எம்.ஏ.சுமந்திரன்

எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் – எச்சரிக்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

 

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

 

தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி !

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் அனுமதிப் பத்திரம் வழங்கியதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

 

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளித்ததைத் தொடர்ந்து சட்டமியற்றும் விவகாரங்களில் தலையிட உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை எழுப்பினார்.

 

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ் சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு சுமந்திரன் தனது மனுவில் கோரியுள்ளார்.

 

பாராளுமன்றக் குழுவின் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத் திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கவில்லையென சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கத் தவறியுள்ளதால் , மனுதாரர் மற்றும் குடிமக்களுக்கு அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14 வது உறுப்புரைகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், சட்டமா அதிபரால் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் சுமந்திரன் கோரிக்கை!

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலைப் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சதாரண பெரும்பான்மையுடன் அச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதாக இருந்தால் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது எமக்கு அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக குழு நிலையில் தெளிவாக வழங்கப்படவில்லை.

அத்தோடு அத்த திருத்தங்கள் 12 மணிக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முறைமையும் உள்ளது.

ஆகவே உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நான் 13 விடயங்களை உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிட்டும் அவை உள்ளீர்க்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன்.

அதன்பின்னர் அதனை சபையில் சுட்டிக்காட்டி சபாநாயகரிடத்தில் எழுத்துமூலமாக வழங்கினேன். அதனை சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடத்தில் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அத்திருத்தங்களை அமைச்சர் குழுநிலையில் இணைத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் குழுநிலையில் அவை இணைத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தற்போதைக்கு தெளிவாக இல்லை.

ஆகவே முழுமையாக ஆராயாத வரையில் குறித்த சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு நாம் சபாநாயகரைக் கோருவதற்கு உள்ளோம் என்றார்.

“மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது.” – தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் கூட்டத்தில் சிவஞானம் சிறிதரன் !

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான வழி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரே இந்த பாதையை கொண்டு செல்வார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறவுள்ளது. அப்பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றர்.

இந்நிலையில் சனிக்கிழமை (06) மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய பின்னர் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆங்கிலம், மொழி, சட்டம், என்பன ஒருவருடைய ஆற்றலும் திறமையுமாகும். இதனை யாரும் இகழ்ந்து பார்க்கத் தேவையில்லை. ஆனால் ஆங்கிலம், மொழி, சட்டம் போன்றவை என்றால் எமக்கு சேர்.பொன்.இராமநாதன், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், போன்றோரின் காலத்தில் நாங்கள் விடுதலை பெற்றிருக்க வேண்டும். மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா. மன ஒற்றுமையும், ஆற்றலும், தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும், தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரை இந்த பாதையை கொண்டு செல்வார்.

மொழியியல் ஒருவருக்கான கொடை. சட்டம் என்பது கல்வி ரீதியாக கிடைக்கின்ற ஆற்றல். ஆனால் மக்களை வழிநடத்துவதற்கு தைரியமும், இனம் ரீதியான சிந்தனையும் இருந்தால் அது ஒரு தலைமைத்துவமாக அமையும்.

எனவே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தித்த எமது கட்சியின் பொதுசபை உறுப்பினர்களிடையே  நான் இக்கட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற என்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குரிய பெரும்பாலான ஆதரவையும், சம்மதத்தையும் எனக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களின் பலத்தோடும், ஒற்றுமையோடும், நடைபெற இருக்கின்ற எமது உட்கட்சித் தேர்தலிலே நான் வெற்றி பெற்று கட்சியின் பொறுப்பை ஏற்று வழிநடாத்திச் செல்வதற்கு நான் தாயாராக இருக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிந்தனர்.

 

இமயமலை பிரகடனத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

 

அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது’ என்று குற்றஞ்சாட்டினார்.

 

இக்குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 

இந்தப் பிரகடனத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அதேபோல் இதில் எமக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.

 

உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்தப் பிரகடனமாகும்.

 

இதில் அதிகாரப்பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் மிகமுக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ‘ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு’ என்ற சொற்பதம் புத்த பிக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

 

அதேபோன்று பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

 

எனவே அடுத்தகட்டமாக இப்பிரகடனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்திறன் தங்கியுள்ளது.

