அபிராமி கணேசலிங்கம்

அபிராமி கணேசலிங்கம்

லண்டன் ஹரோ தமிழ் தம்பதிகளின் ஒரு மில்லியன் பவுண் – 40 கோடி ரூபாய் மோசடி!! தம்பதிகள் தலைமறைவு!!!


வீட்டுக்கடன் மோசடியில் ஒரு மில்லியன் பவுண்கள் வரை ஏமாற்றி அபி – ரகு தம்பதிகள் தலைமறைவாகி உள்ளனர்.

அபி – ரகு தம்பதிகளிடம் சில நூறாயிரம் பவுண்களை இழந்ததாக பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் தேசம்நெற்றிடம் தொடர்புகொண்டு அவர்களது முகவரியை அறிந்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மையில் அபி – ரகு தம்பதிகளினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட இரு முகவரிகளுக்கு கடன் மற்றும் கட்டண வசூலிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விஜயத்தில் அக்குடும்பத்தினர் அங்கு இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

ரகு என்று அறியப்படும் ராகுலன் லோகநாதன் கொழும்பைச் சேர்ந்தவர். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1985 இல் பிறந்த அபி என்று அறியப்பட்ட அபிராமி கணேசலிங்கம் யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அபி – ரகு தம்பதிகளால் பாதிக்கப்பட்ட சிவராஜா சிவரூபன் தேசம்நெற்றிடம் சம்பவம் பற்றி தெரிவிக்கையில் நோர்வேயில் வாழும் தான் லண்டனில் வீடு வாங்குவது தொடர்பில் தன்னுடைய உறவுப் பெண்ணான அபிராமி கணேசலிங்கத்திடம் 2018இல் தொடர்பு கொண்டதாகவும் அவர் தன்னால் உடனடியாகவே அதனைச் செய்து தரமுடியும் என்று ஊக்கப்படுத்தி அதற்கான முற்பணத்தை உடனடியாக அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கின்றார். தனக்கு உறவு முறையாகவும் இருந்தவராதலால் 100 000 பணத்தை வங்கியூடாக அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அபி பணத்தை பெற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வத்தை வீடு வாங்கியத்தில் காட்டவில்லை என்று தெரிவிக்கும் சிவரூபன் வீடு வாங்குவதை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடித்து வந்ததாகத் தெரிவித்தார்.

என்ஐ நம்பர் எடுக்க வேண்டும் லண்டனில் முகவரி வேண்டும் அது வேண்டும் இதுவேண்டும் என்று நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி ஒரு வருடமானதன் பின் அபியில் இருந்த நம்பிக்கை கரைந்துவிட்டதால் தான் பணத்தைத் திருப்பிக் கேட்டதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அப்போது தான் அபி அப்பணத்தை தான் வேறொரு வங்கியில் வைப்பிட்டதாகவும் அது ஒரு வருடத்திற்குப் பின்னரே எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ‘நான் இதனை வைப்பிடச் சொல்லவில்லையே?’ என்று கேள்வி எழுப்பிய சிவரூபன் பிரான்ஸில் உள்ள அபி குடும்பத்தின் இரத்த உறவுகளையும் தொடர்புகொண்டுள்ளார். அவர்களோ சிவரூபனின் தொடர்புகளை புளொக் செய்து விட்டனர். இறுதியில் சிவரூபன் கிழக்கு லண்டனில் உள்ள சதா சொலிசிற்றேஸின் சட்ட உதவியைப் பெற்று தனக்கு இழைக்கப்பட்டது அநீதியானது என்பதை சட்டப்படி நிரூபித்தார். நீதிமன்றத்திற்கு ஒரு தடவை வந்திருந்த அபிராமி கணேசலிங்கம் தெரிவித்த கதைகளை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.

2021இல் அபிராமி கணேசலிங்கம் சிவரூபன் சிவராஜாவிடம் பெற்றுக்கொண்ட 100 000 பவுண் பணத்தையும் 2018 முதல் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்கிடையே தேசம்நெற் மற்றுமொரு வயோதிபத் தம்பதிகளுக்கு அபி – ரகு தம்பதிகள் செய்த மோசடியை 2022 ஜனவரியிலும் மார்ச்சிலும் அம்பலப்படுத்தியது. லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (8 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limitted அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (45) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ராகுலன் லோகநாதன், அபிராமி கணேசலிங்கம் ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை. ஆனால் இத்தம்பதிகளோ மேட்டுக்குடித்தனமான டாம்பீகமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார். இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது. பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமையில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது. குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபிராமி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் 2022 ஜனவரியில் தேசம்நெற்றை தொடர்பு கொண்டிருந்தார். அவரிடம் முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்ற தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார். அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக்கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி. அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர்இ ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும்இ குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேசமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது. அபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது. கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை. அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

2022 பெப்ரவரியில் தேசம்நெற் இச்செய்தியை வெளிக்கொண்டுவந்ததற்கு எதிராக அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக த ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும் அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும் அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார். எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. கடைசி எதிரியான சிவரூபன் சிவராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இச்சமயத்திலேயே அபிராமி கணேசலிங்கம் சிவரூபன் சிவராஜாவுக்கு சாதகமாக கவுன்ரி கோட் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார். ஆனால் மேன்முறையீட்டு வழக்கிற்கு அவர் வரவில்லை. அதனைத் தொடர்ந்து 2023 முற்பகுதியில் அம்மேன்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட ஏற்கனவே கவுன்ரி கோட் இனால் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது. சிவரூபன் சிவராஜாவுக்கு நீதி கிடைத்தும் அவருக்குச் சேரவேண்டிய நிதி வந்து சேரவில்லை. ஆனால் அந்த குரொய்டன் வயதான தம்பதிகளோ நீதிக்கும் நிதிக்கும் வெகு தொலைவில் நிற்கின்றனர். இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதே லண்டனில் வாழும் சீனப் பின்னணியுடைய ஆசியப் பெண்ணொருவர் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார். தன்னை ஜெய் என்று அறிமுகப்படுத்திய அவர் அபியின் தொடர்புகள் ஏதும் கிடைக்குமா என்று கேட்டார். தானும் பல்லாயிரக் கணக்கில் அவரிடம் பறிகொடுத்துவிட்டதாகவும் பண்டிகைக் காலம் முடிய தொடர்புகொள்வதாகவும் கூறினார். அபி – ரகு தம்பதிகளின் மோசடிகள் தொடர்பில் தேசம்நெற்றை தொடர்புகொண்டவர்கள் இழந்ததே சில மில்லியன்களைத் தாண்டுகின்றது.

