இரசாயன உரம்

இரசாயன உரம்

இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – முடிவுக்கு வந்த அரசின் 07 மாத நாடகம் !

இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் இரசாயன உர நடனம் இன்றுடன் முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இரசாயன உரத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் இதனைச் செய்ய முடியாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறினர்.

வாயால் வற்றாலை  நடுவது போல்தான் இருந்தது அவர்களின் கருத்து. தற்போது நாங்கள் உதவித் தொகை வழங்கப்போவதில்லை. இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் ஆளும் தரப்பினர் கூறினர்.

நாட்டில் கடந்த 7 மாத காலமாக நடித்த நாடகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நடித்த நாடகமும் தட்டிய தாலமும் இன்று இல்லை. அரசாங்கம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நடனம் ஆடியது என்றும் தோ்தலின்போது “அரசாங்கம் பாம்பு நடனம் ஆடியது”,” கொரோனா பாணி நடனம் ஆடியது”, ”இப்போது காபனிக் நடனம் ஆடுகிறது” என்றும் காபனிக் நடனம் இன்றுடன் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“முட்டாள்த்தனமான முடிவுகளையே அரசு எடுக்கிறது.” – சஜித்பிரேமதாஸ காட்டம் !

“அரசின் முட்டாள்தனமான தீர்மானங்களால் இலங்கையின் தன்னறைவு பொருளாதார கோலத்தை அழிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் உரப் பிரச்னை தொடர்பில் விவசாய அமைச்சரிடம்  கேள்வி எழுப்பி உரையாற்றும்போதே இவ்வாறு சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 7 வீதம் உள்ளது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில், சுமார் 2.4 மில்லியன் ஹெக்டேயர் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி 2010 ஆண்டளவில் விவசாயிகளால் நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்ய முடிந்தது.  விவசாயிகள் மட்டுமின்றி வேளாண்மை வல்லுநர்கள், வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின் அர்ப்பணிப்பின் விளைவாக, 2019 இல் உலக உணவுப் பாதுகாப்புச் சுட்டெண்ணில் இலங்கை 66 ஆவது இடத்தைப் பிடித்தது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசு விவசாயத்துக்குப் பயன்படுத்தும் இரசாயன உரங்களுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளதால், தோட்டப் பயிர்கள் உட்பட முழு விவசாயத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நாடு ஒரு தொற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு பஞ்சத்தால் பாதிக்கப்படவில்லை என்றால் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம். ஆனால், ஒரு நாட்டில் விவசாயம் குறித்து இவ்வளவு தீவிரமான முடிவை எடுப்பதற்கு முன், அது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளும், முன்னுதாரணங்களும், போதிய ஆய்வுகளும் நடந்துள்ளதா என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இது அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதான முடிவுகளேயன்றி வெறும் அரசியல் முடிவாக எடுக்கக் கூடாது. ஏனென்றால், அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதன் விளைவுகள் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மோசமாகப் பாதிக்கக் கூடும். உள்நாட்டில் போதிய உணவு விநியோகம் இல்லாதபோது அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் சிக்கல் இருக்கலாம், இது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு வழிவகுக்கும். இந்த அனைத்து காரணிகளுக்கும் மேலாக அரசின் இந்த முட்டாள்தனமான முடிவால் நாடு மேலும் இரண்டு வித ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. அதாவது, அனைத்து கொள்முதல் செயல்முறைகளையும் பயன்படுத்தி கரிம உர வெறி மூலம் ஒரு புதிய வணிக உயர் வர்க்கம் உருவாக்கி, அதன் மூலம் கமிஷன்களைப் பெறுவதற்கு, சரியான ஆராய்ச்சி முடிவுகளால் சான்றளிக்கப்படாத நச்சு உரங்கள் மற்றும் நானோ நைட்ரஜன் உரங்களின் இறக்குமதியைத் தொடங்குவதாகும்.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சட்டம் வெளிப்புற உயிரியல் உள் நுழைவில் இருந்து நமது பல்லுயிர் கொண்ட சிறிய தீவை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. கரிம உரங்கள் என்று அழைக்கப்படும் இந்த தரங்களால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட கப்பல்கள் இப்போது இலங்கையைச் சுற்றி வலம் வந்து அடையாளம் காணப்பட்ட உரங்களை எப்படியாவது எங்கள் தாய்நாட்டுக்கு இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலைகளை சிக்கலாக்கும் வகையில் நமது விவசாய நிலத்தை பெரிய அளவிலான பரிசோதனைக் களமாக மாற்ற, போதுமான அளவு தரப்படுத்தப்படாத மற்றும் உள்நாட்டில் பரிசோதனை செய்யப்படாத மில்லியன் கணக்கான லீட்டர் நனோ நைட்ரஜன் உரம் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மை வல்லுநர்கள், மண் தொடர்பான வல்லுநர்கள் மற்றும் பயிர் சார்ந்த வல்லுநர்கள் கூட இந்த தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நச்சுகளை கொட்டுவதால் ஏற்படும் விளைவுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், அவர்கள் எதற்கும் செவிசாய்க்காமல், மக்களின் உணவுப் பாதுகாப்பையும், வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த நிலத்தையும் அரசாங்கம் தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறது.

தன்னிறைவு பெற்ற விவசாயப் பொருளாதாரம் என்று சொல்லிக் கொள்ளும் நமது விவசாயிகளை விவசாயத்தில் இருந்து திட்டமிட்டு அகற்றும் முயற்சிதான் மற்ற ஆபத்தான விடயம். முதலாவதாக, போதுமான உற்பத்தி காரணிகளை வழங்காமல் விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துகின்றது. இரண்டாவதாக, அவர்கள் தங்கள் விளை நிலங்களை ஒவ்வாத விஷ உரங்களைப் பயன்படுத்தி தரிசு நிலங்களாக மாற்றுவார்கள். விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக அறிவித்து கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படும் நோக்கில் விவசாய நிலங்களை பாழாக்குவதற்கு அரசு அடிக்கல் நாட்டுகிறதா என்ற பலத்த சந்தேகங்களை இது எழுப்புகின்றது” என்றார்.