உலக உணவுத் திட்டம்

உலக உணவுத் திட்டம்

நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலைவரம் தீவிரமடைந்துவருதிறந்து – உலக உணவுத் திட்ட அறிக்கை!

2023 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலைவரம் தீவிரமடைந்துவருவதாகவும், இதன்விளைவாக பெருந்தோட்டப்பகுதி மக்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத்திட்டத்தின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களின் ஒன்றான உலக உணவுத்திட்டம் கடந்த இருவருடங்களாகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றது.

 

அதன்படி கடந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார நிலைவரம், உணவுப்பாதுகாப்பு நிலை, வழங்கப்பட்ட உதவிகள் போன்ற தகவல்களை உள்ளடக்கி உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

 

உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாம் முன்னெடுத்த உணவுப்பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் 17 சதவீதமானோர் மிதமான உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகக் கணிப்பிடப்பட்டது.

 

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிலைவரம் ஓரளவு முன்னேற்றமடைந்திருப்பினும், அன்றாட கூலித்தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பெருந்தோட்டப்பகுதிகளில் பணிபுரிவோர் உள்ளடங்கலாக வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினர் தற்போதும் மிகையான சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் உணவுப்பாதுகாப்பு நிலைவரம் மிகமோசமடைந்துவருவது கண்டறியப்பட்டதுடன், குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

பொருளாதார நெருக்கடியை அடுத்து உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் போசணை மட்டம் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. 2023 இல் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் 120,230 பேர் மிதமான மந்தபோசணை நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

 

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 27 சதவீதமானோரைச் சென்றடைந்திருப்பதுடன், இந்தப் பெறுமதி ஏனைய அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வானதாகும். இருப்பினும் இச்செயற்திட்டங்களை ஒருங்கிணைத்தல், முறையான கண்காணிப்பை மேற்கொள்ளல் போன்றவற்றில் அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

 

உலக உணவுத்திட்டத்தின் இவ்வருடாந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கைக்கான முதலாம் கட்ட உதவி வழங்கலின் ஊடாக சுமார் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உணவும், 1.2 மில்லியன் பேருக்கு நிதி மற்றும் உணவுசார் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

அதுமாத்திரமன்றி பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 12,817 மெட்ரிக் தொன் அரிசி, சோளம், சோயா என்பன பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 11.7 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் !

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

6.3 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர் என கூறியுள்ளது.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் 2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

தொடர்ச்சியான வறட்சி, வெளிநாட்டு கையிருப்பு, அரசியல் நெருக்கடி, உயர் பணவீக்கம் மற்றும் பொதுக் கடன் போன்ற பல காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

2019 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மை 10 சதவீதமாக இருந்த ஒரு நாட்டிற்கு இது தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

மாத வருமானத்தில் உணவுத்தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் !

தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது

இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவுக்காக பயன்படுத்தியதாகவும் மேலும் 35 வீதமான குடும்பங்கள் சேமித்த பணத்தை அல்லது கடனை செலுத்த தவறியதன் மூலம் அப்பணத்தை கொண்டு உணவு தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் எரிபொருள் விலை குறித்த கவலை ஜனவரியில் 11 வீதத்தால் 6 வீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பொருட்களின் விலை குறித்த கவலை 87 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதியில் ஊவா மாகாணத்தில் அதிக உணவுப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், ஊவா மாகாணத்தில் கடந்த டிசம்பரில் 43 சதவீதமாக இருந்த உணவுப் பற்றாக்குறை ஜனவரி மாத இறுதிக்குள் 47 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேல்மாகாணத்தில் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜனவரி மாதத்தில் உணவுப் பாதுகாப்பின்மை 10 வீதத்தால் குறைந்துள்ளது இதன் காரணமாக ஜனவரி மாத இறுதிக்குள் 23 சதவீதம் உணவுப் பாதுகாப்பற்ற மாகாணமாக மேல் மாகாணம் மாறியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

3.4 மில்லியன் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்துள்ள உலக உணவுத் திட்டம்!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் நிலையிலேயே  உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கொழும்பின் நகர்ப்புறங்களில் கடந்த ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 60.1 சதவீதமாக இருந்தாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் பொது உணவு விநியோகம், பாடசாலை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மூலம் 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ தாம் திட்டமிட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் – உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை !

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன.

6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் கூறியுள்ளன.

ஏறக்குறைய 30% மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், எனவே அவசர உதவி தாமதமானால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என இலங்கை உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர சரண் கூறியுள்ளார்.

ஏறக்குறைய இரண்டு பருவகாலமாக பயிர்ச்செய்கை தோல்வியடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் உணவு உற்பத்தி கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது மற்றும் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் தானியங்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது.

மீண்டும் திரிபோஷா உற்பத்தி – உதவிக்கரம் நீட்டும் WFP !

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரப்பியாக திரிபோஷா வழங்கப்படுகிறது.