்களது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள். கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது, இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். இதன்போது ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“ஒரு குற்றவாளியை ஜனாதிபதி செயலணியின் தலைவராக்கியுள்ளார்கள்.” – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவலை !

“இனங்களுக்கு இடையேயான இன ஒற்றுமையை ஒழிக்கவா “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி..? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை பாதுகாப்புக்கு தொடர்பில்லாமல் நூற்றாண்டு காலமாக சில சமூகங்கள் பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை மாற்றவேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி செயலணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

தனியார் சட்டங்களுக்கும் பாதுகாப்புக்கும் எந்த அடிப்படையில் தொடர்பிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். இன ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தி சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற நிலையை இந்த செயலணி ஏற்படுத்திவிடுமா என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செயலணிக்குழுவுக்கு தலைமை தாங்கும் மதகுருவான கலகட அத்தே ஞானசார இந்த நாட்டின் பல நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை கையிலெடுத்ததனால் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர். அப்படிப்பட்டவர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த செயலணி மீது நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.

இது சம்பந்தமாக நீதியமைச்சரே தனக்கு தெரியாமல் நடந்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் அதிருப்தியுற்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நியமன விடயம் தொடர்பில் எமது நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் எங்களை இந்த செயலணியின் செயற்பாடுகளினால் அமைதியின்மையும், பிளவையும் உண்டாக்கிவிடுமா எனும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையன் என்ற ரீதியில் செயலணி சகல விடயங்களுக்கும் ஆப்பாக அமைந்துவிடும் எனும் கவலை என்னுள் உருவாகியுள்ளது. இந்த நாட்டில் நிம்மதியான, ஒற்றுமையான, நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசிலுள்ள சில தலைவர்கள் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாங்கள் வேண்டிக்கொள்வது “ஒரே நாடு ஒரே சட்ட செயலணி”யை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் பொருளாதார உயர்வுக்கான திட்டங்களை வகுத்து மக்களின் வாழ்வுக்கு உதவும் நல்ல திட்டங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களுக்கு இடம் – யார் அவர்கள்..?

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனா்.

கலகொட அத்தே ஞானசார தேரர் ததலைமையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.