தங்களை பிரபல்யங்களோடு அடையாளம் காட்டி தங்கள் டாம்பீகங்களை சமூகவலைத் தளங்களில் போட்டு மற்றவர்களை ஏமாற்றி தங்கள் வலைக்குள் வீழ்த்தி கொள்ளையடித்து பாதிக்கப்பட்டவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலரும் இத்தம்பதியினரால் பெரும் கடன்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு திறமையாகக் கருதப்படும் போக்கு உள்ளது. பல செல்வந்தர்கள் தாங்கள் பணம் வைத்திருப்பதால் தங்களை திறமையானவர்கள் என்று எண்ணிக்கொள்பவர்கள் பலர். பணம் படைத்தவர்களில் அபி – ரகு போன்ற மிகச்சிலரே அவர்களுடைய அதீத பேராசையால் அம்பலப்பட்டுள்ளனர். மிகப் பலர் ‘ஓம் சரவணபவ’ உட்பட தங்களுடைய பணப் பலம் அரசியல் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்து விடுகின்றனர். தவறணை நடத்துவது அங்கு போதைப் பொருளும் விற்பது கோயில் நடத்துவது கோல்மால் செய்வது குழந்தைகளை பாலியல் சுரண்டல் செய்பவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அடியாள் வைத்து ஆளை மிரட்டுவது என்று பணக்கொழுப்பு செய்கின்ற காடைத்தனங்கள் எல்லை மீறிவருகின்றது. தேசம்நெற் இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் பணப்பலத்தைக் கொண்டு சட்டதை வைத்து மிரட்டுவது அடியாட்களை வைத்து மிரட்டுவது சமூக வலைத்தளங்களில் தேசம்நெற் ஊடகவிளலாளர்களைத் தூற்றுவது என்று கடந்த கால்நூற்றாண்டுகளாக பல இடைவிடாத முயற்சிகள் நடைபெறுகின்றது. தமிழ் ஊடகங்களில் கூடுதலான சட்ட மிரட்டல்களை எதிர்கொண்ட ஊடகமாக தேசம்நெற் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக குரலற்றவர்களின் குரலாக தேசம்நெற் தொடர்ந்தும் இயங்கும்.

தேசம்நெற் பதிவை நீக்கக்கோரிய விண்ணப்பத்தை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்தது!

அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக தம்பிராஜா ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும், அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடைக்காலத்தடையுத்தரவைக் கோரிய விண்ணப்பதாரிகளான அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் பற்றிய தம்பிராஜா ஜெயபாலனால் எழுதப்பட்ட செய்தியொன்று தேசம்நெற்றில் பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டு இருந்தது. வாதிகளில் ஒருவரான ராகுலன் லோகநாதன் இயக்குநராக இருந்த ரெய்டன் (Raidenn Ltd) என்ற நிறுவனம் பற்றியும் அதன் வாடிக்கையாளர்கள் பற்றியும் அச்செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளால் தாங்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அச்செய்தியின் கீழ் அபிராமி கணேசலிங்கம் ராகுலன் லோகநாதன் ஆகியோருக்கு சார்பாகவும் எதிராகவும் கருத்தக்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

மேலும் அச்செய்தியில் ராகுலன் லோகநாதன் இச்செய்தி தொடர்பாக தம்பிராஜா ஜெயபாலனோடு தொடர்புகொள்வார் என்று அபிராமி கணேசலிங்கம் தம்பிராஜா ஜெயபாலனுக்கு உறுதியளித்து இருந்தார் என்றும் ஆனால் பல வாரங்களாகியும் பல்வேறு வகையில் முயற்சித்தும் ராகுலன் லோகநாதன் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது.

இதன் பின்னணியிலேயே அபிராமி கணேசலிங்கன் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோர் வில்சன் கவுன்ரி கோர்ட்டில் இச்செய்திக்கு எதிராகத் தடையுத்தரவைக் கோரியிருந்தனர். பெப்ரவரி 17இல் நீதிபதி கன்வர் அபிராமி கணேசலிங்கம் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோரின் விண்ணப்பம் சிபிஆர் 3.40 (CPR 3.40. க்கு அமைவாக அமையாததன் அடிப்படையில் அதனை நிராகரிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

அக்கட்டளை வருமாறு குறிப்பிடுகின்றது: The application for Injunction part 8 claim are struck out pursuant to CPR 3.40. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்: இந்த விணப்பத்துக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம், இது நீதிமன்ற செயன்முறைகளை துஸ்பிரயோகம் செய்வதாக அமையலாம் எனப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என ஜஸ்ரிஸ்.கோ.யுகெ இணையத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கடைசி எதிரியான ரூபன் நடராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக அபிராமி கணேசலிங்கம் – ராகுலன் லோகநாதன் ஆகியோரோடு தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்கள் தேசம்நெற்றை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய பக்கதை சொல்வதற்கான முழுமையான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.