இலங்கை – பிரித்தானியா

இலங்கை – பிரித்தானியா

பதவி விலகுகிறாரா வெளிவிவகாரத்துறை அமைச்சர்..? – பேராசிரியர் ஜீ.எல் பீரிஸின் நிலைப்பாடு என்ன..?

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்  பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்  இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே அமைச்சு பதவியை துறக்க தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் பிரித்தானியாவுடனான தொடர்பின் தன்மைகள் பற்றி குறிப்பிட்ட போது ,

அண்மையில் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட அரசமுறை பயணம் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. பல்துறைசார் அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானியா இலங்கையுடன் முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்பு கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளது. பிரித்தானியா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்திற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அதற்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள் அவசியமாகியுள்ளன.

பொதுச்சபை தீர்மானங்களுக்கமைய பிரித்தானியா இலங்கையுடன் பல்துறைகளில் தொடர்பு கொள்ள தீர்மானித்துள்ளது. இலங்கையில் கொரோனா தாக்கத்தின் பின்னரான பொருளாதார முன்னேற்றம், தென்னாசிய வலய நாடுகளை காட்டிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தலில் முன்னேற்றம், ஏனைய பொது காரணிகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு பிரித்தானியா இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்வது அவசியமாகும். இலங்கை உலக நாடுகள் அனைத்தினதும் நம்பிக்கையை வென்றுள்ளது. பிரித்தானியாவின் தீர்மானம் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும்.