ஆறுதிருமுருகன்

ஆறுதிருமுருகன்

லண்டன் சைவ மாநாடு ஒரு பார்வை

ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.

தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.

இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.

இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.

ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.

இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.

இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.

இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.

பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.