இரா. சம்பந்தன்

இரா. சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஏற்க முடியாது தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையை விரும்புகிறார்கள்- இரா.சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்ரூபவ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

 

அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை நிலையிலும் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.

 

அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.

 

அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

 

எம்மைப்பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.

 

அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்றார்.

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை – ஆளுந்தரப்பு திட்வட்டம் !

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்’ – என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.

அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.’ என்றார்.

ரணில் விக்ரமசிங்க அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் – இரா.சம்பந்தன் நிபந்தனை !

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அவரது அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தச் செய்தியில் சம்பந்தன் கூறியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள – தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர். எனினும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு தைப்பொங்கலையும், தமிழ் – சிங்கள புத்தாண்டையும் தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்புடனேயே கடந்து சென்றுள்ளனர்.

இந்தத் தடவை தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதற்கு ஏற்ற முறையில் அவர் செயற்படுவார் என நம்புகின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை அன்றிலிருந்து இருந்தது. எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைந்தது.

தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது – இரா.சம்பந்தன்

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப்பகிர்வை நோக்கிய செயற்பாட்டில் தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒரு வருட கால அவகாசத்துக்குள் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், கருத்து வெளியிடும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் நீண்டகாலமாக இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் அதற்காக தொடர்ச்சியாக தமது ஆணையை வழங்கியும் வருகின்றார்கள்.

 

அந்த வகையில், ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வினை தொடர்ந்தும் காலம் கடத்திச் செல்ல முடியாது. அவர்கள் தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

 

தமிழ் மக்கள் தங்களுடைய கருமங்களை தாங்களே ஆற்றும் வகையில் சுய நிர்ணய அடிப்படையில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் மீளப் பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவது நோக்கி நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் – இரா.சம்பந்தன் கவலை !

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் மூலக்கிளைகள் மற்றும் தொகுதி, மாவட்டக்கிளைகள் புனரமைப்பு அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் மூலக்கிளை உள்ளிட்டவற்றின் புனரமைப்பின்போது, இலங்கை தமிழரசுக்கட்சியில் நீண்டகாலமாக செயற்படும் அங்கத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் தாம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்ற இரா.சம்பந்தனுக்கு குறித்த விடயம் சம்பந்தமாக உரிய தெளிவு படுத்தல்களுடன் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கரிசனை செலுத்திய இரா.சம்பந்தன், குறித்த மூலக்கிளை உள்ளிட்ட புனரமைப்பின்போது அங்கத்தவர்கள் தெரிவில் தாம் திருப்தி அடையவில்லை என்றும் அந்த தெரிவுகள் இதயசுத்தியுடன் நடைபெற்றாது தன்னை ஆதரிக்கும் கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியின் ஒழுக்காற்றுக்குழு விசாரணைகளை நடத்தி உரிய தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டும் என்றும், தவறுகள் இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக உள்ள சீனித்தம்பி யோகேஸ்வரன், சம்பந்தனின் குறித்த முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்காலிக பொதுச் செயலாளர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் திகதி ஒதுக்கீட்டுடனான அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு கிளை மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை தொகுதி கிளை தெரிவுகள் சம்பந்தமாகவும் முறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கொழும்புக்கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் தலைமையில் நடைபெற்ற தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மூன்று உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதேபோன்று காங்கேசன்துறை தொகுதிக்கான அங்கத்தவர்கள் தெரிவில் குறைபாடுகள் உள்ளதாக கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். எனினும் அது தொடர்பில் இன்னமும் எழுத்துமூலமான முறைப்பாடு ஒழுக்காற்றுக்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரா.சம்பந்தன்  வைத்தியசாலையில் அனுமதி !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஐயாவை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஐயா தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக” தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் தற்போது 90 வயதினை எட்டியுள்ள நிலையில் வயோதிபம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

இல்லாத கூட்டமைப்புக்கு இரா.சம்பந்தன் எப்படி தலைவராயிருக்க முடியும்..? – தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கேள்வி !

“தமிழ் தேசியத்தை சிதைக்க கூட்டமைப்பிற்குள் நுழைந்த விசமிகள் சம்பந்தனை கொண்டே அதனை நிறைவேற்றினர்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின்  கொழும்பு கிளை தலைவர் K.V.தவிராசா தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்;

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இரா. சம்பந்தன் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை எனவும் K.V.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எந்த முகத்துடன் சென்று ரணிலுடன் பேச்சு நடத்த முடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

“யாரும் கூட்டணி அமைக்கலாம். ஆனால் மக்கள் ஆதரவு எமக்குத்தான்.” – இரா.சம்பந்தன்

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.” என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ள நிலையிலும் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே செயற்படப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும் மக்களைப் பலவீனப்படுத்தும்.

தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி, 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி.

தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.

இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் விக்கி தரப்பு..?

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தமிழ்தேசிய கட்சிகள் இன்னமும் ஒரு உறுதியான முடிவுக்கு வராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும் தமது கட்சி இணைவது தொடர்பில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சிக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கையின் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அணியாக போட்டியிடுமெனவும், ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார்.

அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.