 

அதேவேளை உலகத்தமிழர் பேரவை எம்முடன் நடத்திய சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் இப்பிரகடனத்தை வரவேற்று எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். இவற்றுக்கு அப்பால் எமக்கு இதில் எவ்வித தொடர்புமில்லை என்றார்.

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளமையை இன்று நாடாளுமன்றில் கவனத்திற்கு சுமந்திரன் கொண்டுவந்திருந்தார்.

அரசியலமைப்பு சபை உறுப்பினருக்க நாடா ளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

 

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் அதை சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என கூறும் அரசாங்கம் இந்த விடயத்தில் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமை குறித்து சுமந்திரன் ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளது – நாடாளுமன்றத்தில் சுமந்திரன்!

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MAசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் உரிய முறையில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பொறுப்புடையவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அப்போதைய ஜனாதிபதியாக செயற்பட்ட மகிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் அரசாங்கம் மற்றும் பொது மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதனாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்குமாறும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திறைச்சேறிக்கு கொண்டு வரும் படியும் ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

அம்பிட்டிய சுமன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – எம்.ஏ.சுமந்திரன் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

அம்பிட்டிய சுமன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென , பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பொலிஸ்மா அதிபரை கோரியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் பொலிஸ்மா அதிபருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன தேரரின் பகிரங்கமான அறிக்கைகள் ஊடகங்களில் மிக அதிக அளவில் வெளியானதாக அவர் அந்த கடிதத்தில், சுட்டிக்காட்டியுள்ளார்.

“காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

 

இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளில் இடம்பெறும் கொலைகளுக்காக எமது கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அங்கு பாரியளவில் மனித அவலங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

அது சிறிய நாடாக இருந்தாலும் நாங்கள் ஒன்றும் தெரியாதது போன்று நடு நிலையாக இருந்துவிட முடியாது. சரி பிழைகள் தொடர்பில் கூற வரவில்லை இரு தரப்பின் நியாயங்கள் , அநியாங்கள் தொடர்பில் கதைப்பதற்கான நேரமல்ல.

 

வன்முறைகளை எதிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி மனித அவலங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நீண்ட காலமாக நாங்களும் இவ்வாறான யுத்தம் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு யார் பொறுப்பாளிகள். அத்துமீறியவர்களையே நாங்கள் இனங்காண வேண்டும்.

 

முதலில் அவல யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும். நாடுகள் வன்முறைகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயல்கின்றன.

 

இந்த காலத்தில் அதற்கு இடமளிக்க முடியுமா? அதனை ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் வகித்தல் ஆகியன மூலம் தீர்வுகளை காணலாம்.

 

உலகில் பல பகுதிகளில் சண்டைகள் நடக்கின்றன. உக்ரேன் மத்திய கிழக்கு நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன. மத்திய கிழக்கில் நடக்கும் விடயங்களின் தாக்கங்களை நாங்கள் மூன்று தசாப்தங்களாக அனுபவித்துள்ளோம்.

வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் இங்கே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.

 

இங்கேயும் அரச பயங்கரவாதமே இருந்தது. எவ்வகையாக வன்முறையாக இருந்தாலும் அவை கண்டனத்திற்குரியதே. இஸ்ரேல் காஸாவை விட்டு விலக வேண்டும். எவராக இருந்தாலும் மக்கள் உயிர்களை பறிக்க எந்த உரிமையும் கிடையாது.

 

இங்கே சிலர் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றனர். அரசியல் ரீதியான பிரச்சினையே பல நாடுகளில் நடக்கின்றன. அவற்றை அரசியல் ரீதியில் தீர்க்க முடியும். இங்கேயும் அதே நிலைமையே இருக்கின்றது.

 

அரசியல் தீர்வாக இராணுவ தீர்வு அமைய முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ் கூறினார். ஆனால் இறுதியில் அவர் இராணுவ தீர்வையே முன்னெடுத்தார்.

 

எவ்வாறாயினும் இவ்வாறான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இவற்றை கண்டிக்க வேண்டும். துன்பப்படும் மக்கள் யாராக இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையுடன் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுதுமலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், இந்த கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.

இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல். நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.

நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக் கொள்ள வேண்டும்.

நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களிலே ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்.

இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.

மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.